குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

30 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை ரெயில்வே விநியோகித்துள்ளது

Posted On: 30 APR 2020 3:56PM by PIB Chennai

கொவிட்-19 முடக்க நிலை காலத்தில், இந்திய ரெயில்வே ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் இது வரையிலும் 30 லட்சத்திற்கும் கூடுதலான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.

வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், ஹுப்ளி, மத்திய மும்பை, அகமதாபாத், பூசாவல், ஹௌரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயாள் உபாத்யாய நகர், பாலசோர், விஜயவாடா, குர்தா, காட்பாடி, திருச்சிராப்பள்ளி, தன்பத், கௌகாத்தி, சமஸ்திபூர், பிரயாக்ராஜ், இட்டாசி, விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா, ஹாஜிப்பூர், ராய்பூர் மற்றும் டாட்டாநகர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ரயில்வேயின் உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (Indian Railways Catering and Tourism Corporation-IRCTC), சமையல் கூடங்கள், ரயில்வே காவல் படை(RPF) இதர அரசுத் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, 30 லட்சம் உணவுப்பொட்டலங்கள், ஏப்ரல் 30 வரை வழங்கப்பட்டுள்ளன.

 

ஐ.ஆர்.சி.டி.சி சுமார் 17.17 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்கி உள்ளது. சுமார் 5.18 லட்சம் உணவுப் பொட்டலங்களை ஆர்.பி.எஃப் தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வழங்கி உள்ளது. சுமார் 2.53 லட்சம் உணவுப் பொட்டலங்களை ரயில்வேயின் வர்த்தகத்துறையும், இதர துறைகளும் அளித்துள்ளன. 5.60 லட்சம் உணவுப்பொட்டலங்களை ரெயில்வே நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன.

ஐ.ஆர்.சி.டி.சி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொந்த சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுப்பொட்டலங்களை தேவையுள்ளவர்களுக்கு வழங்கியதில் ரெயில்வே பாதுகாப்புப்படை (RPF) மிக முக்கியமான பங்கினை ஆற்றியது. 28.03.2020 அன்று 74 இடங்களில் இருந்த 5419 நபர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கியதில் இருந்து இந்தப் பணி தொடங்கியது. தினந்தோறும் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 300 இடங்களில் தினமும் 50,000 நபர்களுக்கு வீதம் ஆர்.பி.எஃப் உணவு வழங்கி வருகிறது.



(Release ID: 1619718) Visitor Counter : 239