சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பொது முடக்கத்தின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வேண்டுகோள்

Posted On: 28 MAR 2020 12:33PM by PIB Chennai

பொது முடக்கத்தின் போது, மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய சூழலில் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்களது குறைபாடு காரணமாக, அவர்களுக்கு தொடர்ச்சியான கவனிப்பும், ஆதரவும் தேவைப்படுகிறது. பெரும்பாலோர், தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைக்கும் செயல்பாடுகளுக்கும் கவனிப்பு பணியாளர்களையோ, பணியாளர்களையோ அல்லது இதர சேவையாளர்களையோ சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சேவை புரிபவர்கள், பொது முடக்கம் உள்ள நிலையில், தங்கள் வீடுகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை கூறியுள்ளது. சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது என்றாலும், மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் அத்தியாவசிய சேவை அளிப்பவர்களை அணுகுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தை செயல்படுத்தும் மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகள், முன்னுரிமை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்குவோர், பணியாளர்களுக்கு அனுமதிச்சீட்டுகளை வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களைக் கவனிக்கும் மாவட்ட அதிகாரிகளின் உதவியை, துரித ஆய்வுக்காக கோரலாம். உள்ளூர் காவல்துறையினர் தங்கள் பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோளைத் தெரியப்படுத்த தாமதமின்றி விரிவான விளம்பரம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

*****


(Release ID: 1608899) Visitor Counter : 194