பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான உத்திகள் பற்றி விவாதிக்க பிரதமர் விரிவான ஆலோசனை
Posted On:
30 APR 2020 4:59PM by PIB Chennai
இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கான உத்திகள் குறித்து விவாதிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று விரிவான ஆலைசனைக் கூட்டம் நடத்தினார். கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு சூழ்நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இப்போதுள்ள தொழிற்பேட்டை நிலங்கள், வளாகங்களில், வந்தவுடன் தொழில் தொடங்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், அதற்குத் தேவையான நிதி உதவிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த வகையில் ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
வெளிநாட்டு முதலீடுகளை வேகமாக இந்தியாவுக்குக் கொண்டு வருவது மற்றும் உள்நாட்டுத் தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கான உத்திகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு வழிகாட்டுவது குறித்தும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த முயற்சிகள் தடையின்றித் தொடர வேண்டும் என்றும், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வளர்ச்சியின் வேகத்துக்குத் தடையாக இருக்கும் அம்சங்களை குறித்த கால வரம்புக்குள் நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வணிகம், தொழில் துறை அமைச்சர், நிதித்துறை இணை அமைச்சர் ஆகியோரும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(Release ID: 1619720)
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam