ஜவுளித்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களுக்குத் தேவைப்படும் முழுஉடல் பாதுகாப்பு அங்கியின் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது; இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட முழுஉடல் பாதுகாப்பு அங்கிகளின் எண்ணிக்கை தோராயமாக 10 லட்சம்

Posted On: 26 APR 2020 3:57PM by PIB Chennai

நாட்டில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களுக்குத் தேவைப்படும் முழு உடல் பாதுகாப்பு அங்கியின் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  கோவிட்-19 நோயாளிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான தனி நபர் பாதுகாப்பு முழு அங்கி உற்பத்தியில் நாட்டின் முக்கியமான மையமாக பெங்களூரு உருவாகியுள்ளது.  நாட்டில் உற்பத்தியாகும் முழுஉடல் பாதுகாப்பு அங்கிகளில் சுமார் 50 சதவிகிதம் அங்கிகள் பெங்களூரில் தயாரிக்கப்படுகின்றன. சுகாதார நிபுணர்களுக்கு உயர்நிலை பாதுகாப்புக்குத் தேவைப்படும் பிரத்யேக பாதுகாப்பு உடையான முழுஉடல் பாதுகாப்பு அங்கியின் (Personal Protective Equipment - PPE) தரமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் கடுமையான தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கவேண்டும்.  இந்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் இத்தகைய அங்கிகளை கொள்முதல் செய்யும் நிறுவனமாக மெஸ்ஸர்ஸ் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நியமிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் தவிர்த்து முழுஉடல் பாதுகாப்பு அங்கிகள் தமிழ்நாட்டின் திருப்பூர், சென்னை மற்றும் கோயம்புத்தூர், குஜராத்தின் அகமதாபாத் மற்றும் வதோதரா, பஞ்சாப்பின் பக்வாரா மற்றும் லூதியானா, மகாராஷ்டிராவின் குசும்நகர் மற்றும் பிவாண்டி, ராஜஸ்தானின் துங்கர்பூர், கொல்கத்தா, தில்லி, நொய்டா, குருகிராம் மற்றும் இதர சில இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன.  இதுவரையில் தோராயமாக பத்து லட்சம் முழுஉடல் பாதுகாப்பு அங்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19க்குத் தேவையான முழு உடல் பாதுகாப்பு அங்கிகளுக்கான  தரப் பரிசோதனைகளைச் செய்யவும், சான்றிதழ் அளிப்பதற்குத் தேவையான அனுமதிகள் வழங்குவதற்கும் மேற்கொள்ள வேண்டிய செயற்கை ரத்த ஊடுருவலைத் தடுக்கும் பரிசோதனை வசதிகள் நாட்டில் தற்போது நான்கு ஆய்வுக்கூடங்களில் மட்டுமே உள்ளன. அவை கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கூட்டமைப்பு (SITRA), குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (DRDE), இராணுவத் தளவாட உற்பத்தி வாரியத்தின் கீழ் ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை மற்றும் கான்பூரில் உள்ள சிறு ஆயுத உற்பத்தி ஆலை ஆகும்.

துணி மற்றும் பி.பி.இ முழு உடல் பாதுகாப்பு அங்கி குறித்த ஒவ்வொரு பரிசோதனையையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மூல வடிவ மாதிரிகளை அனுப்பி வைக்கவேண்டும்.  இதற்கு பிரத்யேக சான்றிதழ் அடையாளக்குறியீடு (UCC-COVID19) உருவாக்கப்படும்.  இந்த அடையாளக் குறியீட்டில் துணிவகை, ஆடைவகை, பரிசோதனை செய்யப்பட்ட தேதி, பரிசோதனையின் தர மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய இதர விவரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பரிசோதனையில் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு மாதிரிக்கும் வழங்கப்படும் பிரத்யேக சான்றிதழ் அடையாளக் குறியீடானது (UCC) அங்கியைப் பயன்படுத்தும் எந்த ஒரு பயனாளரும் சரிபார்த்துக் கொள்வதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமை (Defence Research and Development Organisation - DRDO) ஓ.எஃப்.பி மற்றும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (The South India Textile Research Association – SITRA) வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன.  பரிசோதனை செயல்முறையை சீராக்கவும் பி.பி.இ முழுஉடல் பாதுகாப்பு அங்கியின் தரத்தைப் பராமரிக்கவும் பரிசோதனைக் கூடங்களுக்கு மாதிரிகளை பரிசோதனைக்காக சமர்ப்பிக்கும் போதே அந்த உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்ட படிவத்தில் பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் மட்டுமே தங்களது பி.பி.இ முழு உடல் பாதுகாப்பு அங்கி மாதிரியை உற்பத்தி நிறுவனம் பரிசோதிக்க வேண்டும் என்பதுவே இந்த நிபந்தனையின் நோக்கமாகும்.

.



(Release ID: 1618430) Visitor Counter : 312