பிரதமர் அலுவலகம்
கோவிட்-19 கையாளுதல் அணுகுமுறைகளை உருவாக்க முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் முடக்கநிலை காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முதலமைச்சர்கள் ஆலோசனை
முன்னர் நமது மந்திரம் “உயிர் இருந்தால்தான் உலகம் உண்டு” (jaan hai to jahaan hai) என்று இருந்தது. ஆனால் இப்போது “உயிரும் வேண்டும் உலகமும் வேண்டும் “(‘jaan bhi jahaan bhi') என்று அது மாறியுள்ளது: பிரதமர்
வைரஸ் பரவாமல் தடுக்க இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் தாக்கத்தை முடிவு செய்வதில் அடுத்த 3 - 4 வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்: பிரதமர்
வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் யோசனை. வேளாண் விளை பொருள்களை விற்க உதவும் வகையில் வேளாண் உற்பத்திப்பொருள் விற்பனைக் குழுமத்தின் சட்டங்களை மாற்றுவதற்கும் பரிந்துரை
கோவிட்-19க்கு எதிரான நமது நடவடிக்கையில் ஆரோக்கிய சேது செயலி முக்கியமான ஒரு அம்சமாக இருக்கும், வரும் நாட்களில் பயணத்துக்கு உதவும் மின்னணு நுழைவுச் சீட்டாகவும் (e-Pass) ஆகவும் இருக்கும்: பிரதமர்
சுகாதார அலுவலர்கள் மீதான தாக்குதல்களுக்கும், வட-கிழக்கு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மாணவர்கள் மீதான அத்துமீறல்களுக்கும் பிரதமர் கண்டனம்
அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக பிரதமர் உறுதி; பதுக்கல்காரர்களுக்கும், கள்ளச் சந்தை
Posted On:
11 APR 2020 4:39PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கையாள்வதற்கான அணுகுமுறைகளை உருவாக்குவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்பு சூழ்நிலையில், முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடியது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் ஏப்ரல் 2, மார்ச் 20 தேதிகளில் பிரதமர் இவ்வாறு கலந்துரையாடியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் காரணமாக கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். ஆனால் சூழ்நிலை தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் தாக்கத்தைக் கண்டறிவதற்கு அடுத்து வரும் மூன்று முதல் நான்கு வார காலம் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தச் சவாலை எதிர்கொள்வதில் குழுவாகப் பணியாற்றுவது முக்கியம் என்றார் அவர்.
இந்தியாவில் போதிய அளவுக்கு அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார். முன்களத்தில் நின்று போராடும் மருத்துவ அலுவலர்களுக்கு, பாதுகாப்புக் கவச உடைகள் மற்றும் முக்கியமான சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கள்ளச் சந்தையில் விற்போர் மற்றும் பதுக்கல்காரர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். டாக்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் மீதான தாக்குதல்களுக்கும், வட-கிழக்கு மற்றும் காஷ்மீர் பகுதியில் மாணவர்களிடம் அத்துமீறிய சம்பவங்கள் குறித்தும் கண்டனம் தெரிவித்த அவர், அவை குறித்து கவலை தெரிவித்தார். அதுபோன்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முடக்கநிலை அமல் விதிகள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் தனி நபர் இடைவெளி பராமரிக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அவர் பேசினார்.
முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வரும்போது, படிப்படியாக விதிகளைத் தளர்த்துவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் திரு. மோடி, மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமலை நீட்டிக்க வேண்டும் என்பதில் மாநிலங்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருப்பது போல தெரிவதாகக் குறிப்பிட்டார். அரசின் முந்தைய தாரக மந்திரம் “உயிர் இருந்தால்தான் உலகம் உண்டு” (‘jaan hai to jahaan hai’) என்று இருந்தது என்றும், இப்போது அது “உயிரும் வேண்டும் உலகமும் வேண்டும்” ‘jaan bhi jahaan bhi’ என்று மாறிவிட்டது என்றும் அவர் கூறினார்.
மருத்துவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்த வேண்டியது பற்றியும், டெலி மருத்துவம் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றியும் பிரதமர் திரு. மோடி பேசினார். வேளாண் விளைபொருட்களை நேரடி கொள்முதல் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மார்க்கெட்களில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கலாம் என்றும் கூறிய அவர், முன்மாதிரி ஏ.பி.எம்.சி. சட்டங்கள் துரிதமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், விவசாயிகள் வாழும் இடத்திலேயே பொருட்களை விற்பது சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆரோக்கிய சேது ஆப்-ஐ பெருமளவில் பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அதைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தொடர்பு தடமறிதலில் தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் அரசுகள் எப்படி வெற்றிகரமாக சாதித்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த அனுபவங்களின் அடிப்படையில், இந்த ஆப் மூலம் இந்தியா தனது சொந்த முயற்சிகளை எடுத்துள்ளது. இது இந்தத் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றும் என்றார் அவர். வரும் நாட்களில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான இ-பாஸ் ஆக இது பயன்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
பொருளாதார சவால்கள் பற்றிப் பேசிய பிரதமர், தற்சார்பு நிலையை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்த நெருக்கடி அமைந்துள்ளது என்றும், நமது நாட்டை பொருளாதார வல்லமை மிக்கதாக ஆக்கிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
தங்கள் மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு, சமூக இடைவெளியைப் பராமரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சுகாதாரக் கட்டமைப்பை தீவிரமாக மேம்படுத்தி இருப்பது, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்களைப் போக்கியது, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கலை பராமரிப்பது குறித்த செயல்பாடுகளை முதலமைச்சர்கள் விளக்கினர். இப்போது அமலில் உள்ள முடக்கநிலையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர்கள் ஆலோசனை தெரிவித்தனர். நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய அரசு தங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மத்திய அரசின் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
******
(Release ID: 1613381)
Visitor Counter : 346
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam