குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்த வலைதளத்தை திரு. கட்கரி தொடங்கி வைத்தார்

Posted On: 30 APR 2020 3:56PM by PIB Chennai

மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு,குறு,நடுத்தரத்தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, நாக்பூரில் இருந்து காணொளி மூலம் வங்கித் திட்டங்கள், யோசனைகள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வலைதளத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், சிறு,குறு,  மற்றும் நடுத்தரத்தொழில் துறை இணையமைச்சர் திரு. பிரதாப் சந்திர சாரங்கி, இந்தத் துறைக்கான செயலாளர் டாக்டர்.அருண்குமார் பாண்டா, மேம்பாட்டு ஆணையர் திரு. ராம் மோகன் மிஸ்ரா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த வலைதளம் மூலம் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் அணுக முடியும். இத்துறையின் யோசனைகள், புதிய எண்ணங்கள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பதிவேற்ற இதில் இடம் உள்ளது. யோசனைகளைத் தெரிவிப்பதற்கு மட்டுமல்லாமல், அதனை மதிப்பிட்டு தரக்குறியீடு வழங்கக்கூடிய தனித்துவமான அம்சங்கள் இந்தத் தளத்தில் உள்ளன. கூட்டு முதலீடு, அந்நிய பங்குதாரர்களையும் இது ஊக்குவிக்கும். 

இந்த வலைதளம் குறிப்பாக, சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும், பொதுவாக பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது நிரூபணமாகும் என்று  அதன் முக்கியத்துவம் குறித்து திரு. கட்கரி தெரிவித்தார். இது மிகச் சிறந்த ஆரம்பம் என்று திரு. கட்கரி கூறினார். பிரிவு வாரியான வகைப்படுத்துதல், தகவல் மதிப்பீடுகள், சாதனைகள் ஆகியவை வெளியிடப்பட்டால், அந்த வெற்றிகரமான அனுபவங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளமுடியும் என்று அவர் யோசனை கூறினார். இந்த வலைதளத்தை தரமான தொழில் ரீதியிலான வல்லுநர்கள் கையாள வேண்டும் என்றும், நீடித்த அடிப்படையில் அதனை மேம்படுத்த வேண்டும் என்றும் திரு. கட்கரி வலியுறுத்தினார். அறிவுக்கூர்மையை செல்வமாக மாற்றுவது அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டார். விலை குறைவுக்கும், தர முன்னேற்றத்துக்கும் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை தொடர்பான பெரும்பணி அவசியம் என்று திரு.கட்கரி குறிப்பிட்டார். 

வலைதளத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் யோசனைகள், புதுமையான எண்ணங்கள் அல்லது ஆராய்ச்சி பற்றிய தகவல்களை இதில் பகிர்ந்து கொள்ளலாம். அவை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, பொது மக்களின் கருத்துக்காக வெளியிடப்படும். பதிவு செய்யும் பயன்பாட்டாளர்கள் இத்தகைய கருத்துக்களை மதிப்பிடலாம். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புபவர்கள், யோசனைகள், புத்தாக்கம், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்.


(Release ID: 1619699) Visitor Counter : 306