பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

“பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 03 MAR 2026 12:57PM by PIB Chennai

வணக்கம்!

கடந்த வாரம், பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு தொடரின் முதல் இணையவழி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது மிகவும் வெற்றிகரமாக இருந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீடுகளை செயல்படுத்துவது குறித்து அனைவரும் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அனைவரின் தீவிர பங்கேற்பையும் நான் வரவேற்கிறேன். இன்று, இந்தத் தொடரின் இரண்டாவது இணையவழி கருத்தரங்கு நடைபெறுகிறது. இன்று, ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தலைப்புகளில் எண்ணற்ற ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும், கல்வி வல்லுநர்களும் இணைவார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்த இவ்வளவு பெரிய அளவிலான விவாதம், மிகவும் வெற்றிகரமான ஒரு முயற்சியாகும். இந்த இணையவழி கருத்தரங்கில் இணைய நேரம் ஒதுக்கியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த இணையவழி கருத்தரங்கின் கருப்பொருள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு தொடர்புடையதாகும். இன்று, இந்தியா அதன் வலுவான பொருளாதாரத்துடன் உலகிற்கு நம்பிக்கையின் ஆதாரமாக மாறியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுவடிவமைப்பு செய்யப்படும்போது, ​​விரைவான பொருளாதார முன்னேற்றம் வளர்ந்த இந்தியாவிற்கு ஒரு முக்கிய அடித்தளமாகும். எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. எங்கள் தீர்மானம் தெளிவாக உள்ளது. அதிகமாக உருவாக்குவது, அதிகமாக உற்பத்தி செய்யவது, அதிகமாக ஏற்றுமதி செய்வதுதான். நிச்சயமாக, இன்று உங்களுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் இந்த அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, நமது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், நமது சிறிய, பெரிய நகரங்கள் இவையெல்லாம் வேறுபட்டதாகத் தோன்றினாலும் அனைத்தும் பொருளாதாரத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தூண்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உதாரணமாக, வலுவான உற்பத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது ஏற்றுமதியை அதிகரிக்கிறது. போட்டித்தன்மை வாய்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நெகிழ்வுத்தன்மையையும் புதுமைகளையும் ஊக்குவிக்கின்றன. சிறந்த சரக்கு போக்குவரத்து அம்சங்கள் செலவுகளைக் குறைக்கின்றன. நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் முதலீடு, திறன் இரண்டையும் ஈர்க்கின்றன. இந்த ஆண்டு பட்ஜெட் இந்த அனைத்து தூண்களுக்கும் பெரும் பலத்தை அளித்துள்ளது.

நண்பர்களே,

எந்த ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் அது தானாகவே பலன்களைத் தராது. தொழில்துறை, நிதி நிறுவனங்கள், மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும். இந்த இணையக் கருத்தரங்கில், உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம், செலவு கட்டமைப்புகளை எவ்வாறு போட்டித்தன்மையுடன் மாற்றலாம், முதலீடுகளை எவ்வாறு துரிதப்படுத்தலாம், நாட்டின் ஒவ்வொரு மூலையையும் வளர்ச்சி எவ்வாறு சென்றடைய வேண்டும் என்பன போன்ற சில தலைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தில் உங்கள் பரிந்துரைகள் மிக முக்கியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

உற்பத்தித் துறையில், நாடு இன்று அதன் முக்கிய தொழில் திறன்களை வலுப்படுத்தி வருகிறது. இந்தப் பாதையில் உள்ள சவால்களும் தீர்க்கப்படுகின்றன. அர்ப்பணிக்கப்பட்ட அரிய புவி கனிம வழித்தடங்கள், கொள்கலன் உற்பத்தி போன்ற துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நமது வர்த்தகச் சூழல் அமைப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். பட்ஜெட்டில் பயோஃபார்மா சக்தி எனப்படும் உயிரி மருந்து சக்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நோக்கம், உயிரியல் சிகிச்சை, அடுத்த தலைமுறை நவீன சிகிச்சை போன்றவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட பயோஃபார்மா ஆராய்ச்சி, உற்பத்தி ஆகியவற்றில் தலைமைத்துவத்தை நோக்கி நாம் முன்னேற விரும்புகிறோம்.

நண்பர்களே,

இன்று, உலகம் நம்பகமான உற்பத்தி ஒத்துழைப்பாளர்களைத் தேடுகிறது. இந்தப் பங்கை வலுவாக ஆற்ற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. இதற்காக, அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நம்பிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சியில் மிக குறைவான கவனம் செலுத்தும் சகாப்தம் போய்விட்டது. இப்போது நாம் ஆராய்ச்சியில் பெரிய முதலீடுகளைச் செய்கிறோம். உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். வாய்ப்புகள் நம் வழியில் வரும்போது, ​​நமது ஒரே மந்திரம், 'தரம், தரம், தரம்' என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்.

நண்பர்களே,

 

இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகளின் நுழைவாயிலைத் திறந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாமல் இருப்பது நமது பொறுப்பு. ஒரு விஷயத்தில் நாம் மிகப்பெரிய பலம், ஞானம், முயற்சி ஆகியவற்றைச் செலுத்த வேண்டும் என்றால், அது தரமானதாக இருக்க வேண்டும். நமது தயாரிப்புகளின் தரம் உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் அவற்றை விஞ்ச வேண்டும். இதற்காக, நாம் மற்ற நாடுகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும், அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளில் உள்ள மக்களின் விருப்பங்களையும் வசதியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய தேவை. அதில் அதிக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். யாராவது ஒரு பெரிய கப்பலைக் கட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் சிறிய பாகங்களை நம்மிடம் கோருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது  குறைவான தரத்தில் அந்த பாகத்தை அனுப்பினால், அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? நமக்கு, அது ஒரு சிறிய பாகங்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பெரிய உற்பத்திப் பிரிவில், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான், இன்றைய போட்டி உலகில், தரம் நமக்கு பொன்னான வாய்ப்புகளை உருவாக்குகிறது. அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பயனர்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இப்போது வளர்ச்சியின் பாதை உங்களுக்காகத் தயாராக உள்ளது. இந்த இணைய வழிக் கருத்தரங்கில், உங்கள் விவாதங்களில் இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

 

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வகைப்பாட்டில் நாங்கள் செய்த சீர்திருத்தங்கள் பரவலான தாக்கத்தைக் காட்டுகின்றன. நிறுவனங்கள் விரிவடைந்தால், அரசால் வழங்கப்படும் சலுகைகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் இனி இல்லை. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்கும், தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே,

வெற்றியை இலக்காகக் கொண்டு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியில் நுழையும்போது மட்டுமே இந்த முயற்சிகள் பலனைத் தரும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், தர நிலைகளை உயர்த்தவும், டிஜிட்டல் செயல்முறைகளை ஏற்றுக்கொள்ளவும், வலுவான மதிப்புச் சங்கிலிகளுடன் இணையவும் இதுவே சரியான நேரம். இந்த திசையில், இந்த இணையவழிக் கருத்தரங்கில் உங்கள் பரிந்துரைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகியவை நமது வளர்ச்சி உத்தியின் முக்கிய தூண்கள். இந்த ஆண்டு பட்ஜெட் சாதனை அளவில் மூலதன செலவினத்தை முன்மொழிந்துள்ளது. அதிக திறன் கொண்ட போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குதல், ரயில்வே, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, பல்வேறு சரக்கு வழித்தடங்களின் விரிவாக்கம், பல்நோக்கு இணைப்பு என இந்த அனைத்து நடவடிக்கைகளும் செலவுகளைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்தும். எனவே, புதிய நீர்வழிகள், கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள், பிராந்திய சிறப்பு மையங்கள் ஆகியவை நமது சரக்கு போக்குவரத்துச் சூழல் அமைப்பை வலுப்படுத்தும். ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் வளர்ச்சிக்கான போக்குவரத்து இணைப்புகளாக மாறப் போகின்றன. ஆனால் இந்த உள்கட்டமைப்பின் உண்மையான நன்மை தொழில்துறையினரும் முதலீட்டாளர்களும் தங்கள் உத்திகளை இந்த தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கும்போதுதான் வரும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த உத்திகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் விரிவாக விவாதிக்க வேண்டும். மேலும் இந்த விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நகரமயமாக்கலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி, நமது நகரங்களை எவ்வளவு திறம்பட திட்டமிட்டு நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நமது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் புதிய வளர்ச்சி அம்சங்களாகின்றன. இந்த பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கில் உங்கள் பரிந்துரைகள் இதற்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.

நண்பர்களே,

உலகப் பொருளாதாரத்தில் இப்போது ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சந்தைகள் இப்போது செலவுகளை மட்டும் பார்க்கவில்லை. அவை நிலைத்தன்மையையும் பார்க்கின்றன. இந்த திசையில், கார்பன் குறைப்பு ஒரு முக்கியமான முயற்சியாகும். இப்போது நிலைத்தன்மை உங்கள் முக்கிய வணிக உத்தியின் ஒரு பகுதியாக மாற வேண்டும். சரியான நேரத்தில் தூய பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் தொழில்கள் வரும் ஆண்டுகளில் புதிய சந்தைகளுக்கு சிறந்த அணுகலைப் பெறும். இந்த ஆண்டு பட்ஜெட் ஒரு புதிய திசையை வழங்கியுள்ளது. இதில் தொழில்கள், முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் இணைந்து முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கைக் கூட்டு உரிமை மூலம் மட்டுமே அடைய முடியும். இந்த பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு வெறும் விவாதத்திற்கான தளமாகவோ அல்லது அறிவைச் சேகரிப்பதற்கான தளமாகவோ மட்டும் இருக்கக்கூடாது. இது கூட்டு உரிமையைக் காட்ட வேண்டும். அது மிகவும் அவசியம். பட்ஜெட் ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது. இப்போது நீங்கள் ஒன்றாக இணைந்து உத்வேகத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் எங்கள் முயற்சிகளில் பங்கேற்பாளர்களாக மாற வேண்டும். உங்கள் ஒவ்வொரு ஆலோசனையும், ஒவ்வொரு அனுபவமும் களத்தில் சிறந்த முடிவுகளைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உங்கள் பரிந்துரைகள் நாட்டின் முன்னேற்றத்தில் மைல்கற்களாக மாறட்டும்.

மிக்க நன்றி.

வணக்கம்!

***

(Release ID: 2234906)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281675) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam , Urdu , Bengali , Manipuri , Odia , English , Marathi , Telugu