உள்துறை அமைச்சகம்

மருத்துவத் தொழில் நிபுணர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர்.

கோவிட்-19 சிகிச்சையின் போது பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவத் தொழில் நிபுணர்கள் அல்லது முன்கள சுகாதாரத் துறை அலுவலர்களின் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 22 APR 2020 5:24PM by PIB Chennai

மருத்துவத் தொழில் நிபுணர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா உத்தரவின்படி, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அலுவலர்களுக்கு எதிராக வன்முறைகள் நடக்காமலும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 சிகிச்சையின் போது பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவத் தொழில் நிபுணர்கள் அல்லது முன்கள சுகாதாரத் துறை அலுவலர்களின் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவத் தொழில் நிபுணர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தி, அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 24.03.2020, 04.04.2020  மற்றும் 11.04.2020 தேதிகளில் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன் பிறகும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவத் துறை அலுவலர்கள் / முன்கள அலுவலர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு எதிராக ஒரு வன்முறை சம்பவம் நடந்தாலும், ஒட்டுமொத்த சுகாதாரத் துறையினர் மத்தியிலும்  பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்திவிடும் என்று அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் படியும், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் விதிகளின்படியும், அந்த சட்டத்தின் விதிகள் அல்லது பயன்பாட்டில் உள்ள வேறு எந்தச் சட்டத்தின் விதிகளையும் பயன்படுத்தி, அரசு சுகாதார அதிகாரிகள் மற்றும் பிற சுகாதார அலுவலர்கள் மற்றும் / அல்லது தொடர்புடையவர்களுக்கு எதிராக, பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005இன் கீழ் அத்தாட்சி பெற்ற யாரையும் தங்களின் சட்டபூர்வப் பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் நபர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவ அலுவலர்களின் சேவையின் போது ஏற்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எல்லா நாட்களிலும், தினமும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய அளவில் முன்னோடி அதிகாரிகளை மாநில / யூனியன் பிரதேச மற்றும் மாவட்ட அளவில் நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஏதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தால், தேவையின் அடிப்படையில், கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், முன்னோடி அதிகாரிகள் நியமனம் குறித்தும், இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தகவல்களை அளித்து, களநிலையில் இவை பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ தகவலை இந்த இணையதளச் சுட்டியில் காணலாம்:

: https://static.pib.gov.in/WriteReadData/userfiles/22.04.2020%20HS%20letter%20to%20Chief%20Secretaries%20reg.%20security%20to%20healthcare%20professionals.pdf



(Release ID: 1617227) Visitor Counter : 301