பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 காரணமாக தற்போது உருவாகி உள்ள சூழலின் பின்னணியில் வன விளைபொருள்களைச் சேகரிக்கும் பழங்குடியினர் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு விரைவாக எடுத்து வருகிறது.

Posted On: 04 MAY 2020 1:45PM by PIB Chennai

பழங்குடியினக் கைவினைக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத நெருக்கடியின் பின்னணியில், வன விளைபொருள்களைச் சேகரிப்பவர்களுக்கும், கைவினைத் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு விரைவாக எடுத்து வருகிறது. “பழங்குடியின பொருள்கள் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான நிறுவனமயப்பட்ட ஆதரவு” என்ற திட்டத்தின் கீழ் மரத்துண்டு அல்லாத வன விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை பழங்குடியின அமைச்சகம் ஏற்கனவே அதிகரித்துள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் பழங்குடியின உறவுகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) சுமார் 10 லட்சம் பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் இணைந்துள்ளது.  கடந்த 30 நாட்களாக, நாடு தழுவிய ஊரடங்கினால் பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களின் அனைத்து வர்த்தக நடவடிக்கைளும் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இவர்கள் நிச்சயமற்ற நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களிடம் தற்போது அதிக அளவில் கைவினைப் பொருள்கள் இருப்பில் இருந்தாலும் விற்பனையோ மிக சிறிய அளவுதான் உள்ளது. ஏன் விற்பனையே இல்லை என்றுகூட சொல்லலாம்.  தற்போது பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களின் ஜவுளி, பரிசுப்பொருள், வகை பிரிக்க இயலாத கலைப்பொருள்கள், வனதான இயற்கைப் பொருள்கள், உலோக நகைகள், பழங்குடியின ஓவியங்கள், மண்பாண்டங்கள், பிரம்பு, மூங்கில் பொருள்கள் என பலவகைப்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன.

மேலே சொல்லியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பழங்குடியின சமுதாயத்தினருக்கு அவசர உதவியாக கீழ்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன:

  • தற்போதைய ஊரடங்கால் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களிடம் இருந்து அவர்களிடம் இருப்பில் உள்ள கலைப்பொருள்களை வாங்குவதற்கு பழங்குடியின உறவுகள் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.  இதனால் பழங்குடியின குடும்பங்கள் நிவாரணம் பெறும்.
  • பழங்குடியினக் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஆர்ட ஆஃப் லிவிங் அறக்கட்டளையுடன் ட்ரைஃபெட் இணைந்துள்ளது.  அவர்களது #iStandWithHumanity முகாமில் பழங்குடியின குடும்பங்களுக்கும் உதவி செய்யும் செயல் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினக் குடும்பங்களுக்கு ரூ.1000 மதிப்பிலான ரேஷன் பொருள்களைக் (தனி நபர் இடைவெளி நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும்) கொள்முதல் செய்து விநியோகித்தல் இதில் அடங்கும்.
  • பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களுக்கு குறைவான வட்டியுடன் கடன் வழங்குவதற்கு நிதி நிறுவனங்களுடன் ட்ரைஃபெட் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.  தங்களது கையிருப்பில் உள்ள கைவினைப் பொருள்களை ஈடாக வைத்து சுழற்சி நிதியாக இந்தக் கடனை பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களுக்கு பெற இது உதவும்.
  • பழங்குடியின கைவினைத் தொழிலாளர்களும், வனவிளைபொருள் சேகரிப்போரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ட்ரைஃபெட் ஒரு மில்லியன் முகக்கவசங்கள், சோப்புகள், கையுறைகளை வழங்கவும் பழங்குடியினப் பயனாளிகளுக்கு 20,000 தனிநபர் முழு உடல்கவசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


(Release ID: 1620951) Visitor Counter : 178