சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில், கோவிட்-19 நோய்த் தாக்குதல் மேலாண்மையில் நோய்க் கட்டுப்பாடு மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிப்பதற்கான ஆயத்தநிலை குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் ஆய்வு.

Posted On: 12 MAY 2020 5:13PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு கிரிஷ் சந்திர மர்மு, லடாக் துணை நிலை ஆளுநர் திரு ஆர்.கே. மாத்தூர், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடன் உயர்நிலை ஆய்வு நடத்தினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார். பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களின் ஆட்சியாளர்களுடன், கோவிட்-19 மேலாண்மைக்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருவதன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2020 மே 12ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 70,756 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 22,455 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், 2,2,93 பேர் இறந்திருப்பதாகவும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு நோய்த் தாக்குதல் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும், 1538 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 14 நாட்களில், நோய்த் தாக்குதல் இரட்டிப்பாகும் காலம் 10.9 நாட்களாக இருந்தது என்றும், கடந்த 3 நாட்களில் இது 12.2 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மரண விகிதம் 3.2 சதவீதமாகவும், குணம் அடைபவர்கள் விகிதம் 31.74 சதவீதமாகவும் உள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய நிலவரத்தின்படி, சிகிச்சையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 2.37 சதவீதம் பேர் ஐ.சி.யூ. சிகிச்சையிலும், 0.41 சதவீதம் பேர் வென்டிலேட்டர்கள் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.82 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் கோவிட் நோய் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைத் திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். 347 அரசு ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் 1 இலட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுவரையில் 17, 62,840  மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 86,191  சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 நோய்த் தாக்கம் மற்றும் மேலாண்மை குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்ட பிறகு பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், ``குடிபெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவது அதிகரித்துள்ள நிலையில், திரும்பி வரும் அனைவரையும் சரியாகக் கண்காணித்தல், தொடர்புத் தடமறிதல், போதிய மருத்துவப் பரிசோதனை மற்றும் உரிய காலத்தில் சிகிச்சை அளிப்பதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களுக்கும் இவற்றைச் செய்ய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். வந்து இறங்கும் இடத்தில் மருத்துவப் பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்தி வைத்தல், சிகிச்சை அளித்தலுக்கு செய்துள்ள ஏற்பாடுகளைப் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் தெரிவித்துள்ளன. தொடர்புத் தடமறிதலை சிறப்பாகச் செய்யவும், உரிய மருத்துவ ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறு அவர் கூறினார்.

பாதிப்புள்ள மற்றும் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், தீவிர சுவாச மண்டலத் தொற்று (சாரி) / சளி போன்ற உடல்நலக் குறைபாடு (ஐ.எல்.ஐ.) உள்ளவர்களைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார். தங்கள் பகுதியில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் அவற்றின் உதவியை நாடுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அவர் யோசனை தெரிவித்தார்.

தீவிர சுவாச மண்டலத் தொற்று (சாரி) / சளி போன்ற உடல்நலக் குறைபாடு (ஐ.எல்.ஐ.) உள்ளவர்களைக் கண்காணிப்பதில் ஆற்றியுள்ள பணிகளை அமைச்சர் பாராட்டினார். உத்தரகாண்ட்டில் தொடர்புத் தடமறிதல் மற்றும் கண்காணிப்புக்கு ஐ.டி.எஸ்.பி. மூலம் மேற்கொண்ட பணிகளையும் அவர் பாராட்டினார்.

கோவிட் அல்லாத அத்தியாவசிய சேவைகளை அளிப்பதற்கு, தொலைதூரப் பகுதிகளுக்காக லடாக் யூனியன் பிரதேசத்தில் நடமாடும் மருத்துவ வேன்களின் சேவையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

லடாக்கில் புகையிலை பயன்பாடு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



(Release ID: 1623319) Visitor Counter : 173