சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 05 MAY 2020 5:44PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்களின்  14வது உயர்நிலைக் கூட்டத்தில் நோய்க் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது. முழு உடல் கவச உடைகள், முகக் கவச உறைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் இதர அவசிய சாதனங்களின் தேவை மற்றும் கையிருப்பு நிலவரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆரோக்கிய சேது செயலி எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை அலுவலர்கள் முழு உடல் கவச உடைகளை (PPE) எந்த அளவுக்கு சரியான முறையில், தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கூடுதல் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கோவிட் பாதிப்பு இல்லாதவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சை அளிக்கப்படும் பகுதிகளில் இந்த முழு உடல் கவச உடைகளைப் பயன்படுத்துவது குறித்தும் அதில் வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன. முழு உடல் கவச உடைகளை தேவைக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து 2020 மார்ச் 24இல் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

புறநோயாளிகள் பகுதி, டாக்டர்களின் அறைகள் உள்ள பகுதி, மயக்க மருந்து தருதலுக்கு முந்தைய நிலையிலான பரிசோதனைப் பகுதி, உள்நோயாளிகள் வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை போன்ற வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நிலையிலான முழு உடல் கவச உடைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் முழு விவரங்களையும் பின்வரும் இணையதளச் சுட்டியில் காணலாம்.

https://www.mohfw.gov.in/pdf/AdditionalguidelinesonrationaluseofPersonalProtectiveEquipmentsettingapproachforHealthfunctionariesworkinginnonCOVIDareas.pdf

 

 

அத்தியாவசியம் அல்லாத சுகாதார சேவைகள் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2020 ஏப்ரல் 14ல் ஏற்கெனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசிகள் போடுதல், மகப்பேறு - குழந்தை ஆரோக்கிய சேவைகள், நீரிழிவு, புற்றுநோய், டயாலசிஸ், காசநோய் போன்ற நோயாளிகளுக்கான சிகிச்சைகள், ரத்த தான சேவைகள் ஆகியவை அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்திட வேண்டும். கோவிட் அல்லாத தனியார் மருத்துவமனைகளில், பல்வேறு மண்டலங்களுக்கான விதிமுறை தளர்வுகளுக்கு ஏற்ப சிகிச்சைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுவரை நோய் பாதிப்பில் இருந்து 12,726 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 27.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரையில் 46,433 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,900 பேருக்கு புதியாக கோவிட் தாக்குதல் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து கோவிட் பாதிப்பால் 72 மரணங்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்து, இதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1373 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்ச எண்ணிக்கையிலான பாதிப்பு மற்றும் மரணங்கள் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ளன. தொடர்புகள் தடமறிதல், நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை செம்மையாக அமல்படுத்துமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


(Release ID: 1621263) Visitor Counter : 226