உள்துறை அமைச்சகம்

ஐ.எம்.ஏ-வின் மருத்துவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் கலந்துரையாடியபோது கோவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறினார்

Posted On: 22 APR 2020 12:12PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனும் இன்று புதுதில்லியில் இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) மருத்துவர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

மருத்துவர்களின் வழக்கமான பணியையும் குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பணியை உள்துறை அமைச்சர் பாராட்டினார்.  இதுவரையிலும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தது போலவே இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்று நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் கோவிட்-19 போன்ற உயிர்கொல்லி நோய்களில் இருந்து மக்களை காப்பதில் மருத்துவர்களின் தியாகங்களை அவர் பாராட்டினார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் கவனித்து தீர்த்து வைப்பதோடு மோடி அரசாங்கம் அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அண்மைக்கால தாக்குதல்களைக் கண்டித்த திரு ஷா மருத்துவர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் பிரதமர் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். மருத்துவர்கள் தாங்கள் தெரிவித்துள்ளபடி குறிப்பால் உணர்த்தும் சிறிய அளவிலான போராட்டத்தை மேற்கொள்வது என்பதுகூட தேசிய அல்லது சர்வதேச நலனுக்கு ஏற்றது அல்ல என்பதால் அத்தகைய போராட்டங்கள் வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசின் உயர்நிலை அளவிலான உத்தரவாதத்தை தொடர்ந்தும் மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சர்களின் உறுதிமொழியைத் தொடர்ந்தும் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தை எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்வதற்காக தாங்கள் முன்மொழிந்த போராட்டத்தை இந்திய மருத்துவக் கழகம் (IMA),  திரும்ப பெற்றுக் கொண்டது.



(Release ID: 1617035) Visitor Counter : 250