ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஊரடங்கு காலத்தில் உர விற்பனையில் சாதனை

Posted On: 28 APR 2020 5:08PM by PIB Chennai

தேசிய அளவிலான கொவிட்-19 பொது ஊரடங்குக்கு இடையே, ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரத்துறை விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்வதில் சாதனை படைத்துள்ளது.

2020 ஏப்ரல் 1 முதல் 22 வரை, விவசாயிகளுக்கு 10.63 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட 8.02 லட்சம் மெட்ரிக் டன்னை விட இது 32 சதவீதம் அதிகமாகும்.

2020 ஏப்ரல் 1 முதல் 22 வரை, விற்பனையாளர்கள் 15.77 லட்சம் மெட்ரிக் டன் உரங்களை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வாங்கப்பட்ட 10.79 லட்சம் மெட்ரிக் டன்னை விட 46 சதவீதம் அதிகமாகும்.

தேசிய அளவிலான கொவிட்-19 முடக்கத்தால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போதிலும், உரத்துறை, ரயில்வே, மாநிலங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலனாக, நாட்டில் உரங்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் எந்தவிதத் தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.

வரும் காரிப் பருவத்தில், விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் ஈடுபாடு காரணமாக இது  சாத்தியமானது.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா, உர விஷயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மாநில அரசுகளிடம் போதிய அளவுக்கு உரங்கள் கையிருப்பு உள்ளது . மாநில வேளாண் அமைச்சர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். விதைப்பு காலத்திற்கு முன்னதாக, விவசாய சமுதாயத்தினருக்கு உரங்கள் கிடைக்கச் செய்ய,  தமது அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக திரு.கவுடா தெரிவித்துள்ளார்.



(Release ID: 1619044) Visitor Counter : 270