பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகள், இராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியமும் ஆகியவற்றின் பங்களிப்பு பற்றியும், ஊரடங்கு முடிந்த பிறகு அவை இயங்கத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டுத் திட்டம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மீளாய்வு செய்தார்.

Posted On: 28 APR 2020 3:17PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகளும் (DPSUs) இராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியமும் (OFB) கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும், ஊரடங்கு முடிந்த பிறகு அவை இயங்கத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டுத் திட்டம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொளிக் காட்சி மூலம் இன்று மீளாய்வு செய்தார்.

கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதோடு புதிய பொருள்களை உற்பத்தி செய்வதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகள் வெளிப்படுத்தி உள்ள புத்தாக்கத் திறன்களையும், உள்ளூர் நிர்வாகத்துக்கு பல்வேறு வகைகளில் அவை அளித்துள்ள உதவிகளையும் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.  இழந்து போன வேலை நாட்களை முடிந்த அளவிற்கு ஈடுசெய்யும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் திட்டமிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஊரடங்கு காலத்துக்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பிரதம மந்திரி நரேந்திர மோடியின் திட்டங்களைச் சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங் தனியார் பாதுகாப்புத் தொழிற்சாலைகளுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகள் பொருளாதார புத்தெழுச்சிக்கு மிகப்பெரும் பங்காற்ற முடியும் என்றார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தித் துறை (DDP), பாதுகாப்பு அமைச்சகம் (MoD), இராணுவத் தளவாடத் தொழிற்சாலை வாரியம், மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகள் ஆகியன தங்களது நிறுவன சமூகப் பொறுப்புடைமை (CSR) நிதியில் இருந்து ஒரு நாள் ஊதிய நன்கொடை மூலம் ரூ.77 கோடியை பிஎம்-கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கி உள்ளதற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். ஏப்ரல் 2020இல் பிஎம்-கேர்ஸ் நிதியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனப் பிரிவுகள் மேலும் நன்கொடை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



(Release ID: 1618976) Visitor Counter : 144