உள்துறை அமைச்சகம்

கோவிட் 19 நோய்க்கு எதிரான தேசிய அளவிலான முழு ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கப்பட்டிருப்பது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே: திரு அமித் ஷா

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரதமர் திரு மோடியின் தலைமையில், இந்திய மக்கள் உலகத்திற்கே உதாரணமாகத் திகழ்கிறார்கள்: உள்துறை அமைச்சர்

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பாராட்டத்தக்க வகையிலான ஒருங்கிணைப்பு உள்ளது: திரு அமித்ஷா

கோவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்: உள்துறை அமைச்சர்

நாட்டிற்குத் தேவையான அளவிற்கு உணவு, மருந்துப்பொருள்கள் மற்றும் இதர தினசரி அத்தியாவசியத் தேவைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன; குடிமக்கள் யாரும் பதற்றமடையத் தேவையில்லை: திரு அமித் ஷா

Posted On: 14 APR 2020 3:10PM by PIB Chennai

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கையாக தேசிய அளவிலான ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை எடுத்ததற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கையாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பது குறித்த முடிவை, நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார் என்று கூறினார்.

 

கோவிட் 19 நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முடிவுகளைப் பாராட்டிய திரு ஷா, உலகளாவிய இந்த நோயை உலகமே எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நோயை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரதமரின் தலைமையின் கீழ் இந்திய மக்கள் உலகம் முழுமைக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றும் கூறினார். காலத்திற்கு ஏற்ப அரசு எடுத்துவரும் முடிவுகளும், அவற்றில் மக்கள் பங்கேற்பதுமே இதற்குச் சான்று என்றும் அவர் கூறினார்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்த நோயைக் கையாள்வதற்கும், குடிமக்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதற்கும், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் வழிவகைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளன என்றார். முழு ஊரடங்கை அனைத்து குடிமக்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும்; யாருக்குமே தங்களுடைய தினசரித் தேவைகள் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் வணக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட திரு. ஷா, இந்தப் போராட்டத்தில், நமது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அனைத்து பாதுகாப்புப் பணியாளர்களும் ஆற்றிவரும் முக்கிய பங்கு, மனதைத் தொடுவதாக உள்ளது என்று அவர் கூறினார். சோதனையான இந்த காலகட்டத்தில் அவர்களுடைய துணிவும், புரிந்து கொள்ளும் தன்மையும், ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது; அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் தேவையான அளவு உணவு, மருந்துப்பொருள்கள் மற்றும் இதர தினசரி அத்தியாவசியத் தேவைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன என்பதை பொதுமக்களுக்கு நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். எனவே குடிமக்கள் எவரும், எந்தவிதப் பதற்றமும் அடையத் தேவையில்லை. அதேசமயம் நல்ல நிலைமையில் இருக்கும் மக்கள் முன்வந்து, தங்கள் அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்று, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் குடிமக்களுக்கு உறுதியளிக்கும் விதத்திலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளவேண்டும் என்று ஊக்கப்படுத்தும் விதத்திலும், நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற வகையிலும் திரு.அமித்ஷா கூறினார்


(Release ID: 1614377) Visitor Counter : 196