சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 08 MAY 2020 5:55PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், தமிழகம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி மூலம் இன்று கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிப்பதற்கான ஆயத்த நிலைகள் பற்றி அப்போது அவர் ஆய்வு நடத்தினார். SARI / ILI பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தல், மாதிரிகளைப் பரிசோதனை செய்தலை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறிய அவர், வேறு மாநிலங்களில் இருந்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தல் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிளாசிட் என்ற பன்முக மைய ஆய்வகப் பரிசோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) தொடங்கியுள்ளது. கோவிட் - 19 தொடர்பாக மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைக் கண்டறிவதற்காக'' இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 தேசிய நன்னெறிக் குழு (கோனெக்) ஏப்ரல் 29இல் அனுமதி அளித்தது. இந்த பிளாசிட் ஆய்வகப் பரிசோதனை நடத்த 21 நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, ராஜஸ்தான், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் தலா 2, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, சண்டீகரில் தலா 1 மருத்துவமனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

216 மாவட்டங்களில் இதுவரை யாருக்கும் கோவிட் - 19 நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 21 நாட்களில் 29 மாவட்டங்களில், யாருக்கும் புதிதாக நோய்த் தாக்குதல் கண்டறியப்படவில்லை. அதேபோல கடந்த 14 நாட்களில் 36 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 7 நாட்களில் 46 மாவட்டங்களில் யாருக்கும் கோவிட் - 19 பாதிப்பு கண்டறியப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், நோய் பாதித்தவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், நோய் தாக்கியதாக சந்தேகம் ஏற்பட்டவர்கள் அல்லது நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டவர்களுக்கு ஹோட்டல்கள், அடுக்குமாடி வளாகங்கள், விடுதிகளில் தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பகுதிக்கான வசதிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கூடுதல் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. வழிகாட்டுதல்கள் குறித்த மேலும் விவரங்களை பின்வரும் இணையதள சுட்டியில் காணலாம்:

https://www.mohfw.gov.in/pdf/Additionalguidelinesforquarantineofreturneesfromabroadcontactsisolationofsuspectorconfirmedcaseinprivatefacilities.pdf

 

இதுவரையில், நோய் தாக்கியவர்களில் 16,540 பேர் குணம் பெற்றுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1273 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 29.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர். இதுவரையில் 56,342 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3390 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3.2 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை யும், 4.7 சதவீதம் பேருக்கு அவசர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 1.1 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


(Release ID: 1622211) Visitor Counter : 263