உள்துறை அமைச்சகம்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களைக் காக்க உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

Posted On: 12 APR 2020 5:03PM by PIB Chennai

பொது முடக்கத்தின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுத் தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமல் செய்யும்போது, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

முகாம்களில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, உணவு, சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகளுக்கான முறையான  ஏற்பாடுகள் செய்வதுடன், போதிய மருத்துவ வசதிகளும் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் அல்லது அனைத்து மத நம்பிக்கைகளையும் சார்ந்த சமுதாய குழு தலைவர்கள் நிவாரண முகாம்கள் / தங்குமிடங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏதும் அச்சங்கள் இருந்தால் அவற்றை நீக்க அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுடைய பதற்றத்தையும் அச்சத்தையும் காவல் துறையினரும், பிற அதிகாரவர்க்கத்தினரும் புரிந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், குடிபெயர்ந்தவர்கள் நலனுக்கான செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்குக் காவல் துறையினருடன் தன்னார்வலர்களையும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அளித்த அறிவுறுத்தல்கள் பற்றியும் உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிபெயர்ந்த தொழிலாளர்களின் உளவியல் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதம் பின்வரும் https://www.mohfw.gov.in/pdf/RevisedPsychosocialissuesofmigrantsCOVID19.pdf இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.



(Release ID: 1613677) Visitor Counter : 249