பிரதமர் அலுவலகம்

நிலக்கரி, சுரங்கத் துறை மேம்பாடு: பிரதமர் ஆலோசனை

Posted On: 30 APR 2020 8:52PM by PIB Chennai

‘கோவிட் 19’ தொற்று பரவியுள்ள சூழ்நிலையில், சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறையில் சாதகமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி விரிவான விவாதத்தை மேற்கொண்டார். உள்நாட்டில் ஏராளமான கனிம வளங்களை எளிதில் எடுப்பதை உறுதி செய்வது, அதை அதிக அளவில் கண்டறிவது, முதலீடுகளை ஈர்ப்பது, நவீன தொழில்நுட்பங்களைக் கையாள்வது, வெளிப்படையான நடைமுறையின் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடுதலான பகுதிகளில் ஏலம் விடுவது, அத்தகைய ஏல நடைமுறையில் பரவலா பங்களிப்பை ஊக்குவிப்பது, கனிம வள உற்பத்தியை அதிகரிப்பது, சுரங்கத்துக்கான செலவையும் போக்குவரத்துச் செலவையும் குறைப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஏல நடைமுறையில் உள்ள சிக்கல்கள், திறமையான ஏற்பாடுகள், கனிமம் கண்டறிவதில், சுரங்கத்தில் தனியாரின் பங்களிப்பு, அரசுத் துறையை மேலும் திறனுள்ளதாக்குதல், கனிம மேம்பாட்டு நிதியை  பயன்படுத்தி சமூக செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கனிம வளங்களைத் தோண்டியெடுப்பதற்கான கட்டுமானத்தை மேம்படுத்துதல், உள்நாட்டிலேயே வளங்களை விநியோகிப்பதற்காகக் கடல்வழியைப் பயன்படுத்துவது ஆகிய பல்வேறு விஷயங்கள் இந்த விவாதத்தில் பரிசீலிக்கப்பட்டன.

நிலக்கரி வளங்களைக் கொண்டு செல்வதற்காக திறமையான சூழலுக்கு உகந்த வழிகள் குறித்தும் பேசப்பட்டது. சுரங்கத்திலிருந்து வளங்களை ரயில்களில் ஏற்றுவது,  கொண்டு செல்வது, நிலக்கரியிலிருந்து திரவ எரிபொருள், எரிவாயு தயாரித்தல், நிலக்கரி உள்ள பகுதியில் மீதேன் கண்டறிதல் ஆகிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

வேலைவாய்ப்பில் சுரங்கத் துறையின் பங்களிப்பையும் அதன் மேம்பாடு குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆய்வு செய்தார். கனிம வள உற்பத்தி, அதைப் பதப்படுத்துதல் ஆகியவற்றில் நாடு தற்சார்பு நிலையை எய்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். சர்வேதச தரத்தில் நமது கனிம வளத் துறை குறிப்பிடத் தக்க இடத்தை அடைய வேண்டும் என்றும் அதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பத்தைக் கையாளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இத்துறையில் அனுமதி பெறுவதற்கு ஆகும் கால தாமதத்தைக் குறைக்கும்படியும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, தனியார் பங்களிப்பை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

அனல்மின் தேவைக்கான நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாக நடப்பு ஆண்டில் போதிய நிலக்கரி கையிருப்பு நம் வசம் இருப்பதால் அதில் கவனம் செலுத்தும்படியும் அவர் அறிவுறுத்தினார்.



(Release ID: 1620012) Visitor Counter : 165