எரிசக்தி அமைச்சகம்

இரவில் விளக்குகளை அணைப்பதால் மின்தொகுப்பில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும், மின்னழுத்தத்தில் ஏற்ற, இறக்கம் உருவாகும் என்பது தவறான புரிதல்; எரிசக்தி அமைச்சகம்

வீடுகளில் விளக்குகளை மட்டுமே அணைக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்; வேறு எந்த மின் உபகரணங்களையும் அல்ல என விளக்கம்

Posted On: 04 APR 2020 3:56PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் ,ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மக்கள் தாங்களாக முன்வந்து வீடுகளில் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அழைப்பு காரணமாக, மின்தொகுப்பில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்றும், மின்னழுத்தத்தில் ஏற்ற, இறக்கம் உருவாகி, அதன் காரணமாக , வீடுகளில் மின் உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  சில தவறான புரிதல்கள் வெளியாகியுள்ளன. இவை மிகவும் தவறான தகவல்கள் என்று மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது..

இந்திய மின்தொகுப்பு வலுவான, நிலையான கட்டமைப்பு கொண்டது. மின்சாரத் தேவையில் ஏற்படும் மாறுபாடுகளைக் கையாளும் வகையில் போதிய ஏற்பாடுகளும், வழிமுறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாண்புமிகு பிரதமர் ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மக்கள் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தெரு விளக்குகளையோ, வீடுகளில் உள்ள கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள், குளிர்சாதனப்  பெட்டிகள், குளிரூட்டிகள் போன்ற வேறு எதையுமோ அணைக்குமாறு கூறவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள எரிசக்தி அமைச்சகம், வீடுகளில் விளக்குகள் மட்டுமே அணைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள விளக்குகள், பொதுப்பயன்பாடுகள், நகராட்சி சேவைகள், அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உற்பத்திப்பிரிவுகள், போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் விளக்குகளுடன் இயங்கும் என்றும், பிரதமரின் வேண்டுகோள், வீடுகளில் உள்ள விளக்குகளை அணைப்பதற்கு மட்டுமே விடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பொது மக்களின் பாதுகாப்புக்காக தெரு விளக்குகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது..



(Release ID: 1611061) Visitor Counter : 226