உள்துறை அமைச்சகம்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்கள்; இந்தியாவில் தங்க நேரிட்டு விட்ட, வெளிநாடுகளுக்கு அவசரமாக செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்களின் நடமாட்டம் குறித்து நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
24 MAY 2020 8:40PM by PIB Chennai
இந்தியாவிற்கு வெளியே தங்க நேரிட்டு விட்ட இந்திய குடிமக்கள், இந்தியாவில் தங்க நேரிட்டு விட்ட,வெளிநாடுகளுக்கு அவசர காரணங்களுக்காக செல்ல வேண்டியிருப்பவர்கள், ஆகியோருக்கான நடமாட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், நிலையான இயக்க நடைமுறைகளை (ஓ.எஸ்.பி) வெளியிட்டுள்ளது. முன்னதாக 5.5. 2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை ஒன்று இதுதொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. நில எல்லைகளின் வழியாக வந்த பயணிகளுக்கும் இந்த எஸ் ஓ பிக்கள் பொருந்தும்.
கோவிட் 19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொது முடக்க நடவடிக்கைகளையடுத்து, பயணிகளுக்கான சர்வதேசப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, ஆய்வு/ பயிற்சி, சுற்றுலா, வர்த்தகம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு வெளிநாடுகளுக்கு சென்ற பல இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிப்பதாக, தகவல்கள் வந்துள்ளன. நீண்ட காலம் வெளிநாட்டில் தங்க நேர்ந்து விட்டதால் அவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது உடனடி அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவை காரணமாக இந்தியா வர விழையும் இந்திய குடிமக்களும் உள்ளனர். இதேபோல் இந்தியாவில் தங்க நேரிட்டு விட்ட, பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களும் உள்ளனர்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களில், கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ள நிலைமையில் உள்ளவர்கள், வேலையிலிருந்து இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்/ பணியாளர்கள், விசா காலாவதியாகி விட்டது என்ற நிலையில் உள்ள குறுகியகால விசா வைத்திருப்பவர்கள், மருத்துவ அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், கருவுற்ற பெண்கள், வயதானவர்கள், குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணமடைந்ததால் இந்தியாவிற்கு வர வேண்டிய தேவையுள்ளவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இது போன்ற நிலையில் உள்ளவர்கள் அவர்கள் தங்க நேரிட்ட நாடுகளிலுள்ள இந்திய தூதரகத்தில், மத்திய வெளியுறவு விவகார அமைச்சகம் கோரியுள்ள தேவையான அனைத்து தகவல்களுடன், தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள அட்டவணையிடப்படாத வர்த்தக ரீதியிலான விமானங்கள், மத்திய வெளியுறவு விவகார அமைச்சகம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் அனுமதியுடன் இயக்கப்படும் கப்பல்கள் ஆகியவற்றின் மூலம், அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்யலாம். பயணத்திற்கான செலவை பயணிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவிட் 19 தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மத்திய வெளியுறவு விவகார அமைச்சகம், கப்பல் விமானங்கள் மூலமாக பயணிக்கும் அனைவரது புள்ளிவிவரங்களையும் அவர்கள் தொடர்பான அனைத்து தேவையான விவரங்களையும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் முன்னதாகவே பகிர்ந்துகொள்ளும். மேலும், மத்திய வெளியுறவு விவகார அமைச்சகம் மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கான மைய அதிகாரிகளை நியமிக்கும். இந்த அதிகாரிகள், அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களால் நியமிக்கப்பட்ட மைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். இந்தியாவிற்கு வருகின்ற விமானம், கப்பல் ஆகியவற்றின் அட்டவணை (நாள், இடம், நேரம் ) மத்திய வெளியுறவு விவகார அமைச்சகத்தின் ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில் இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியிடப்படும்.
பயணிகளை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உட்பட, இந்தியா வருகை தொடர்பாக மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, பயணம் செய்வதற்கு முன் பயணிகள் அனைவரும் தாங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு -- ஏழு நாட்கள் அமைப்பு ரீதியிலான தனிமைப்படுத்தப்படுதல்; அதன்பின்னர் 7 நாட்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுதல் -- ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்தியாவில் தங்க நேரிட்டு விட்ட, வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் இந்த காரணங்களுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள முகமைகள் மூலமும் விண்ணப்பிக்கலாம். மத்திய உள்துறை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் குறிப்பிட்டுள்ளபடி புறப்படும் இடம், சென்று சேரவேண்டிய இடம் உட்பட அனைத்து தேவையான விவரங்களும் அளிக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள அட்டவணையிடப்படாத வர்த்தக விமானங்கள் மூலமே பயணிக்க முடியும். பயணத்திற்கு ஆகும் செலவை பயணிகளே ஏற்க வேண்டும்.
சென்று சேர வேண்டிய நாடுகளின் குடிமக்கள்; அந்த நாட்டில் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் இருப்பதற்கான விசா உள்ளவர்கள்; கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது OCI கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ அவசர சிகிச்சை அல்லது குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு ஆகியவை காரணமாக செல்ல விரும்புவர்களுக்கு, ஆறுமாத கால விசா வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பயணிகளின் பயணச்சீட்டை உறுதிப்படுத்துவதற்கு முன், விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தப் பயணிகள் அந்தந்த நாடுகளில் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை உறுதிசெய்து கொள்ளும்.
இந்திய கப்பல்களில் பணியாற்றுபவர்கள், வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள விழைபவர்கள் ஆகியோர், இந்தியாவிலிருந்து புறப்படுகின்ற வந்தே பாரத் மிஷனின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் அல்லது அவர்களின் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விமானங்கள் - அட்டவணையிடப்படாத வர்த்தக விமானங்கள் மூலம் பயணிக்கலாம். ஆனால் இதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் இருக்க வேண்டும்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் அனைத்துப் பயணிகளும் சுகாதார விதிமுறைகளின்படி, பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதை விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்யும். கோவிட் 19 நோய் அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். முகக் கவசங்கள் அணிதல், சுற்றுச்சூழல் தூய்மை, சுவாசத் தூய்மை, கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்ற விதிமுறைகளை விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.
எஸ் ஓ பி ஆவணம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளைக் காண இங்கே சொடுக்குக
Click here to see the SOP Document and Health Ministry Guidelines
(Release ID: 1626720)
Visitor Counter : 383