தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடம் விளம்பரங்களை ஒலிபரப்பு செய்ய அனுமதிப்பதற்கான கலந்தாலோசனைகள் நடைபெறுகின்றன: திரு பிரகாஷ் ஜவடேகர்.
சமுதாய வானொலிகளில் செய்தி அறிக்கைகள் வாசிக்க அனுமதிக்கும் யோசனை பரிசீலிக்கப்படும்; சமுதாய வானொலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரைவில் திட்டம்: திரு ஜவடேகர்.
Posted On:
22 MAY 2020 7:44PM by PIB Chennai
சமுதாய வானொலிகளில் இப்போது ஒரு மணி நேரத்துக்கு 7 நிமிடங்களுக்கு விளம்பரங்களுக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதை. தொலைக்காட்சி சேனல்களுக்கு இணையாக 12 நிமிடங்களாக உயர்த்துவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். சமுதாய வானொலி நேயர்கள் அனைவர் மத்தியிலும் அமைச்சர் உரையாற்றினார். அனைத்து வானொலிகளிலும் ஒரே நேரத்தில் அஞ்சல் ஒலிபரப்பு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியாக இது இருந்தது. இன்று இரவு 7 மணி மற்றும் 7.30 மணிக்கு இரண்டு சம நேர அளவில் இந்த ஒலிபரப்பு இடம் பெற்றது.
சமுதாய வானொலி அமைக்கும்போது அதற்கான செலவில் 75 சதவீதத்தை அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது என்றும், அதில் பெரும்பகுதி செலவினங்கள் ஈடு செய்யப்படும் நிலையில், தினசரி செயல்பாடுகளுக்கான செலவுகளை வானொலி நிலையங்களே ஏற்கும் என்று அவர் தெரிவித்தார். இப்போது சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்துக்கு 7 நிமிடங்கள் வரை விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொலைக்காட்சி சேனல்களில் இது 12 நிமிடங்களாக இருக்கிறது. அனைத்து வானொலி நிலையங்களுக்கும் அதே அளவுக்கு நேரத்தை விளம்பரத்துக்குக் கொடுப்பதன் மூலம், அந்த வானொலிகள் நிதிக்கு எதிர்பார்க்கும் அவசியம் இல்லாமல் போகும் என்றும், உள்ளூர் பகுதி விளம்பரங்களை சமுதாய வானொலிகளில் அதிக அளவுக்கு ஒலிபரப்பு செய்ய முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சமுதாய வானொலி என்பது தன்னளவில் ஒரு சமுதாயமாகவே இருந்து வருகிறது. `மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்கள்' என அவற்றைக் குறிப்பிட்ட அமைச்சர், தினமும் லட்சக்கணக்கான மக்களை அந்த வானொலிகள் சென்றடைவதாகத் தெரிவித்தார். அதுபோன்ற வானொலி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைபிடிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்ட அவர், மற்ற நோய்களை விரட்டியதைப் போல இந்த வைரசையும் நம்மால் விரட்ட முடியும் என்று குறிப்பிட்டார். இருந்தபோதிலும் நமக்கு நான்கு படிநிலைகள் கொண்ட ஒரு புதிய நடைமுறை உள்ளது; அதாவது முடிந்த வரையில் வீட்டிலேயே இருத்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவச உறை அணிதல், சமூக இடைவெளி என்ற இந்த நான்கு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சமூக இடைவெளி மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகள் இடையிலான ஊசலாட்டம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், ``ஜான் பீ ஜஹான் பீ'' என்ற மந்திரத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், பசுமை மண்டலங்களில் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடங்கி வருவதாகத் தெரிவித்தார்.
சமுதாய வானொலிகள் செய்தி அறிக்கைகளை ஒலிபரப்புவது பற்றிய முக்கிய கோரிக்கை குறித்து அமைச்சர் பேசினார். பண்பலை அலைவரிசைகளைப் போல, சமுதாய வானொலிகளிலும் செய்தி அறிக்கைகளுக்கு அனுமதிப்பது பற்றி பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். இந்த வானொலிகள் உள்ளூர்த் தகவல்கள் மூலம் போலிச் செய்திகள் பரவும் தொல்லையைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவற்றை அகில இந்திய வானொலியுடனும் பகிர்ந்து கொண்டால், உண்மைத் தகவல்கள் நிறைய பேருக்கு சென்றடையும் என்றும் குறிப்பிட்டார். பத்திரிகைத் தகவல் மையத்தில் உண்மை அறியும் பிரிவை தமது அமைச்சகம் உருவாக்கியிருப்பதைக் குறிப்பிட்ட அவர், அதில் சமுதாய வானொலிகளும் தங்களுக்கான பங்களிப்பை செய்யலாம் என்றார்.
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்த தற்சார்பு இந்தியா நிவாரணத் திட்டத் தொகுப்புகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், விவசாயம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்வதற்கான விரிவான தொகுப்புகளாக அவை உள்ளதாகத் தெரிவித்தார். இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த தொகுப்புகள் அமைந்துள்ளன என்றார் அவர். இந்தத் திட்டங்களின் தொகுப்பிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், இந்த ஊக்கத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அமைச்சர் ஜவடேகர் கூறினார்.
பின்னணி :
- பொது வானொலியுடன் (அகில இந்திய வானொலி) மற்றும் தனியார் வானொலி ஒலிபரப்புகளுடன் (பண்பலை -FM) மூன்றாவது நிலையிலான வானொலி ஒலிபரப்பாக சமுதாய வானொலி இருக்கிறது. இது குறைந்த சக்தி கொண்ட பண்பலை வானொலி நிலையமாக, அந்தந்தப் பகுதி விஷயங்களில் கவனம் செலுத்துவதாக, சமுதாயத்திற்குச் சொந்தமானதாக, அவர்களால் நிர்வகிக்கப்படுவதாக, அந்த சமுதாயத்தின் நன்மைக்காக 10 - 15 கிலோ மீட்டர் வட்டத்துக்குள் செயல்படுவதாக உள்ளன.
- இந்தியாவில் சமுதாய வானொலிகள் 2002 ஆம் ஆண்டில் சமுதாய வானொலிகளுக்கான கொள்கை அறிவிக்கை செய்யப்பட்ட பிறகு தொடங்கப்பட்டன. கல்வி நிலையங்கள் சமுதாய வானொலிகளைத் தொடங்குவதற்கு அந்தக் கொள்கையில் அனுமதிக்கப்பட்டது. 2006இல் அந்தக் கொள்கை விரிவாக்கம் செய்யப்பட்டு, தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், வேளாண் அறிவியல் மைய அமைப்புகள் மற்றும், லாப நோக்கற்ற பிற அமைப்புகள் இந்தியாவில் சமுதாய வானொலிகள் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இப்போது இந்தியாவில் 290 சமுதாய வானொலி நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஊடக வாய்ப்புகள் அதிகம் இல்லாத பகுதிகளில், இந்த வானொலி நிலையங்கள் நாட்டில் 90 மில்லியன் மக்களைச் சென்றடைகின்றன. இந்த வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் அந்தப் பகுதி மொழியிலும், அந்தப் பகுதி பேச்சு நடையிலும் இருக்கும் என்பதால், அந்த சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சமுதாய வானொலிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ``இந்தியாவில் சமுதாய வானொலிக்கு ஆதரவு அளிக்கும் இயக்கம்'' என்ற பெயரில் ஒரு திட்டத்தை ரூ.25 கோடி ஒதுக்கீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டுக்கு ரூ.4.50 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
(Release ID: 1626198)
Visitor Counter : 1929
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam