சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 27 APR 2020 6:25PM by PIB Chennai

பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்களுடன் இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கொரோனா வைரஸ் பரவல் சங்கிலித் தொடர் பிணைப்பு உடைக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள பகுதிகளில் இது கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட்கள் எனப்படும், சிவப்பு மண்டலப் பகுதிகளில் வழிகாட்டுதல்களை மாநில / யூனியன் பிரதேச அரசுகள் தீவிரமாக அமல் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  சிவப்பு மண்டலங்களை, ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றி, பிறகு அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்கள் குறித்து தவறான எண்ணம் எதையும் உருவாக்கிவிடக் கூடாது என்று கூறிய அவர், சுகாதார மையங்களில் கோவிட்-19 தவிர்த்த மற்ற சுகாதாரச் சேவைகளையும் அளிக்க வேண்டும் என்று கூறினார். வழக்கமான மருத்துவப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் 16 மாவட்டங்களில், முன்பு கோவிட் நோயாளிகள் இருந்து, கடந்த 28 நாட்களில் புதிய நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் 3 புதிய மாவட்டங்கள் சேர்ந்துள்ளன (24 ஏப்ரல்):

  • மகாராஷ்டிராவில் கோண்டியா
  • கர்நாடகாவில் தாவண்கரே
  • பிகாரில் லாக்கி சராய்

கடந்த 28 நாட்களில் புதிய பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்த பிலிபட் (உத்தரப்பிரதேசம்) மற்றும் சாஹீத் பகத் சிங் நகர் (பஞ்சாப்)  மாவட்டங்களில் புதிதாக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தத்தில் (25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில்) 85 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை.

இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட ஐந்தாவது குழு (EG 5) வெளியிட்ட செய்தியில், கோவிட் - 19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் ஏற்பட்ட சவால்களை சமாளிக்க, பொருள்கள் வழங்கல் சங்கிலித் தொடர் பராமரிப்பு, கையிருப்பு ஏற்பாடுகள் குறித்தும், நோய் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப் பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் துறையின் செயலாளரும், குழுவின் ஒருங்கிணைப்பாளருமான திரு. பரமேஸ்வரன் அய்யர், வேளாண்மை, உற்பத்தி, சேமிப்புக் கிடங்கு மற்றும் பாதிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு உதவிகள் அளித்தல் என்ற நான்கு முக்கிய துறைகளில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தெரிவித்தார். உணவு மற்றும் மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகள் போக்குவரத்து மார்ச் 30இல் 46 சதவீதம் என்ற நிலையில் இருந்து ஏப்ரல் 25இல் 76 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இதே காலக்கட்டத்தில் சரக்கு ரயில்களின் இயக்கம் 67 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 70 சதவீதத்தில் இருந்து 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. மண்டிகளின் செயல்பாடு 61 சதவீதத்தில் இருந்து 79 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். அரசு ஏஜென்சிகள், என்.ஜி.ஓ.க்கள் மற்றும் தொழில் துறையினர் மூலம் தினமும் 1.5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டஅவர், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கலில் உள்ள தடங்கல்களை நீக்குவது, சிறந்த நடைமுறைகளை அமல் செய்வதற்கு ஏற்ப கொள்கைகளைத் தளர்த்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதற்காக இதுதொடர்பான துறைகள், உள்துறை அமைச்சகம் மற்றும் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறை (பார்மா), போக்குவரத்து, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மண்டிகளுடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இப்போதைய நிலவரத்தின்படி, கோவிட்-19 நோய் பாதித்தவர்களில் 6,184 பேர் குணமடைந்துள்ளனர். இது 22.17 சதவீதமாக உள்ளது. நேற்றில் இருந்து புதிதாக 1396 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் மொத்தம் 27,892 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 48 பேர் மரணம் அடைந்துள்ளதால், கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.


 



(Release ID: 1618751) Visitor Counter : 230