பிரதமர் அலுவலகம்

ஒடிசா புயலை வான்வழியாகப் பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி கூறியவற்றின் தமிழாக்கம்.

Posted On: 22 MAY 2020 7:52PM by PIB Chennai

உலகம் கொரோனா வைரசில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற மிகப்பெரும் போரை ஒரு பக்கம் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.  இத்தகைய நெருக்கடியான தருணத்தில் – மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி - கடந்த இரண்டரை மாதங்களாக அனைத்துத் துறைகளும் அனைத்துக் குடிமக்களும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வந்துள்ளனர்.

இத்தகைய போராட்ட நேரத்தில், புயல் வடிவில் அதிலும் சூப்பர் புயல் வடிவில் – மற்றொரு பெரும் நெருக்கடி ஏற்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும்.  புயல் வங்கத்தை நோக்கி நகரும் போது, ஒடிசாவில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதும் கவனத்துக்குரிய விஷயமாகும்.  புயலில் இருந்து குடிமக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் ஒடிசா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.  இங்கே நிறுவனமயமாக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகளின் உதவியாலும், கிராமங்களில் உள்ள மக்களின் அறிவாலும் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.  ஒடிசாவின் குடிமக்கள், நிர்வாகம் மற்றும் ஒடிசாவின் முதலமைச்சர் திரு.நவீன் பாபு மற்றும் அவரின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய மிகப்பெரும் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது பெருமளவிலான சொத்து இழப்பு ஏற்படும்.  ஒடிசாவில் ஏற்பட்ட இழப்பானது ஒப்பீட்டளவில் மேற்கு வங்கத்தை விட குறைவு தான் என்றாலும் புயல் இந்த மாநிலத்தைக் கடந்த போது பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.  இங்கும் அத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  வீடுகள், விவசாயம், மின்சாரம், தொடர்பியல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சேதத்தை இன்று நான் முழுமையாக ஆய்வு செய்துள்ளேன்.  மாநில அரசும் அனைத்து பூர்வாங்கத் தகவல்களையும் என்னிடம் வழங்கியுள்ளது.

மதிப்பீடு செய்த பிறகு மாநில அரசிடம் இருந்து அறிக்கையானது மத்திய அரசுக்கு விரைவில் வந்து சேரும்.  மத்திய அரசுக் குழுவினரும் முடிந்த அளவு விரைவாக இங்கு வருவார்கள்.  ஒட்டுமொத்தச் சூழலையும் பரிசீலனை செய்து நீண்டகால நிவாரணம், புதுப்பிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாகத் தேவைப்படும் பணி மற்றும் உதவிகள் வழங்கப்படும்.  பணி முன்னெடுக்கப்படும் போது இந்த விஷயங்கள் அனைத்திற்கும் முன்னுரிமை தரப்படும்.

உடனடித் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, இந்திய அரசின் சார்பாக நிவாரணப் பணிகளுக்காக முன்கூட்டியே ரூ.500 கோடி வழங்க முடிவெடுத்துள்ளோம். மீதியுள்ள தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, மறுவாழ்வுக்கான முழுமையான திட்டமிடல் உடனடியாக மேற்கொள்ளப்படும். ஒடிசாவில் வளர்ச்சிக்கான பயணத்தில் மாநில அரசோடு தோளோடு தோள் நின்று மத்திய அரசு பணியாற்றுவதோடு இந்த நெருக்கடியில் இருந்து மாநிலம் மீண்டு வருவதற்குத் தேவையான உதவிகளையும் செய்யும்.

மிக்க நன்றி!



(Release ID: 1626753) Visitor Counter : 185