குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்
'தேர்வுகள், மதிப்பெண்களைத் தாண்டி சுயசிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதே கல்வியின் நோக்கம்' – குடியரசு துணைத்தலைவர்
'வளர்ச்சியடைந்த இந்தியா @2047 பயணத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது' – குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 1:56PM by PIB Chennai
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று (17 ஆகஸ்ட் 2026) திருவாரூரில் நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 1,103 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர், மொத்த பட்டதாரிகளில் 616 பேர் மகளிர். 37 மாணவிகள் உட்பட 50 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி. பத்மநாபன், துணைவேந்தர் முதுநிலை பேராசிரியர் சுலோச்சனா சேகர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்திற்கும், பட்டம் பெறும் இளம் தலைமுறையினருக்கும் முக்கியமான மைல்கல் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், மாணவர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவற்றைக் கொண்டாடும் நாளாக இது அமைந்துள்ளது என்றார்.
பட்டம் பெறும் மாணவர்களின் சாதனை, அவர்களின் பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் உரியது என்றும் அவர்களின் தியாகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
'தமிழ்நாடுதான் நான் பிறந்த மண்; எனது பயணம் தொடங்கிய மண்' என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது தனிப்பட்ட முறையில் தமக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருவாரூரின் சிறப்பையும் அவர் எடுத்துரைத்தார். தியாகராஜர் கோயில் அமைந்துள்ள திருவாரூர், பல நூற்றாண்டுகளாக ஆன்மிகம், கல்வி மற்றும் கலைச் சிறப்பின் மையமாகத் திகழ்ந்து வருவதாகக் கூறினார்.
இப்புனித மண் சான்றோர்கள், அறிஞர்கள் மற்றும் கர்நாடக இசையின் புகழ்பெற்ற மும்மூர்த்திகளை உருவாக்கிய மண் என்றும், பண்பாடு, கல்வி மற்றும் விழுமியங்கள் ஒன்றிணைந்து வளரும்போதுதான் உண்மையான மேன்மை உருவாகிறது என்பதற்கு திருவாரூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய பட்டதாரிகள் உலகம் வேகமாக மாறிவரும் காலக்கட்டத்தில் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்துறைகளை மாற்றி வருகிறது; காலநிலை மாற்றம் வளர்ச்சி குறித்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய மனிதகுலத்தைத் தூண்டுகிறது. சுகாதாரம், உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஏற்படும் முன்னேற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
இத்தகைய சூழலில் அறிவு மட்டுமே போதாது என்று கூறிய அவர், வாழ்நாள் முழுவதும் கற்றல், மாற்றங்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது, புத்தாக்கத்தைத் தழுவுவது மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காண்பது ஆகியவையே எதிர்கால வெற்றியின் அடித்தளம் என்றார்.
அறிவை ஞானம், படைப்பாற்றல் மற்றும் நேர்மையுடன் பயன்படுத்தக்கூடியவர்களுக்கே எதிர்காலம் சொந்தம் என்றார்.
கடந்த 12 ஆண்டுகளில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விரிவாக்கத்தை குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
2014 முதல் 16 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐஐடி), 8 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 8 இந்திய மேலாண்மைக் கழகங்கள் (ஐஐஎம்), 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி), 2 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் (ஐஐஎஸ்இஆர்), 1 தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மற்றும் 12 புதிய எய்ம்ஸ் நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை 2014-15-ம் ஆண்டில் 1.57 கோடியிலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 2.24 கோடியாக, அதாவது 42.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.
பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் ஆண்களைவிட, பெண்களே அதிக எண்ணிக்கையிலான பட்டங்களையும் பதக்கங்களையும் பெறுவதைத் தாம் காண்பதாகக் கூறிய அவர், இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றார்.
கல்வி என்பது தேர்வுகள் அல்லது மதிப்பெண்களால் மட்டுமே அளவிடப்படுவதில்லை என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், சுயமாகச் சிந்திக்கும் திறன், திறம்படத் தொடர்புகொள்ளும் திறன், மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் திறன், வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஆகியவையே இன்றைய கல்வியின் உண்மையான அளவுகோல்கள் என்றார்.

பல்துறை கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் விழுமியங்கள் அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இந்த நோக்கத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வருவதாக அவர் பாராட்டினார்.
இது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படை நோக்கத்துடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட்டம் பெறும் மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியேறினாலும், கற்றலை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார்.
இன்று பெறும் பட்டம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுத் தேடலின் தொடக்கம் மட்டுமே என்றார் அவர். மாணவர்கள் எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தாலும், ஒவ்வொரு தொழிலும் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
'நுகர்வோராக அல்ல, அறிவை உருவாக்குபவர்களாக; பின்பற்றுபவர்களாக அல்ல, புத்தாக்கவாதிகளாக; பின்தொடர்பவர்களாக அல்ல, தலைவர்களாக மாறுங்கள்' என்று அவர் மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுதந்திரத்தின் நூற்றாண்டை ஒட்டி அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான, நீடித்த, முன்னேறிய நாட்டை உருவாக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா @2047 என்ற இலக்கை நாடு முன்னெடுத்து வருகிறது என்றார்.
இந்த இலக்கை நிறைவேற்றுவதில் இளைஞர்களின் ஆற்றல், கற்பனைத்திறன் மற்றும் தலைமைத்துவம் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு செயலிலும் 'தேசமே முதன்மை' என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும் என்று மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், தேர்வு நடைமுறையில் முறைகேடுகளைத் தடுப்பதும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் என்றார்.
தாம் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது, இதே நோக்கத்தைக் கொண்ட சட்டத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு நிறைவேற்றியதாகவும், ஆளுநராக அந்தச் சட்டத்தில் உடனடியாக கையெழுத்திட்டு அது சட்டமாக வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
'நல்லவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சமூகத்தில் உள்ள தீய சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், பொதுத் தேர்வு முறையின் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதில் இது போன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றார்.

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாடு தனிநபர்களை மட்டுமல்லாமல் குடும்பங்களையும் சமூகத்தையும் பாதிக்கிறது என்றும், இளைஞர்களை இந்தத் தீமைகளிலிருந்து பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
'போதையில்லா சமுதாயம் அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; நீங்கள் தவிர்ப்பது மட்டுமல்லாது உங்கள் நண்பர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருக்க ஊக்குவியுங்கள்' என்றார்.
பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவரும் வெற்றி, நல்ல ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் மனநிறைவு கொண்ட எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வாழ்த்தினார்.
***
AD/KR
(रिलीज़ आईडी: 2300559)
आगंतुक पटल : 12