பிரதமர் அலுவலகம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

प्रविष्टि तिथि: 04 APR 2020 9:58PM by PIB Chennai

அமெரிக்க அதிபர் மேதகு டொனால்டு டிரம்ப்-புடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். தற்போதைய கோவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அதன் காரணமாக, உலக நலனுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு நல்லுறவு இருப்பதை பிரதமர் திரு.மோடி குறிப்பிட்டார். தற்போதைய சர்வதேச நெருக்கடியை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள, அமெரிக்காவுடன் இந்தியா ஒற்றுமையுடன் செயல்படும் என்று அவர் கூறினார். கோவிட்-19-ஐ உறுதியாகவும், சிறப்பாகவும் எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா நட்புறவின் முழுத்திறனையும் பயன்படுத்திக் கொள்வது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

நோய்த்தொற்று காரணமாக சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தங்களது நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரும், அமெரிக்க அதிபரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

 

இந்த நெருக்கடியான சமயத்தில் உடல் மற்றும் மனநலனை உறுதிப்படுத்த யோகா மற்றும் ஆயுர்வேத முறையை (பாரம்பரிய இந்திய மூலிகை மருத்துவ முறை) பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

 

உலகளாவிய கோவிட்-19 பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

 

 


(रिलीज़ आईडी: 1611273) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam