பிரதமர் அலுவலகம்
ஆயுஷ் மருத்துவர்களுடன் பிரதமர் திரு. மோடி கலந்துரையாடல்
தேசத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆயுஷ் துறைக்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளது; கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் இத்துறைக்கு முக்கிய பங்கு உள்ளது: பிரதமர்
இந்த நோய்க்குத் தீர்வு இருப்பதாக ஆயுஷ் மருத்துவர்கள் கூறும் ஆதாரமற்ற தகவல்களை உறுதிப்படுத்துவதும் ஆய்வு செய்வதும் முக்கியம்: பிரதமர்
மக்களைச் சென்றடையவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொலைவழி மருத்துவ களத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமர்
வீட்டில் யோகா செய்தல் பயிற்சி வழங்குவதில் ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
28 MAR 2020 1:16PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுஷ் துறை மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
தேசத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் ஆயுஷ் துறைக்கு நீண்டகால பாரம்பரியம் உண்டு என்று கூறிய பிரதமர், இப்போது எழுந்துள்ள கோவிட்-19 பிரச்சினையைக் கையாள்வதில் ஆயுஷ் துறையின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயுஷ் மருத்துவர்கள் பரவலாக இருப்பதால், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைச் செயல்படுவதிலும், இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நல்ல நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதிலும் இந்த இணைப்பு முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். நெருக்கடியான காலக்கட்டத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலை வலுப்படுத்தவும் வீட்டிலேயே யோகா செய்தல் பயிற்சியை அளிப்பதில் ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்த நோய்க்குத் தீர்வு இருப்பதாக ஆயுஷ் மருத்துவர்கள் கூறும் ஆதாரமற்ற தகவல்களை உறுதிப்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வது முக்கியம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆயுஷ் விஞ்ஞானிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.) மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஆதாரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சி முறைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இப்போது ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்வதில், சுகாதாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் நாடு பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். தேவை ஏற்பட்டால் ஆயுஷ் மருத்துவதில் தொடர்புடைய தனியார் மருத்துவர்களையும் அரசு சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த காலக்கட்டத்தில் அதிக தேவையாக உள்ள கிருமிநாசினிகளைத் தயாரிக்க, ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். மக்களைச் சென்றடையவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொலைவழி மருத்துவ களத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதில் சமூக இடைவெளியை பராமரித்தல் முறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருவதற்காக பிரதமரின் முயற்சிகளுக்கு ஆயுஷ் மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர். நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிப்பதில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன் குறித்து அவர்கள் பேசினர். அறிகுறி சார்ந்த சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொள்ள தங்களுடைய முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அவர்கள், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தேசத்துடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார் பிரதமர். மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுஷ் மருத்துவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆயுஷ் துறை மத்திய அமைச்சர், அமைச்சரவைச் செயலாளர், ஆயுள் அமைச்சக செயலாளர் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
******
(Release ID: 1608861)
Visitor Counter : 244
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam