உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930-ன் செயல்பாட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 17 JUN 2026 8:04PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 'தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930'-ன் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இந்த முறையை மேலும் மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இணையவழிக் குற்றங்கள், குறிப்பாக நிதி மோசடிகளிலிருந்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நிதி சார்ந்த இணையவழி மோசடிகள் தொடர்பான புகார்களைக் குடிமக்கள் எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்வதற்கு, 'தேசிய இணையவழி குற்ற உதவி எண் 1930' ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த உதவி எண் மூலம் உதவி கோரும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய நேரத்தில் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும், எந்தவொரு புகாரும் கவனிக்கப்படாமலோ, நிலுவையிலோ இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

1930 என்ற உதவி எண் அமைப்புமுறையின் செயல்திறன், பதிலளிக்கும் திறன், சேவை வழங்கல் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதனை முழுமையாக நவீனப்படுத்த திரு அமித் ஷா உத்தரவிட்டார். அழைப்புகளைத் திறம்பட நிர்வகிப்பதையும், அவற்றை உரிய நிலைகளுக்குத் தடையின்றிப் பரிமாற்றம் செய்வதையும் உறுதிசெய்யும் வகையில், மாநில அளவிலான '1930' அழைப்பு மையங்கள் அனைத்தையும் வலுவான 'ஊடாடும் குரல் பதில்' (ஐவிஆர்) அமைப்புமுறைகளுடன் மேம்படுத்துமாறு திரு அமித் ஷா உத்தரவிட்டார்.

 

தேசிய அளவிலான இணையவழி குற்றத் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், போதுமான பணியாளர்கள், அழைப்புமுறைகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு தேசிய அளவிலான '1930' அழைப்பு மையத்தை அமைக்குமாறு அவர் உத்தரவிட்டார். மாநில அளவில் பதிலளிக்கப்படாமல் இருக்கும் அழைப்புகளை இந்தத் தேசிய மையம் கையாள்வதுடன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உரிய நேரத்தில் உதவி கிடைப்பதையும், புகார்கள் விரைவாகப் பதிவு செய்யப்படுவதையும் இது உறுதி செய்யும்.

நிதிசார் இணைய மோசடிகளை எதிர்கொள்வதற்காக உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய முன்முயற்சியான குடிமக்கள் நிதிசார் இணையவழி மோசடி புகாரளிப்பு மற்றும் மேலாண்மை அமைப்புமுறையின்  செயல்பாடுகளும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. வங்கிச் சேவை வலையமைப்பு வாயிலாக மோசடி நிதிப் பரிவர்த்தனைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இந்த அமைப்புமுறை உதவுகிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274249&reg=3&lang=1   

***

SS/RB/PD


(रिलीज़ आईडी: 2276564) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam