பிரதமர் அலுவலகம்
கொரோனோ வைரஸ் குறித்து வாரணாசி மக்களிடம் பிரதமர் உரை
கட்டுப்பாடு, உறுதி, புரிந்துகொள்ளுதல் தேவை என பிரதமர் வலியுறுத்தல்
கொரோனோ வைரஸ் உதவி மைய எண்ணை பிரதமர் அறிவித்தார்
Posted On:
25 MAR 2020 6:33PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இதுபோன்ற நேரத்தில், அவர்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், தில்லியில் நிலவும் சூழலில் அது இயலவில்லை என்றும் கூறினார். கடுமையான பணிச் சுமைகளுக்கிடையே, வாரணாசி நிலவரம் பற்றி தமது சகாக்கள் மூலம் அவ்வப்போது தெரிந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
கொரோனோவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், சகல வலிமையையும் அளிக்குமாறு, வாரணாசி மக்கள் ஷைல்புத்ரி அம்மனிடம் பிரார்த்தனை செய்து , பூஜைகள் நடத்தியதற்காக பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். ‘’மக்கள் சரியான நேரத்தில், மிக முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறினால், இந்தியாவிலும் இது போன்று நடக்கக்கூடும்’’ என்று அவர் கூறினார். உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், வதந்திகளை நம்பக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனோ வைரஸ் ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை என்றும், அது யாரையும் விடாது என்றும் அவர் கூறினார். காபூலில் குருத்வாராவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
கொரோனோ வைரஸ் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள, வாட்ஸ்அப் ஒத்துழைப்புடன் உதவி மைய எண்ணை அரசு அமைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 9013151515 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக, ஆங்கிலம் அல்லது இந்தியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், ‘நமஸ்தே’ எனக்கூறி அதனை சோதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மகாபாரதப் போரில் வெல்ல 18 நாட்கள் ஆனது என்றும், கொரோனோ வைரசுக்கு எதிரான போரில் 21 நாட்களில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்களை யாராவது அவமதிப்பதைப் பார்த்தால், அவர்கள் செய்வது தவறு என்பதைப் புரிய வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மக்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், நமக்காக பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர நிபுணர்களுடன் ஒத்துழைக்காதவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கும், காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நாட்டின் சாதாரண குடிமக்கள், அரசு சரியான நேரத்தில், சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மார்ச் 22-ம்தேதி மக்கள் ஊரடங்கிற்கு அனைத்து மக்களும் ஆதரவு அளித்ததும், அத்தியாவசியப் பணியாளர்களின் கடமை உணர்வுக்கு மாலை 5மணியளவில் நன்றி தெரிவித்ததும் இதனைத் தெளிவாக எடுத்துக்காட்டியது என அவர் கூறினார். மருத்துவமனைகளில், வெள்ளைச் சீருடைகளில் பணியாற்றி வரும் சுகாதாரத் தொழில்முறைப் பணியாளர்கள் அனைவரும் இன்று நமக்கு கடவுள்கள் ஆவர் என்று கூறிய பிரதமர், அவர்கள் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகின்றனர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் நம்மைக் காப்பாற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
***
(Release ID: 1608257)
Visitor Counter : 229
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam