பிரதமர் அலுவலகம்

பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை ஒழிக்குமாறு பிரதமர் அழைப்பு

Posted On: 26 APR 2020 4:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி வானொலி மூலம் இன்று `மான் கீ பாத் 2.0' வரிசையில் 11வது உரையை நிகழ்த்தினார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள், மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.  இந்த நோய்த் தாக்குதலுக்கு எதிராக மக்களுடன் சேர்ந்து அரசும், நிர்வாகமும் போராடி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் போரில் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் போர் வீரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தான் முன்னின்று போரை நடத்துகிறார்கள் என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு பகுதியிலும் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டி, தங்களுடைய உறுதியை மக்கள் நிரூபித்து வருகிறார்கள் என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வது, ரேஷன் பொருள்கள் வழங்கல், முடக்கநிலை அமலுக்கு ஒத்துழைப்பு தருதல், மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்தல், உள்நாட்டிலேயே மருத்துவ சாதனங்கள் தயாரித்தல் ஆகிய விஷயங்களில் இந்த தேசம் முன்னோக்கி நடைபோடுகிறது என்று அவர் கூறினார். அதீத நம்பிக்கை என்ற வலையில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களது நகரம், கிராமம், தெரு அல்லது அலுவலகத்துக்கு கொரோனா இன்னும் வரவில்லை என்பதால், தங்களுக்கு அது வராது என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார். 'Do Gaz doori hai zaroori' என்பது தான் இப்போது நமது மந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் இருந்து மக்கள் இரண்டு முழ தூரம் தள்ளியிருப்பதன் மூலம், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதீத ஆர்வம் காரணமாக, உள்ளூர் அளவிலோ அல்லது வேறு பகுதிகளிலோ அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பணி கலாச்சாரம், வாழ்வியல் முறை, தினசரி பழக்கவழக்கம் ஆகியவற்றில் ஆக்கபூர்வமான பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அவர் குறிப்பிட்டார். முகக்கவச உறை அணிந்து முகத்தை மூடிக் கொள்வதில் பெரிய மாற்றத்தைக் காண முடிகிறது என்றார் அவர். கொரோனா பாதிப்பு சூழ்நிலையில், முகக் கவச உறைகள் மக்களின் வாழ்வுடன் இணைந்த அங்கமாகிவிட்டன. கலாச்சாரமான வாழ்வியலின் அடையாளமாக அது மாறிவிட்டது. தங்களையும், மற்றவர்களையும் நோயில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், அவர்கள் முகக் கவச உறை அணிய வேண்டும். முகத்தை சிறிய பருத்தித் துணி அல்லது துண்டு கொண்டு மூடிக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் பாதிப்பை இப்போது மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருப்பது மற்றொரு நல்ல மாற்றமாக இருக்கிறது என்று பிரதமர் கூறினார். எந்த இடமாக இருந்தாலும் காரித் துப்புவது மக்களின் கெட்ட பழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்தது. தூய்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் அது பெரிய சவாலாக இருந்து வந்தது. பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அடிப்படையான ஆரோக்கிய நிலையை அது மேம்படுத்துவதுடன், கொரோனா நோய்த் தொற்று பரவாமலும் அது தடுக்கும் என்றார் அவர்.

நெருக்கடியான காலகட்டத்தில், நாட்டு மக்களின் உறுதியான ஒத்துழைப்பு மூலம்  இந்தியாவின் புதிய மாற்றத்தின் தொடக்கம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவத் துறை நிறுவனங்கள், புதிய நடைமுறை மாற்றங்களை நோக்கிச் செல்வதாக அவர் கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு புதிய விஷயத்தை ஒவ்வொரு புதுமை சிந்தனையாளர்களும் முன்வைக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிவாரணங்களை அளிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளும், ஒவ்வொரு துறையும், நிறுவன அமைப்புகளும் கைகோர்த்து முழு வேகத்தில் செயல்படுவதாகவும் அவர் கூறினார். விமானப் போக்குவரத்து, ரயில்வே துறைகளில் பணியாற்றுவோர், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைவதற்காக இரவு பகலாகப் பணியாற்றுகின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உயிர்காக்கும் உடான் விமான சேவைகளில் சிறப்புச் சேவைகள் இயக்கப்பட்டதால், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் குறைந்த கால அவகாசத்தில் மருந்துகளும், மருத்துவச் சாதனங்களும் கொண்டு செல்லப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் மூலம் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஐநூறு டன்களுக்கும் அதிகமான மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

முடக்கநிலை அமல் காலத்தில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரயில்வே ஊழியர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றுவதை பிரதமர் மேன்மைப்படுத்திப் பேசினார். சுமார்  60 வழித்தடங்களில் 100க்கும் மேற்பட்ட பார்சல் ரயில் சேவைகளை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார். மருந்துகளை கொண்டு போய் சேர்ப்பதில் தபால் துறையினர் முக்கிய பங்காற்றி வருவதாகப் பிரதமர் கூறினார். இவர்கள் அனைவருமே உண்மையான கொரோனா எதிர்ப்பு வீரர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். உதவி தேவைப்படும் நிலையில் இருப்போர் மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று கோடிட்டுக் காட்டிய பிரதமர், பிரதரமரின் கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்புத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, ரொக்க உதவிகள் அவர்களின் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார். மூன்று மாத காலத்துக்கு ஏழைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். ஓர் அணியாக நின்று சேவை செய்வதில் அரசின் அனைத்துத் துறைகளும், வங்கிகளும் இணைந்து செயல்படுவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நோய்த் தாக்குதலுக்கு எதிராக மாநில அரசுகள் மிகவும் ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்திருப்பதாக பிரதமர் பாராட்டினார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் பகுதி நிர்வாக அமைப்புகளின் பொறுப்புகள் முக்கியமானவையாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அவர்களுடைய கடின உழைப்புக்கு பாராட்டு கூற வேண்டும் என்றார் அவர். நாடு முழுக்க மருத்து சேவையில் ஈடுபட்டிருப்பவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், டாக்டர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க நாள் முழுக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து அலுவலர்களின் சேவைக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களுடைய பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய அவர், அதற்காக சமீபத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களைத் துன்புறுத்துவோர் அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் அல்லது காயம் ஏற்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் அந்த அவசரச் சட்டம் உள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார்.

வீட்டுத் தேவைகளில் உதவி செய்பவர்கள், அருகில் உள்ள கடைகளில் வேலை பார்ப்பவர்கள், அத்தியாவசியப் பொருள்களை நம் வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள், சந்தைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், அருகமைப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருடைய சேவைகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம் என்றார் அவர். இந்த சக மனிதர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி செய்வது மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் அவர்களைப் பற்றி மரியாதையுடன் எழுதி வருகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அந்த சேவையில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்கள், காவல் துறையினரின் சேவை பற்றியும் கூட சாமானிய மக்களின் பார்வை புதிய கோணத்தில் இருக்கிறது என்று பிரதமர் கூறினார். ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உணவும் மருந்துகளும் சென்று சேருவதை இப்போது காவல் துறையினர் உறுதி செய்து வருகின்றனர். காவல் துறையினருடன் மக்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று பிரதமர் கூறினார்.

covidwarriors.gov.in  என்ற டிஜிட்டல் தளத்தை அரசு உருவாக்கியுள்ளதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். சமூக அமைப்புகளின் தன்னார்வலர்கள், மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகத்தின் பிரதிநிதிகள் இந்த தளத்தின் மூலம் தொடர்பில் இருப்பார்கள்.  டாக்டர்கள், நர்ஸ்கள், ஆஷா-ஏ.என்.எம். பணியாளர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என 1.25 கோடி பேர் குறுகிய காலத்தில் இதில் பதிவு செய்து கொண்டுள்ளனர். நெருக்கடியை சமாளிக்கும் திட்டத்தை உள்ளூர் அளவில் அமல் செய்வதற்கான தயாரிப்பதில் இந்த கோவிட் போர் வீரர்கள் முக்கிய உதவியாளர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறினார். covidwarriors.gov.in ல் கோவிட் வீரர்களாக சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் மனிதாபிமான உதவி என்ற அடிப்படையில் உலக நாடுகளுக்கு மருந்துப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது என்பதையும் பிரதமர் மேன்மைப்படுத்திக் கூறினார்.  உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து உலக மக்கள் இப்போது சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த வெந்நீர், டிகாக்சன் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் மக்களுக்கு மிகவும் உதவிகரமானவையாக இருக்கும் என்றார் அவர். நம்முடைய சொந்த பலங்களையும், மகத்தான பாரம்பரியங்களையும் மதிக்காமல் விட்டுவிடுகிறோம் என்பது தான் நம்முடைய துரதிருஷ்டமாக இருக்கிறது என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இவை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை இளைய தலைமுறையினர் மேற்கொண்டு, நமது பாரம்பரிய கோட்பாடுகளை அறிவியல் உலகில் பரவச் செய்திட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். யோகாவை உலக மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதைப் போல, காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஆயுர்வேதாவின் கோட்பாடுகளையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், வனங்கள், நதிகள் மற்றும் ஒட்டுமொத்த உயிரிச் சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அக்சய திருதியை நன்னாளில் குடிமக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை சார்ந்திருக்க மக்கள் விரும்பினால், பூமியின் வளங்கள் அபரிமிதமாக இருப்பதை முதலில் உறுதி செய்தாக வேண்டும் என்று அவர் கூறினார். தானம் செய்வது, நெருக்கடியான நேரத்தில் பிறருக்கு வழங்கும் பலத்தை உணரச் செய்வதாக அக்சய திருதியைத் திருநாள் உள்ளது என்று பிரதமர் கூறினார். அக்சய திருதியைத் திருநாள், முதலாவது தீர்த்தங்கரர் பகவான் ரிஷபதேவரின் வாழ்வில் முக்கியமான ஒரு நாளைக் குறிப்பிடுவதாகவும், பகவான் பசவேஸ்வராவின் பிறந்த நாளாகவும் இந்த நாள் இருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார். புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், ஈத் - திருநாளுக்கு முன்னதாக இந்த உலகம் கொரோனாவில் இருந்து விடுபட்டு, உற்சாகத்துடன் திருநாளைக் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தெருக்கள், மார்க்கெட்கள், குடியிருப்புப் பகுதிகளில் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்பதால் ரமலான் காலத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இரண்டு முழம் இடைவெளியை பராமரித்தல், வெளியில் செல்வதைத் தவிர்த்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா உள்பட உலகம் முழுக்க திருவிழாக்களைக் கொண்டாடும் முறையை கொரோனா மாற்றிவிட்டது என்று பிரதமர் கூறினார்.

***



(Release ID: 1618471) Visitor Counter : 282