சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லி துணை நிலை ஆளுநர், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர், தில்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் டாக்டர். ஹர்ஷவர்தன் காணொலி மூலம் கலந்துரையாடினார்

Posted On: 17 APR 2020 8:54PM by PIB Chennai

தில்லி துணைநிலை ஆளுநர் , தில்லி சுகாதாரத்துறை அமைச்சர், அங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரிய மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள், தில்லி மாநகராட்சி ஆணையர்களுடன் காணொளி மூலம் நடைபெற்றக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ‘’ கொவிட்-19க்கு எதிரான  போராட்டத்தில் நிலைமையைக் கட்டுக்குள் வைத்துப் பராமரிக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால், இந்த நெருக்கடியான சூழலில், அவசர சிகிச்சை தேவைப்படும், மற்ற நோயாளிகளை நாம் புறக்கணிக்கக்கூடாது ‘’ என்று கூறினார்.

‘’டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள், மூச்சுத்திணறல் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தம் தேவைப்படுபவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்ற கொவிட்-19 அல்லாத பிற மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது தொடர்பான புகார்களை நான் தொலைபேசி மூலமும், சமூக ஊடகங்கள், டுவிட்டர் மற்றும் அச்சு ஊடகம் மூலம் பெற்று வருகிறேன் ‘’ என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார். ‘’ அவசர சிகிச்சை தேவைப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வாறு சிகிச்சை மறுக்கப்படுவதால், அவர்கள் உடனடி சிகிச்சைக்காக, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு, அங்கும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதால், அவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சிகிச்சை மறுக்கப்படுவதை நாம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்று அவர் கூறினார். கொவிட்-19 நோயாளிகளைப் போல மற்ற நோயாளிகள் மீதும் முறையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவக் கண்காணிப்பாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஊரடங்கு நிலையில், அனைவருக்கும் இது சோதனையான காலக்கட்டம்; இந்தச் சூழலில், உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டு, அவசர மருத்துவக் கவனம் தேவைப்படும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு இடையே, சிகிச்சைக்காக மருத்துவமனையை அடைகின்றனர். ஒப்புக்கு ஏதாவது காரணத்தைக் கூறி, அவர்களை நாம் திருப்பி அனுப்பக்கூடாது. ஏனெனில், இரத்தம் செலுத்துதல் , டயாலிசிஸ் போன்ற சில சிகிச்சை முறைகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

*****


(Release ID: 1615671)