பிரதமர் அலுவலகம்

கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

Posted On: 01 MAY 2020 9:45PM by PIB Chennai

கல்வித் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், தேசியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு நடத்தினார். கல்வித் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் தரப்பட்டது. கற்றல் திறனை மேம்படுத்துதல், கல்விக்கான இணையதளம், ஆன்லைன் வகுப்புகள், பிரத்யேகமான சேனல்களில் வகுப்புகளுக்கு ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு போன்ற வகைகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் ஆகியவை குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்க வகை செய்தல், ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், பல மொழிகளில் கவனம் செலுத்தும் வகையில் தேசிய அளவிலான பாடத் திட்டங்கள் அமல் செய்தல், 21 ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான தொழில் திறன்களை வளர்த்தல், விளையாட்டு, கலை, சுற்றுச்சூழல் விஷயங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிலையில் பல்வேறு வழிமுறைகளில் தொழில்நுட்ப செயல்பாடுகளை ஊக்குவித்தல் பற்றியும் பேசப்பட்டது. ஆன்லைன் முறையில் கற்பித்தல், தொலைக்காட்சி சேனல்கள், வானொலி, மூலமான கல்வி ஆகியவை பற்றியும் வலியுறுத்தப்பட்டது. உலக அளவிலான தரத்துக்கு இணையாக இருக்கும் வகையில் இந்தியாவின் கல்வி முறையை மாற்றி அமைக்கும் வகையில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்தும், பங்கேற்புடன் கூடியதாக, பயன்தரக் கூடியதாக, இந்திய கலாச்சாரம் மற்றும் மாண்புகளை வலியுறுத்துவதாக புதிய சீர்திருத்தங்கள் அமைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கவனித்தல் மற்றும் கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமகாலத்தைய கற்பித்தல் கலைகளை ஏற்றுக் கொள்ளுதல், இந்தியாவின் பன்முகக் கலாச்சார மற்றும் மொழி வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவை குறித்தும், முன்கூட்டியே தொழிற்கல்வி கற்பதில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எல்லோருக்கும் தரமான கல்விக்கான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்து `அறிவுத் திறனில் உலக அளவில் வல்லமை மிக்க' இந்தியாவை உருவாக்குவதற்காக, துடிப்பான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் வகையில் கல்வித் துறை சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த அனைத்து இலக்குகளையும் எட்டுவதற்கும், செம்மையான கல்வி நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், செயற்கைப் புலனறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பயன்பாடுகள் ஊக்குவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

*****


(Release ID: 1620373) Visitor Counter : 222