பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசிய நிலவரம் குறித்த அமைச்சகங்களுக்கு இடையிலான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 04 JUN 2026 6:19PM by PIB Chennai

மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் தட்டுப்பாடின்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சர்வதேச அளவில் எரிபொருள் விலையின் கடும் ஏற்ற இறக்கத்திலிருந்து பயணிகளைக் பாதுகாக்கவும், விமானச் சேவைகளின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இந்திய விமான நிறுவனங்களுக்கு ₹10,000 கோடி வரையிலான விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் ஆதரவு நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மானியம் அல்ல, தற்காலிக சீரமைப்புக்கான ஏற்பாடாகும். இம்முடிவு நாட்டினுடைய தொலைதூர மற்றும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கான தடையற்ற விமான போக்குவரத்து இணைப்பை பராமரிக்க பெரிதும் உதவுவதோடு விமானத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும்.

எரிசக்தித் துறையைப் பொறுத்தவரை, நாட்டின் அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்போடு முழு திறனுடன் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவில் உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 1.50 கோடி சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டதில், 1.43 கோடி வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், நேற்று (ஜூன் 3,2026) வரை 80,400-க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் தங்களின் எல்பிஜி இணைப்புகளை இணையதளம் வழியாகத் திரும்ப ஒப்படைத்துள்ளனர். மருந்து மற்றும் பெயிண்ட் துறைகளுக்குத் தேவையான மூலக்கூறுகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், எரிபொருட்களைப் அதிகளவில் வாங்குவதைத் தவிர்க்குமாறும் இந்த கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் 28 பேர் உட்பட இதுவரை மொத்தம் 3,474 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர். இதற்கிடையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் நாளை இந்தியா கொண்டு வரப்படவுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த 13 இந்தியர்களுக்கு குவைத்தில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும் விளக்கப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268996&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2269120) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam