குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காலணி தொழில்துறை பிரதிநிதிகளுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: நிதின் கட்காரி உறுதி

Posted On: 18 APR 2020 6:09PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக காலணி தொழில் துறைக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு அளிக்கும் என்று மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்    திரு நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார். நாக்பூரிலிருந்து காணொளி காட்சி மூலமாக இந்திய காலணி தொழில்துறை கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் அவர் உரையாடினார். கடந்த 10 நாட்களில் இத்துறைக்கு வருமான வரித்துறை மூலமாக அரசு, நேற்று ரூ 5204 கோடி வரை திரும்பக் கொடுத்துள்ளது என்று கூறிய அவர், இது இத்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டிலேயே விற்கக்கூடிய முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றும், இந்த வாய்ப்பை ஏற்றுமதிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தொழில் துறையினரை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மாநாட்டின்போது, தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான மூலதனம் இல்லாமை, போக்குவரத்து வசதியின்மை, கச்சாப் பொருட்களின் தேவை, பணியிட நிலைமைகள், வர்த்தகர் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, கோவிட் 19 பெருந்தொற்று நிலைமைகளுக்கிடையே காலணிகளுக்கான தேவையின் மீதான பாதிப்பு, போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து காலணி தொழில் துறை பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர். இந்தத் துறை நல்ல நிலையில் இயங்குவதற்கான ஆதரவு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்பிட்ட சில தொழில் துறைகள் செயல்படலாம் என்று அரசு அனுமதித்துள்ள போதிலும், முதலில், கோவிட் 19 தொற்று பரவாமல் தடுப்பதற்குத், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தொழில்துறைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது அவசியம் என்று திரு கட்காரி குறிப்பிட்டார்.

வர்த்தக செயல்பாடுகளை மீண்டும் துவக்கும் போது சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் (முகக் கவசங்கள், கிருமிநாசினிகள், தொற்று சுத்திகரிப்பான்கள், கையுறைகள் போன்றவை) பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தத் துறைக்கு தேவையான உடனடி நிவாரணங்கள் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்கப்படும் என்று திரு கட்காரி உறுதியளித்தார். பொது முடக்கம் விலக்கப்பட்ட பிறகு, வணிகப் பணிகளை மீண்டும் மேற்கொள்ளும்போது, நேர்மறை அணுகுமுறையுடன், காலணி தொழில் துறை செயல்பட வேண்டும் என்றும் திரு.கட்காரி கூறினார். நெருக்கடி நிலைமை முடிந்தபிறகு உருவாகவிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் இத்தொழில் துறை இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.



(Release ID: 1615978) Visitor Counter : 158