பிரதமர் அலுவலகம்

பிரேசில் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

Posted On: 04 APR 2020 10:00PM by PIB Chennai

பிரேசில் அதிபர் மேதகு ஜெய்ர் மெஸ்ஸியாஸ் பொல்சனாரோ-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். கோவிட்-19 தொற்று பரவிவரும் நிலையில் சர்வதேச நிலவரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

பிரேசிலில் கோவிட்-19 வைரஸ் தாக்கியதால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். நட்புறவு மிக்க பிரேசில் மக்களுக்காக இந்தியர் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலைக் கட்டுப்படுத்த சர்வதேச மற்றும் இருதரப்பு அளவில் இந்தியாவும், பிரேசிலும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். கோவிட் தாக்குதலுக்குப் பின்பு உலக அளவில், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கல் வழிமுறையைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில், முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளதாக பிரேசில் அதிபரிடம் பிரதமர் உறுதியளித்தார். கோவிட்-19 வைரஸ் மற்றும் அதன் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் 70-வது குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக பிரேசில் அதிபர் கலந்துகொண்டதை நன்றியுடன் மோடி நினைவுகூர்ந்தார். இந்தியா-பிரேசில் நட்புறவு வலுவாக வளர்ந்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சியை தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்புக்கு கடந்த ஆண்டில் தலைமை வகித்ததற்காக பிரேசிலுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


(Release ID: 1611272) Visitor Counter : 191