பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்ட திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 28 MAR 2026 2:47PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

திறப்பு விழா நடந்துவிட்டதா? திறப்பு விழா நடந்துவிட்டதா? இல்லை, பாதி வேலைதான் முடிந்துள்ளது. நான் அந்தத் திரையை மட்டுமே நீக்கியிருக்கிறேன். ஆனால், இன்று இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவராலும் இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே, உங்கள் அலைபேசிகளை எடுத்து, அதன் மின்விளக்கை  ஒளிரச் செய்யுங்கள். நீங்கள்தான் இன்று இதைத் திறந்து வைக்கிறீர்கள். விளக்கேற்றி வைப்பதன் மூலம், இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இந்த விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறீர்கள். இது உங்கள் சொத்து, இது உங்கள் எதிர்காலம், இது உங்கள் கடின உழைப்பு. எனவே, இதன் திறப்பு விழாவும் உங்கள் கைகளால் நடைபெற வேண்டும். 'பாரத மாதாவுக்கு ஜே' என்று கூறி, கைகளை உயர்த்தி, உங்கள் அலைபேசி மின்விளக்குகளை ஒளிரச் செய்து காட்டுங்கள்.

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

மிக்க மிக்க நன்றி. இப்போது திறப்பு விழா நிறைவடைந்தது.

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, இம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மௌர்யா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சர்கள் ராம்மோகன் நாயுடு அவர்களே, பங்கஜ் சௌத்ரி அவர்களே, சூரிச் விமான நிலையத்தின் தலைவர் ஜோசப் பெல்டர் அவர்களே, பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிற முக்கிய பிரமுகர்களே, என் அன்பு சகோதர சகோதரிகளே!

இன்று என் கண்கள் எங்கு திரும்பினாலும், இளைஞர்களை மட்டுமே என்னால் காண முடிகிறது. உற்சாகம் நிறைந்த இளைஞர்கள், பேரார்வம் கொண்ட இளைஞர்கள்! ஏனெனில், இந்த இளைஞர்களுக்குத் தெரியும், இன்று தொடங்கப்படும் இந்தத் திட்டம், அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய சிறகுகளைத் தருகிறது என்று. இன்று நாம் 'வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசம் - வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், இன்று நாட்டிலேயே அதிக சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இன்று எனக்கு இரண்டு காரணங்களுக்காக பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. முதலாவது, இந்த விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பாக்கியத்தை நீங்கள் எனக்கு வழங்கினீர்கள்; அதேபோல், இன்று இந்த விமான நிலையத்தைத் திறந்து வைக்கும் பாக்கியத்தையும் எனக்கு வழங்கினீர்கள். ஆனால், அந்தப் பாக்கியத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்கள் கைகளாலேயே இந்தத் திறப்பு விழாவைச் செய்து முடித்தேன். இரண்டாவது, என்னை தனது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த உத்தரப் பிரதேசம், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிய உத்தரப் பிரதேசம், அந்த உத்தரப் பிரதேசத்தின் அடையாளத்தோடு, இந்த பிரம்மாண்டமான விமான நிலையத்தின் பெயரும் இணைந்துள்ளது.

நண்பர்களே,

நொய்டாவின் இந்த விமான நிலையம், ஆக்ரா, மதுரா, அலிகார், காசியாபாத், மீரட், எட்டாவா, புலந்தஷாஹர், பரிதாபாத் என இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் பெரும் நன்மைகளைத் தரப்போகிறது. இது இந்தியா மற்றும் உத்தரப் பிரதேசத்திற்காக நிச்சயம் நடக்க வேண்டிய ஒன்று. இந்த விமான நிலையம், மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் இங்கிருக்கும் இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரப்போகிறது. இங்கிருந்து விமானங்கள் உலகெங்கும் பறக்கும்; அதேவேளையில், இது வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசத்தின் எழுச்சியின் அடையாளமாகவும் திகழும். இந்த பிரம்மாண்டமான விமான நிலையத்திற்காக, உத்தரப் பிரதேச மக்களுக்கும், குறிப்பாக மேற்கு உத்தரப் பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்றைய நிகழ்வு இந்தியாவின் புதிய மனநிலையின் அடையாளமாகும். இன்று உலகம் முழுவதும் எவ்வளவு கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் கவனித்து வருகிறீர்கள். மேற்கு ஆசியாவில் கடந்த ஒரு மாதமாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் விளைவாக, பல நாடுகளில் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு முயற்சியைச் செய்து வருகின்றன. அதேபோல், நமது இந்தியாவும் நாட்டு மக்களின் பலத்தை நம்பி, முழு வலிமையுடன் இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. போர் நடக்கும் இடங்களிலிருந்தும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. எனவே, இந்த நெருக்கடியின் சுமை சாமானிய குடும்பங்கள் மீதோ, நமது விவசாயச் சகோதர சகோதரிகள் மீதோ விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைத்து வருகிறது.

நண்பர்களே,

இத்தகைய நெருக்கடியான நேரத்திலும், இந்தியா தனது வேகமான வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. நான் மேற்கு உத்தரப் பிரதேசத்தைப் பற்றி மட்டும் பேசினால், கடந்த சில வாரங்களில் மட்டும் இது நான்காவது பெரிய திட்டமாகும்; ஒன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது அல்லது நிறைவடைந்த திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சில வாரங்களில், நொய்டாவில் மிகப்பரிய செமிகண்டக்டர் (Semiconductor) தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது; இதே காலகட்டத்தில், நாட்டின் முதல் 'நமோ பாரத்' (Namo Bharat) தில்லி - மீரட் ரயில் தனது பயணத்தை வேகப்படுத்தியது; இதே காலகட்டத்தில், மீரட் மெட்ரோ விரிவாக்கம் செய்யப்பட்டது; அத்தகைய குறுகிய காலத்திற்குள், இன்று உங்கள் கைகளால் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது.

நண்பர்களே,

இந்தத் திட்டங்கள் அனைத்தும் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக 'இரட்டை என்ஜின்' அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த செமிகண்டக்டர் தொழிற்சாலை, தொழில்நுட்பத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுகிறது. மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் ஆகியவை அதிவேகமான மற்றும் நவீன இணைப்பை வழங்குகின்றன. நமது இந்த ஜெவார் விமான நிலையம், ஒட்டுமொத்த வட இந்தியாவையும் உலகத்துடன் இணைக்கிறது. அந்த வீடியோவில் நீங்கள் பார்த்தது போல, ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு விமானம் வந்து செல்லும் வகையில் ஒரு பிரம்மாண்டமான விமான நிலையம் இங்கே கட்டப்பட்டு வருகிறது. முன்பு, சமாஜ்வாதி கட்சியினர் நொய்டாவைத் தங்கள் கொள்ளைக்கான ஏடிஎம்-ஆக  மாற்றியிருந்தனர். ஆனால் இன்று, பாஜக ஆட்சியில் அதே நொய்டா, உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான ஒரு சக்திவாய்ந்த என்ஜினாக உருவெடுத்து வருகிறது.

நண்பர்களே,

இந்த ஜெவார் விமான நிலையம், 'இரட்டை என்ஜின்' அரசின் பணிக் கலாச்சாரத்திற்குச் சிறந்த உதாரணமாகும். நீங்கள் யோசித்துப் பாருங்கள், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அரசு 2003-ம் ஆண்டிலேயே இந்த விமான நிலையத்திற்கான அனுமதியை கோப்புகளில் வழங்கியிருந்தது. 2003-ல், இன்று இங்கு கூடியிருக்கும் உங்களில் பலர் பிறந்திருந்திருக்க மாட்டீர்கள்; அந்தச் சமயத்தில் 25-30, 35 வயதுடையவர்களாக இருந்த பலர் இன்று பணி ஓய்வு பெற்றிருப்பார்கள். ஆனாலும், விமான நிலையம் கட்டப்படவில்லை. ஆனால், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், இங்கு இருந்த முந்தைய அரசுகளும் பல ஆண்டுகளாக இந்த விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டக்கூட விடவில்லை. 2004 முதல் 2014 வரை, இந்த விமான நிலையம் கோப்புகளுக்குள்ளேயே புதைந்து கிடந்தது. எங்கள் அரசு மத்தியில் அமைந்தபோது, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி இருந்தது. அந்த அரசின் முதல் இரண்டு-மூன்று ஆண்டுகளில், அவர்கள் இந்த விமான நிலையப் பணிகளை நடக்க விடவில்லை. ஆனால், இங்கே பாஜக-என்.டி.ஏ ஆட்சி அமைந்தவுடன், டெல்லியிலும் பாஜக-என்.டி.ஏ ஆட்சி அமைந்தவுடன், ஜெவார் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, கட்டுமானப் பணிகள் நடந்தன, இப்போது அது செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது.

நண்பர்களே,

இந்த விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டின் இரண்டு பெரிய சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் இணையும் ஒரு மையமாகவும் இந்த பகுதி உருவெடுத்து வருகிறது. இந்த சரக்கு வழித்தடங்கள் என்பது சரக்கு ரயில்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பாதைகளாகும். இதன் மூலம், வட இந்தியாவின் இணைப்பு, வங்காளம் மற்றும் குஜராத்தின் கடற்கரை பகுதிகளுடன் மிகச் சிறப்பாக மேம்பட்டுள்ளது. தத்ரி (Dadri) என்பது இந்த இரண்டு வழித்தடங்களும் சந்திக்கும் இடமாகும். அதாவது, இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களும், தொழிற்சாலைகள் தயாரிக்கும் பொருட்களும் தரை மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் உலகின் எந்த மூலைக்கும் மிக விரைவாகச் சென்றடைய முடியும். இத்தகைய பன்முக இணைப்பால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தரப் பிரதேசம் ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு மையமாக மாறி வருகிறது.

நண்பர்களே,

முன்பு மூடநம்பிக்கைகளால் தத்தளித்துக் கொண்டிருந்த நொய்டா, எங்கே சென்றால் தங்களின் ஆட்சி நாற்காலி போய்விடுமோ என்று அஞ்சி முந்தைய ஆட்சியாளர்கள் வர அஞ்சிய நொய்டா... எனக்கு நினைவிருக்கிறது, இங்கு சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி இருந்தபோது, நான் நொய்டாவிற்கு வரத் திட்டமிட்டிருந்தேன். அப்போது முதலமைச்சர் அந்த அளவிற்குப் பயந்து, அந்த நிகழ்ச்சிக்கே வரவில்லை. மக்கள் என்னையும் பயமுறுத்தப் பார்த்தார்கள், "மோடி அவர்களே, நீங்கள் இப்போதுதான் பிரதமராகியிருக்கிறீர்கள், நொய்டாவிற்குப் போகாதீர்கள்" என்று கூறினார்கள். நான் சொன்னேன், "நான் இந்த மண்ணின் ஆசியைப் பெறப் போகிறேன், அது எனக்கு நீண்ட காலம் சேவை செய்யும் வாய்ப்பைத் தரும்" என்று. இப்போது அதே பகுதி உலகத்தையே வரவேற்கத் தயாராக உள்ளது. இந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் 'தற்சார்பு பெற்ற இந்தியா' என்ற உறுதிமொழியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

இந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் விவசாயத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. இன்று, இந்தத் திட்டத்தை நனவாக்குவதற்காகத் தங்கள் நிலங்களை வழங்கிய எனது விவசாயச் சகோதர சகோதரிகளுக்கு நான் குறிப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விவசாய நண்பர்களுக்காக உரக்கக் கைதட்டுங்கள், எனது விவசாயச் சகோதர சகோதரிகளுக்காக உரக்கக் கைதட்டுங்கள். எனது விவசாயச் சகோதர சகோதரிகளே, உங்களின் இந்த பங்களிப்பால் மட்டுமே இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப் போகிறது. இங்கே ஏற்பட்டு வரும் நவீன இணைப்புகளின் விரிவாக்கம், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த வாய்ப்புகளுக்கு மேலும் வலிமை சேர்க்கும். இனி, இங்கிருந்து விளைபொருட்கள் உலக சந்தைகளுக்கு இன்னும் சிறந்த முறையில் சென்றடைய முடியும்.

நண்பர்களே,

இங்கே எனது விவசாய நண்பர்களுக்கு இன்னும் ஒரு விஷயத்திற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் நாட்டின் சார்பு நிலை குறைந்துள்ளது. எத்தனால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்றால், பெட்ரோலில் அதன் கலப்பு அதிகரிக்கவில்லை என்றால், நாடு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளிலிருந்து நான்கு கோடியே ஐம்பது லட்சம் பேரல், அதாவது ஏறக்குறைய 700 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியிருந்திருக்கும். விவசாயிகளின் இந்த கடின உழைப்பு, இத்தகைய நெருக்கடியான காலத்திலும் நாட்டிற்கு இவ்வளவு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

நண்பர்களே,

எத்தனால் உற்பத்தியால் நாட்டிற்குப் பயன் கிடைத்ததோடு, விவசாயிகளுக்கும் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. அதாவது, எத்தனால் தயாரிக்கப்படவில்லை என்றால், இந்தத் தொகை வெளிநாட்டிற்குச் செல்வது உறுதியாகும். கடந்த சில ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொகை நம் நாட்டு விவசாயிகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது.

நண்பர்களே,

இங்கிருக்கும் கரும்பு விவசாயிகள், பல ஆண்டுகளாக கரும்புக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படாமல் இருந்த அந்த முந்தைய காலத்தையும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இன்று, பாஜகவின் 'இரட்டை என்ஜின்' அரசின் முயற்சிகளால், கரும்பு விவசாயிகளின் நிலை மேம்பட்டுள்ளது.

நண்பர்களே,

எந்தவொரு நாட்டிலும் விமான நிலையம் என்பது வெறும் பொது வசதி மட்டுமல்ல. இந்த விமான நிலையங்கள் முன்னேற்றத்திற்குச் சிறகுகளையும் அளிக்கின்றன. 2014-ம் ஆண்டிற்கு முன்பு, நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இன்று நாட்டில் 160-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இப்போது பெருநகரங்கள் தவிர, நாட்டின் சிறிய நகரங்களுக்கும் வான்வழித் தொடர்பு சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் இருந்த அரசுகள், விமானப் பயணம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்று நம்பியிருந்தன. ஆனால், பாஜக அரசு சாதாரண இந்தியர்களுக்கும் விமானப் பயணத்தை எளிதாக்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விமான நிலையங்களின் வலைப்பின்னலை எங்கள் அரசு மிக வேகமாக விரிவுபடுத்தி, அவற்றின் எண்ணிக்கையை 17 ஆக அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

விமான நிலையங்கள் கட்டப்பட வேண்டும், அதே சமயம் விமானக் கட்டணங்களும் சாமானியக் குடும்பங்களுக்கு எட்டக்கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜக அரசின் தொடர்ச்சியான முயற்சியாக இருந்து வருகிறது. இதற்காகவே நாங்கள் 'உடான்' திட்டத்தைத் தொடங்கினோம். இந்தத் திட்டத்தின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில், ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளனர். உங்களிடம் நான் மற்றொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில், மத்திய அரசு 'உடான்' திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் கீழ், சிறிய நகரங்களில் 100 புதிய விமான நிலையங்களையும், 200 புதிய ஹெலிகாப்டர் இறங்கு தளங்களையும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து உத்தரப் பிரதேசமும் மிகப்பெரிய அளவில் பயனடையும்.

நண்பர்களே,

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமான முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு வருகிறது. இந்தியாவில் புதிய விமான நிலையங்கள் கட்டப்படுவது போல, புதிய விமானங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. எனவேதான், நாட்டின் பல்வேறு விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. வரவிருக்கும் இந்த புதிய வசதிகள் மற்றும் புதிய விமானங்கள் - இவற்றை இயக்குபவர்கள், அவற்றில் சேவை வழங்குபவர்கள், பராமரிப்புத் துறையுடன் தொடர்புடையவர்கள் என இத்தகைய ஒவ்வொரு பணிக்கும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவைப்படுவார்கள். இது இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். எனவே, எங்கள் அரசு விமானப் போக்குவரத்துத் துறையில் பயிற்சிக்கான வசதிகளையும் விரிவுபடுத்தி வருகிறது.

நண்பர்களே,

நீங்கள் உங்களுக்காக ஒரு வாகனத்தை வாங்கும்போது, அந்த வாகனத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பழுது பார்ப்பு மையம்  அருகிலேயே இருக்கிறதா என்பதைத் தான் முதலில் கவனிப்பீர்கள். ஆனால், நம் நாட்டில் விமானங்களைப் பராமரிப்பதற்கென அதாவது அவற்றின் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் மேம்பாடு எந்தவொரு உறுதியான ஏற்பாடும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும். இன்றும்கூட, இந்தியாவில் உள்ள 85 சதவீத விமானங்களை இத்தகைய பராமரிப்புப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கே அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, எம்.ஆர்.ஓ துறையிலும் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டுமென எங்கள் அரசு உறுதியெடுத்துள்ளது. இப்போது இந்தியாவிலேயே எம்.ஆர்.ஓ வசதிகள் மிகப்பரிய அளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று ஜெவாரிலும் கூட, ஒரு எம்.ஆர்.ஓ தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த வசதி தயாரானதும், அது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்குச் சேவை வழங்கும். இதன் மூலம் நாட்டிற்கு வருமானம் கிடைப்பதோடு, நமது பணம் நாட்டிலேயே தங்கும், மேலும் இளைஞர்களுக்குப் பல வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

நண்பர்களே,

இன்று எங்கள் அரசின் முன்னுரிமை என்பது நாட்டின் குடிமக்களின் வசதிதான். குடிமக்களின் நேரத்தைச் சேமிக்க வேண்டும், அதேபோல் அவர்களின் பணப்பையில் அதிக சுமை விழக்கூடாது, இதுதான் எங்கள் இலக்கு. மெட்ரோ மற்றும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில் சேவைகள் இந்த உணர்வுடனேயே விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. டெல்லி-மீரட் 'நமோ பாரத்' ரயில்—இதன் மூலம் எவ்வளவு பலன்கள் கிடைத்து வருகின்றன என்பதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் நமோ பாரத்தில் பயணம் செய்துள்ளனர். பல மணிநேரம் எடுத்துக் கொண்ட டெல்லி-மீரட் பயணம், இன்று சில நிமிடங்களில் முடிவடைகிறது.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பிற்காக எங்கள் அரசு முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளைச் செய்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில், உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ஆறு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளுக்காக 17 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; ஒரு லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு வரை, ரயில்வேயில் 20 ஆயிரம் கிலோமீட்டர் வழித்தடங்களுக்கு மட்டுமே மின்மயமாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு 40 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இன்று அகலப்பாதை கட்டமைப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. இன்று கஷ்மீர் பள்ளத்தாக்கோ அல்லது வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களோ, முதன்முறையாக ரயில் வலைப்பின்னலுடன் இணைந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் துறைமுகங்களின் கொள்ளளவு இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள உள்நாட்டு நீர்வழிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'வளர்ச்சியடைந்த இந்தியா'வைக் கட்டமைப்பதற்குத் தேவையான ஒவ்வொரு துறையிலும் இந்தியா மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, ஒவ்வொருவரின் முயற்சியும் மிகவும் முக்கியமானது. 140 கோடி நாட்டு மக்களும் மிகுந்த கடின உழைப்பை மேற்கொண்டு, உலகளாவிய நெருக்கடிகளை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது அவசியம். தற்போது நடைபெற்று வரும் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, நான் நாடாளுமன்றத்திலும் விரிவாகக் கூறியுள்ளேன். நேற்றைய தினம் நாட்டின் அனைத்து முதலமைச்சர்களுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடினேன்; அது மிகவும் ஆக்கபூர்வமான விவாதமாக அமைந்தது. இன்று உங்கள் அனைவரிடமும், மக்கள் என்னும் வடிவில் இருக்கும் இறைவனிடம் (ஜனதா-ஜனார்தன்) மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், நாட்டு மக்களிடம் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த நெருக்கடியை நாம் அமைதியான மனதுடனும், பொறுமையுடனும், ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்தும் எதிர்கொள்ள வேண்டும். இது உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு நெருக்கடி. நாம் நமது நாட்டின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுதான் இந்தியர்களாகிய நமது மிகப்பெரிய பலம்.

உத்தரப் பிரதேசத்தின் மற்றும் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,  இத்தகைய நெருக்கடியான நேரத்தில் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியர்களுக்கு எது சாதகமோ, இந்தியாவின் நலனுக்காக எது இருக்கிறதோ, அது மட்டுமே இந்திய அரசின் கொள்கையும் வியூகமுமாகும். அரசியல் லாபத்திற்காகத் தவறான கருத்துகளைப் பேசுபவர்களுக்கு விவாதங்களில் சில புள்ளிகள் கிடைக்கலாம், ஆனால் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கொரானா என்ற பெரும் நெருக்கடியின் போதும், சிலர் வதந்திகளைப் பரப்பினர், தடுப்பூசி குறித்துப் பொய்களைக் கூறினர்; இதன் மூலம் அரசின் பணியைச் சிரமப்படுத்தி, நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்த முயன்றனர். அதன் முடிவு என்னவானது? தேர்தல்களின் போது மக்கள் அத்தகைய அரசியலை நிராகரித்தனர், புறக்கணித்தனர். நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நாட்டின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்குத் தங்களின் பலத்தையும் ஆதரவையும் வழங்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வேண்டுகோளுடன், இந்த அற்புதமான விமான நிலையத்திற்காக உத்தரப் பிரதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:

பாரத மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

மிக்க நன்றி.

(பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.)

----

(Release ID: 2246425)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2282314) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam