தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் புதிய சமுதாய வானொலி நிலையங்கள் அமைக்க மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 3:31PM by PIB Chennai

இயற்கைப் பேரிடர், அவசரகால சூழ்நிலைகளின் போது உள்ளூர் மக்களுக்குத் தேவையான நம்பகமான, அவசியமான தகவல்களை அவர்களின் தாய்மொழியிலேயே உடனுக்குடன் வழங்குவதில் சமுதாய வானொலி நிலையங்கள் மிக முக்கியமான பங்காற்றி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, கடலோரப் பகுதிகள், வெள்ளப்பெருக்கு, பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பிற பகுதிகளில் புதிய சமுதாய வானொலி நிலையங்களை அமைக்க அடையாளம் கண்டு ஊக்குவிக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர்களுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை கடிதம் எழுதியுள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், இந்தியாவில் சமுதாய வானொலி இயக்கம் தொடர்பான கொள்கை வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட சேவைப் பகுதியில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும் என்று கூறினார். பேரிடர்கள், பொது சுகாதார எச்சரிக்கைகள், பொதுமக்களின் வசதிக்காக உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை ஒலிபரப்ப சமுதாய வானொலி நிலையங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்தார். பேரிடர் காலங்களில் தடையில்லாச் சேவையை உறுதி செய்யும் வகையில், 2026-27 முதல் 2030-31 வரை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'இந்தியாவில் சமுதாய வானொலி இயக்கத்திற்கு ஆதரவளித்தல்' என்ற மத்திய அரசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் புதிய வானொலி நிலையங்களை அமைக்கவும், பழைய உபகரணங்களை மாற்றவும், சூரிய ஒளிமின் சக்தி அமைப்புகள், ஜெனரேட்டர்கள் போன்ற மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் வெள்ளம், மின்னல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் செயல்பாட்டில் உள்ள சமுதாய வானொலி நிலையங்களுக்கு அவசரகால நிதியுதவியாக ரூ.11.50 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295977&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2296268) வருகையாளர் எண்ணிக்கை : 39