ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட்-19 ஊரடங்கின் போது ஏப்ரல் 2020இல் மட்டும் மக்கள் மருந்தகங்கள் சாதனை அளவாக ரூ.52 கோடி அளவிற்கு விற்பனை வருவாயை ஈட்டியுள்ளன.

Posted On: 03 MAY 2020 1:48PM by PIB Chennai

கோவிட்-19 ஊரடங்கு காலகட்டத்தில் கொள்முதல் செய்தல் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் பல பிரச்சினைகள் இருந்த போதிலும், பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகங்கள் (PMBJAK) ஏப்ரல் 2020இல் மட்டும் இதுவரை இல்லாத அளவாக ரூ.52 கோடி அளவிற்கு விற்பனை வருவாய் ஈட்டி சாதனை புரிந்துள்ளன.  மார்ச் 2020இல் இதன் விற்பனை வருவாய் ரூ.42 கோடி ஆகும். ஆனால் சென்ற ஏப்ரல் 2019இல் விற்பனை வருவாய் ரூ.17 கோடி மட்டுமே ஆகும்.

நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகபட்சமானதாக இருக்கின்றன.  இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மக்கள் மருந்தகங்கள் ஏப்ரல் 2020இல் பொதுமக்களுக்குத் தரமான மற்றும் அதே சமயம் குறைந்த விலையிலான மருந்துகளை சாதனை அளவாக ரூ.52 கோடிக்கு விற்றுள்ளன.  மக்கள் மருந்தகத்தில் மருந்துகளின் விலை வழக்கமான சந்தை விலையை விடவும் 50 முதல் 90 சதவிகிதம் வரை விலை குறைவு என்பதால் இந்த விற்பனை மூலம் சாதாரண குடிமக்கள் தோராயமாக ரூ.300 கோடிக்கு சேமிக்க வழி ஏற்பட்டு உள்ளது.

இந்திய அரசின் மத்திய வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு.டி.வி.சதானந்த கௌடா மற்றும் வேதிப்பொருள்கள் மற்றும் உரங்கள் இணையமைச்சர் திரு மனுஷ்க் மாண்டவியா இருவரும், மக்கள் மருந்தகங்களை நடத்துபவர்கள் சாதனை அளவாக விற்பனை வருவாயை அதிகப்படுத்தியதற்காக பாராட்டு தெரிவித்துள்ளனர்.  நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல பிரச்சினையான சூழல்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக ஓய்வின்றி மருந்து விநியோகத்தில் ஈடுபட்டமைக்காக அமைச்சர்கள் இவர்களை பாராட்டினர்.

இந்தியாவில் ஃபார்மா பொதுத்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அலுவலக தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமார்சிங் BPPL, ”ஜன்ஔஷதி சுகம் கைபேசி செயலி”யை உருவாக்கி உள்ளதாகவும் இந்தச் செயலி மக்களுக்கு அவர்களின் அருகில் உள்ள மக்கள் மருந்தகத்தைக் கண்டுபிடிக்கவும் மருந்தகத்தில் கிடைக்கக் கூடிய குறைவான செலவில் பொதுப்பெயர் மருந்துப் பொருள்களை (Generic-Medicines) விலையுடன் தெரிந்து கொள்ளவும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.  இந்தச் செயலியை 3,25,000க்கும் அதிகமான நபர்கள் பயன்படுத்துகின்றனர்.  இந்தச் செயலியில் பயனாளர் பயன்படுத்துவதற்கு எளிதான பல வாய்ப்புகள் உள்ளன.  கூகுள் மேப் மூலம் மக்கள் மருந்தகம் எங்கிருக்கிறது எனத் தடம் அறிதல், குறைவான செலவில் பொதுப்பெயர் மருந்துப்பொருள்களை தேடிப்பார்த்தல், பொதுப்பெயர் மருந்து மற்றும் பிராண்ட் பெயர் மருந்து இரண்டின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், மக்கள் மருந்தகத்தில் மருந்து வாங்கினால் கிடைக்கக் கூடிய மொத்த சேமிப்பு எவ்வளவு எனத் தெரிந்து கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளை செயலியின் உதவியால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் செயலி ஆன்ராய்ட் மற்றும் ஐபோன் இயங்கு தளங்களில் கிடைக்கின்றது

நாடு முழுவதும் 726 மாவட்டங்களில் 6300 பிரதம மந்திரி மக்கள் மருந்தகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. 



(Release ID: 1620655) Visitor Counter : 186