உள்துறை அமைச்சகம்

மருத்துவ, துணை மருத்துவ அலுவலர்கள் இடையூறு இல்லாமல் பயணிக்கும் ஏற்பாடுகளையும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் திறக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்;

கோவிட் மற்றும் கோவிட் அல்லாத அவசர சிகிச்சை நோயாளிகளை கையாள்வதற்கான அத்தியாவசிய வசதிகளை செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

Posted On: 11 MAY 2020 12:10PM by PIB Chennai

மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் 2020 மே 10ஆம் தேதி நடைபெற்ற காணொளி மூலமான கூட்டத்தில், சில மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மருத்துவ மற்றும் துணை மருத்துவ அலுவலர்கள் பயணத்துக்குக் கட்டுப்பாடுகள் இருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து மருத்துவ அலுவலர்களும் இடையூறு இல்லாமல் பயணிக்க உதவி செய்ய வேண்டியது, மக்களின் உயிரைக் காக்கும் பொது சுகாதாரச் சேவையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான தேவையாக உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவ மற்றும் துணை மருத்துவ அலுவலர்கள் பயணத்துக்கு ஏதும் கட்டுப்பாடுகள் விதித்தால், கோவிட் மற்றும் கோவிட் அல்லாத மருத்துவச் சேவைகள் அளிக்கும் பணி பாதிக்கப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவ அலுவலர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவ அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் பயணத்துக்கும், ஆம்புலன்ஸ்கள் பயணத்துக்கும் தடங்கல்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கோவிட் மற்றும் கோவிட் அல்லாத மருத்துவச் சேவைகள் அளிக்கும் பணி பாதிப்பின்றி தொடர இவை உதவி செய்யும். மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினரும், வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் தங்களின் அனைத்து மருத்துவ அலுவலர்கள், பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. கோவிட் மற்றும் கோவிட் அல்லாத அவசர தேவைக்கான நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க இவை உதவியாக இருக்கும் என்பதால், மற்ற மருத்துவமனைகளின் சுமை குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ அலுவலர்கள் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ கடித விவரத்தைக் காண பின்வரும் இணையதள சுட்டியில் கிளிக் செய்யவும்:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/11.5.2020%20Hs%20to%20CS%20reg.%20Movement%20of%20Medical%20Professionals.pdf



(Release ID: 1622903) Visitor Counter : 187