பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர்  நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 9:19PM by PIB Chennai

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதற்காக இன்று நான் இங்கே நிற்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஆதரித்து, எனது உணர்வுகளை இந்த அவையின் முன் சமர்ப்பிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில், கடந்த ஓர் ஆண்டு என்பது அதிவேக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஒரு மாறி வரும் கட்டத்தைக் கண்டுள்ளனர். நாடு சரியான திசையில், மிக வேகமான வேகத்தில் முன்னேறி வருகிறது.

மாண்புமிகு குடியரசுத்தலைவர் இதனை மிகுந்த உணர்வுபூர்வமாகவும், தெளிவுடனும் நமது முன்னால் முன்வைத்துள்ளார்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் உள்ளது. மாண்புமிகு திரு. கார்கே அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர் அமர்ந்தபடியே கோஷங்களை எழுப்பினால் நன்றாக இருக்கும், அப்போதுதான் அவருக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது. அவருக்குப் பின்னால் பல இளம் உறுப்பினர்கள் உள்ளனர், எனவே கார்கே அவர்கள் தனது இடத்திலிருந்தே கோஷங்களை எழுப்ப தயவுசெய்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் அவர்கள் நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், பெண்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் குறித்து விரிவாகப் பேசினார். அவரது வார்த்தைகள் இந்தியாவின் வளர்ச்சியை நாடாளுமன்றம் முழுவதும் எதிரொலிக்கச் செய்தது. இந்தியாவின் வலிமையை இளைஞர்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் திறன்களையும் அவர் கோடிட்டுக் காட்டியதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதுவே நம் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

21-ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி நிறைவடைந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி தீர்க்கமானதாக அமைந்ததோ, அதேபோல் இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியும் சமமான வலிமையுடன் இருக்கும் என்பதையும், இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு அடுத்த 25 ஆண்டுகளில் அதிவேகமான வளர்ச்சி இருக்கும் என்பதையும்  தெளிவாக காணமுடிகிறது.

எனவே, மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நாம் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர்கிறார்கள். நாம் இடைநிற்கவோ, பின்னோக்கிப் பார்க்கவோ கூடாது. நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும், இன்னும் வேகமாக நகர வேண்டும், நமது இலக்குகளை அடைந்த பிறகுதான் நாம் மூச்சு விட வேண்டும். இந்தத் திசையில்தான் நாம் முன்னேறி வருகிறோம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

தற்போது, இந்தியா ஒரே நேரத்தில் பல சாதகமான சூழ்நிலைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஒரு அரிய மற்றும் அதிர்ஷ்டமான தருணம். மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உலகின் பணக்கார நாடுகள் வயதாகிக் கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள மக்கள் மூத்த நிலையை எட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமது நாடோ புதிய வளர்ச்சிச் சிகரங்களை எட்டுவதோடு மட்டுமல்லாமல், அதே நேரத்தில் இளமையாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா இளைஞர்களின் தேசம், இது நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பலம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

மற்றொரு புறம், இந்தியாவின் மீதான வளர்ந்து வரும் உலகளாவிய ஈர்ப்பையும், இந்தியாவின் திறமைக்கான அங்கீகாரத்தையும் நான் காண்கிறேன். இன்று, உலகின் மிக முக்கியமான திறமைசாலிகள் கூட்டத்தை - இளமையான, லட்சியம் கொண்ட, உறுதியான மற்றும் திறமையான இளைஞர்களை - நாம் கொண்டிருக்கிறோம். இது நமக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு ஆசீர்வாதம், ஒரு உண்மையான வலிமை.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இன்று இந்தியா, உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. மற்றொரு சாதகமான சூழல் என்னவென்றால், உலகின் பெரும் பொருளாதார நாடுகளுக்கிடையே, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதோடு, பணவீக்கம் குறைவாகவும் உள்ளது. இந்தத் தனித்துவமான கலவை நமது பொருளாதாரத்தின் வலிமையை பறைசாற்றுகிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இந்த நாட்டு மக்கள் எங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியபோது, இந்தியா பலவீனமான ஐந்து நாடுகளின் ("Fragile Five") பட்டியலில் ஒன்றாகக் கருதப்பட்டது. சுதந்திரத்தின் போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருந்த நாம், முந்தையத் தலைமையின் கீழ் பதினொன்றாவது இடத்திற்குச் சரிந்தோம். ஆனால் இன்று, நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற அதிவேகமாக முன்னேறி வருகிறோம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

அறிவியல், விண்வெளி, விளையாட்டு என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், இன்று இந்தியா மிகுந்த நம்பிக்கையுடனும் சுயபலத்துடனும் நிமிர்ந்து நிற்கிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, புதிய சவால்களை எதிர்கொள்ள உலகம் திணறி வரும் நிலையில், உலகம் ஒரு புதிய உலகளாவிய ஒழுங்கை  நோக்கி நகர்வது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு உலக ஒழுங்கு உருவானது; இப்போது ஒரு புதிய ஒழுங்கு மிக விரைவாகத் தோன்றி வருகிறது. இந்த வளர்ச்சிகளை நடுநிலையோடு பகுப்பாய்வு செய்தால், அவற்றின் சாய்வு இந்தியாவின் பக்கம் இருப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் காண முடிகிறது. ஒரு நம்பகமான பங்காளியாகவும் நண்பனாகவும், பல நாடுகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக மாறியுள்ளது. நமது வலிமையால் உலக நலனுக்குப் பங்களிப்பதன் மூலம், நாம் உலக நாடுகளுடன் தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறோம்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இன்று முழு உலகமும் 'குளோபல் சவுத்' குறித்துப் பேசுகிறது, சர்வதேச மேடைகளில் இந்தியா அதன் கம்பீரமான குரலாக மாறியுள்ளது. பல நாடுகளுடன் இந்தியா "எதிர்காலத்திற்குத் தயாரான வர்த்தக ஒப்பந்தங்களை" மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடனான "ஒப்பந்தங்களின் தாய்" உள்ளிட்ட ஒன்பது முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை நாம் முடித்துள்ளோம். சோர்வடைந்து மேடையை விட்டு வெளியேறியவர்கள், எந்த ஒரு நாடும் நம்முடன் வர்த்தகம் செய்ய முன்வராத நிலைக்கு இந்தத் தேசத்தை ஏன் தள்ளினார்கள் என்பதற்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஒருவேளை அவர்கள் முயற்சி செய்திருக்கலாம், பலமுறை சுற்றியிருக்கலாம், ஆனால் யாரும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. இத்தகைய சூழல் எப்படி உருவானது? இன்று நாடுகள் இந்தியாவுடன் எதேச்சையாக ஒப்பந்தம் செய்யவில்லைஇந்தியாவின் வலிமையையும் அந்தஸ்தையும் கண்டே அவை முன்வருகின்றன.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

வளர்ந்த நாடுகள் ஒரு வளர்ந்து வரும் நாட்டுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அது உலகப் பொருளாதார சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது என்பதே இங்கு மிக முக்கியமான விஷயம். இது எனக்குப் புதியதல்ல. நான் குஜராத்தில் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தபோது, துடிப்பான குஜராத்' உச்சிமாநாட்டை நடத்தினேன். இந்தியாவின் ஒரு மாநிலமான குஜராத், ஜப்பான் போன்ற ஒரு வளர்ந்த நாட்டைத் தனது பங்காளி நாடாகக் கொண்டிருந்ததைக் கண்டு நான் பெருமிதம் கொண்டேன். அன்று ஒரு மாநிலம் அந்தத் திறமையை நிரூபித்தது, இன்று எனது தேசம் தேசிய அளவில் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உங்களிடம் பொருளாதார வலிமை இருக்கும்போதும், உங்கள் குடிமக்கள் உற்சாகமாக இருக்கும்போதும், உற்பத்திக்கான வலுவான சூழல் அமைப்பை நீங்கள் கொண்டிருக்கும்போதும் மட்டுமே இது சாத்தியமாகும். அப்போதுதான் உலகம் உங்களுடன் கைகோர்க்க முன்வரும் வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியிருப்பவர்கள், தேசத்தின் இத்தகைய அம்சங்களை வலுப்படுத்துவதற்கு ஒருபோதும் முன்னுரிமை அளித்ததில்லை, அதன் விளைவு இன்று கண்கூடாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன்: எனது வார்த்தைகளை நீங்கள் நம்பவில்லை என்றால், இந்த நாட்டு மக்கள் செங்கோட்டையிலிருந்து காங்கிரஸ் பிரதமர்கள் ஆற்றிய உரைகளை மட்டும் ஒருமுறை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு எந்தத் தொலைநோக்குப் பார்வையும், புதிய சிந்தனைகளும், மன உறுதியும் இல்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்அதன் காரணமாகவே இந்தத் தேசம் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

எனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கிய இந்த நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று எங்களது வலிமையின் பெரும் பகுதி, அவர்கள் செய்த தவறுகளைச் சரி செய்வதிலேயே செலவிடப்படுகிறது. அவர்கள் காலத்தில் உலக நாடுகளின் மத்தியில் இந்தியா கொண்டிருந்த பிம்பத்தை அழிப்பதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது. அவர்கள் இந்தத் தேசத்தைச் சிதைந்த நிலையில் விட்டுச் சென்றனர். இதனைச் சரி செய்யவே, நாங்கள் "எதிர்காலத்திற்குத் தயாரான" கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம். இன்று இந்த நாடு தற்காலிக முடிவுகளால் அல்லாமல், முறையான கொள்கைகளால் ஆளப்படுவதை நீங்கள் காணலாம்; இதுவே உலகளாவிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

நாங்கள் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்துடன் முன்னேறினோம், இன்று தேசம் "சீர்திருத்த விரைவு வண்டியில்" பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், நடைமுறைச் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்கும், இந்தியா உற்பத்தி செய்யும் ஒவ்வொன்றிலும் மதிப்பு கூட்டப்படுவதை உறுதி செய்வதற்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். இந்தியா இன்று உலகத்துடன் போட்டியிட முழுமையாகத் தயாராக உள்ளது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். நான் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளின்  கூட்டங்களில் பங்கேற்கும்போது, உலகம் இப்போது நமது தொழில்முனைவோரைத் தங்களுக்குச் சமமாகப் பார்ப்பதை நான் காண்கிறேன். சமீபத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியபோது, இந்தியா சமமாக நடத்தப்படுவதாக மாண்புமிகு உறுப்பினர்கள் என்னிடம் பெருமையுடன் கூறினர். இதுவே ஒரு பெரிய சாதனையாகும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

பரந்து விரிந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கட்டமைப்பு, பொருளாதாரத்தின் நீண்டகால வலிமையாகும். இந்தத் துறைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று, நமது குறு, சிறு நிறுவனங்கள் மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. நாம் முழுமையான விமானங்களை உற்பத்தி செய்யாமல் இருக்கலாம், ஆனால் விமானங்களில் உள்ள பல பாகங்கள் இந்தியாவின் மிகச்சிறிய குறு, சிறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இந்த முயற்சிகளின் முடிவுகள் இப்போது அனைவருக்கும் கண்கூடாகத் தெரிகின்றன. உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆவலாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தமாகட்டும் அல்லது சமீபத்தில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகட்டும் - இதைப் பற்றி நமது சக உறுப்பினர் திரு.பியூஷ் கோயல் இந்த அவையில் விரிவான தகவல்களை வழங்கினார் - ஒட்டுமொத்த உலகமும் இந்த ஒப்பந்தங்களை பகிரங்கமாகப் பாராட்டி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானபோது, உலகளாவிய ஸ்திரத்தன்மை அதிகரித்து வருவதாக உலகம் நம்பிக்கை கொண்டது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, உலகம் ஸ்திரத்தன்மையை மட்டுமல்லாமல், ஒரு வேகத்தையும் உணர்ந்தது. இது உலகிற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இதன் மூலம் மிகப்பெரிய பலனைப் பெறப்போவது நமது நாட்டு இளைஞர்கள்தான். நான் இளைஞர்கள் என்று சொல்லும்போது, நடுத்தர வர்க்கத்தினர், நகரங்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மகன்களையும் மகள்களையும் குறிப்பிடுகிறேன். நாம் அவர்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. இந்தியாவின் இளைஞர் சக்தியைக் கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகச் சந்தை இப்போது அவர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, அது எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நான் அவர்களுக்குச் சொல்கிறேன்: நண்பர்களே, முன்னே வாருங்கள்! நான் உங்களுடன் தோளோடு தோள் நின்று கொண்டிருக்கிறேன். தைரியமாக இருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள்! தேசம் உங்களுடன் நிற்கிறது, உலகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

உலகம் முழுவதும் நமது இளம் நிபுணர்களுக்கானத் தேவை அதிகரித்து வருகிறது - பராமரிப்புப் பணியாளர்கள் உட்பட. நான் எங்கு சென்றாலும், தங்களுக்கு அத்தகைய திறமையாளர்கள் தேவை என்று மக்கள் கூறுகிறார்கள். தகுதியான நிபுணர்களைத் தேடுவதற்கும் பணியமர்த்துவதற்கும் சில நாடுகள் இங்கே சிறப்பு அலுவலகங்களைக் கூட அமைத்து வருகின்றன. இதன் பொருள், இந்தியாவின் நிபுணர்களுக்கு உலக அளவில் பிரம்மாண்டமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்பதாகும்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

நாடாளுமன்றத்தின் இந்த மேலவை மாநிலங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இங்கு நடைபெற்ற விவாதங்களின் விவரங்களைக் கவனிக்கும்போது, விவாதத்தின் தரம் இன்னும் உயர்வாக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். குறிப்பாக, இத்தனை ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்களிடமிருந்து வரும் விவாதத்தின் தரம் உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்பை வீணடித்துவிட்டார்கள். இந்த நாடு அவர்களை எப்படி நம்பும்?

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நேற்று, ஒரு மாண்புமிகு உறுப்பினர் பேசுவதைக் கேட்டேன்; அவர் தன்னை ஒரு 'அரசர்' என்று பெருமையுடன் அழைத்துக்கொள்கிறார். ஆனால் அவர் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். கற்பனை செய்து பாருங்கள்! தன்னை ஒரு அரசன் என்று கூறிக்கொள்பவர் சமத்துவமின்மையைப் பற்றிப்  பேசுவதை  நாம் பார்க்க வேண்டியிருந்தது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமது சகாக்கள் நீண்ட நேரம் பேசினார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்குள்ளே ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும். அவர்களின் அரசாங்கம் ஈவுஇரக்கமற்றது, வீழ்ச்சியின் ஒவ்வொரு அளவுகோலிலும் புதிய சாதனைகளை அது படைத்து வருகிறது, இருப்பினும் அவர்கள் இங்கே வந்து நமக்கு பாடம் எடுக்கிறார்கள். அத்தகைய ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்காலம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார சுகம் மட்டுமே அவர்களின் ஒரே லட்சியமாக இருக்கிறது. வளர்ந்த நாடுகள் கூட சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்றுகின்றன, ஆனால் நமது நாட்டில், ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதற்காக நீதித்துறையின் மீது கூட அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இளைஞர்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் பழங்குடியினரின் நிலங்களைப் பறிக்கும் ஊடுருவல்காரர்களை ஆதரிப்பவர்களையும், நமது மகன்கள் மற்றும் மகள்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களைத் தற்காத்துப் பேசுபவர்களையும் இந்தியாவின் இளைஞர்கள் எப்படி மன்னிப்பார்கள்?

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன, ஆனாலும் அவர்கள் அலட்சியமாகவே இருக்கிறார்கள். அதிகார அரசியலைத் தவிர அவர்கள் எதையும் செய்வதில்லை, பிறகு இங்கே வந்து நமக்கு உபதேசம் செய்கிறார்கள். இவ்வளவு தீவிரமான பிரச்சினைகளில் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். மற்றொரு மாண்புமிகு உறுப்பினர் நீண்ட நேரம் பேசினார்; அவரது அரசு முழுவதுமே மதுபானத்தில் மூழ்கியுள்ளது, அவர்களின் கண்ணாடி மாளிகைகள் ஒவ்வொரு வீட்டிலும் வெறுப்பின் அடையாளமாக மாறிவிட்டன. அதனால்தான் அவர்கள் "கருப்பு" என்ற வார்த்தையை விரும்புகிறார்கள் போலும். ஒவ்வொருவருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு - "கருப்புடன் அவர்களுக்கு என்ன பழைய தொடர்பு இருக்கிறதோ, யாருக்குத் தெரியும்!

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இத்தகைய சகாக்கள் அனைவருக்கும் நான் இன்று ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்: இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீங்கள் உலகை ஏமாற்றுவீர்கள்? இன்னும் எவ்வளவு காலத்திற்கு உலகை ஏமாற்றுவீர்கள்? நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, உங்கள் உண்மையை எங்கே மறைப்பீர்கள்? காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் என இவர்கள் அனைவரும் பல தசாப்தங்களாக மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மாநிலங்களிலும் ஆட்சி செய்ய அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இன்று அவர்களின் அடையாளம் என்ன?

இப்போது ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசும்போது, நாம் பெருமையுடன் பேசுகிறோம். ஆனால் அவர்கள் காலத்தில் ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசினால், 'போஃபர்ஸ்' ஒப்பந்தம் தான் நினைவுக்கு வரும். அவைதான் அவர்களின் ஒப்பந்தங்கள். அவர்கள் தங்கள் பாக்கெட்டுகளை மட்டுமே நிரப்பிக் கொண்டனர். குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவர்களின் முன்னுரிமையாக ஒருபோதும் இருந்ததில்லை.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

விவாதத்தில் இந்தத் தலைப்புகள் வந்திருப்பதால் நான் சில உதாரணங்களைக் கூற வேண்டியுள்ளது. பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கித் துறையைச் சான்றாகக் கூறுகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, அது "போன் பேங்கிங்" காலம். தலைவர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வார்கள், அதன் அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாரி வழங்கப்பட்டன. அதே சமயம் ஏழைகள் வங்கிகளில் அவமதிக்கப்பட்டனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வங்கிகளின் கதவுகளைக் கூட பார்த்ததில்லை. காங்கிரஸ் தலைவர்களின் ஒரு போன் காலில் பில்லியன்கள் வாரி வழங்கப்பட்டன; அந்தப் பணத்தைப் பெற்றவர்கள் அதைத் தங்கள் சொந்தச் சொத்தாகக் கருதினர். இதுதான் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த விளையாட்டு.

இன்று 'இந்தியா' கூட்டணி என்று சொல்லப்படும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வங்கி அமைப்புகள் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தன. நான் முதன்முதலில் பிரதமரானபோது, மற்றொரு நாட்டின் தலைவருடன் பேசினேன். வங்கித் துறையில் நாம் முன்னேற வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்கு அவர், "ஐயா, நீங்கள் புதியவர் - முன்னேற்றத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன் முதலில் உங்கள் நாட்டு வங்கி முறையைப் பற்றிப் படியுங்கள். அதை நாங்கள் எப்படி நம்புவது?" என்றார். அந்தத் தலைவருக்கு உண்மை நிலை தெரிந்திருந்தது. ஆனால் இங்கே இருந்தவர்களுக்குக் கவலை இல்லை. வராக்கடன் (மலைபோல் குவிந்திருந்தது. எங்கு பார்த்தாலும், "வராக்கடன் என்னவாகும்? நாம் எப்படித் தப்பிப்போம்?" என்பதுதான் விவாதமாக இருந்தது.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

சவால் மிகப் பெரியதாக இருந்தது, ஆனால் நாங்கள் விவேகத்துடன் செயல்பட்டோம். வங்கி அமைப்பின் அனைத்துப் பங்குதாரர்களையும் நம்பிக்கைக்குள் கொண்டு வந்தோம். சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன, அவற்றை நாங்கள் துணிச்சலுடன் மேற்கொண்டோம். நாங்கள் ஒரு வெளிப்படையான அமைப்பை உருவாக்கினோம், ஏராளமான வங்கிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினோம், மேலும் நலிந்த பொதுத்துறை வங்கிகளை வலுவான வங்கிகளுடன் இணைத்தோம். மிகவும் கற்றறிந்தவராகத் தன்னைக் கருதிக்கொண்ட ஒரு கனவான் ஒருமுறை எழுதியது எனக்கு நினைவிருக்கிறது: "மோடி அரசாங்கத்தால் வங்கிகளைச் சீர்திருத்த முடிந்தால், அது இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக இருக்கும்." நான் பதவி ஏற்ற உடனேயே அந்தப் பணியைச் செய்து முடித்தேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, நமது வங்கிகளில் வேரூன்றி இருந்த அந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் ஆரோக்கியம் சீராக மேம்பட்டு, தொடர்ந்து வலுவடைந்து வருகிறது, இப்போது அவை வேகமெடுத்து ஓடுகின்றன. வங்கிகளின் ஆரோக்கியம் மேம்பட்டதால், பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தன, சாதாரண குடிமக்களுக்குக் கடன் கிடைக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் வங்கிகளின் கதவுகள் யாருக்கு மூடப்பட்டிருந்ததோ, அந்த ஏழைகளுக்கும் கடன்கள் வழங்கப்பட்டன. இன்று, முத்ரா திட்டம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க அதிகாரம் அளிக்கிறது. இது சுயதொழிலை ஊக்குவிக்கிறது, ஆனால் சுயதொழில் என்பது வெறும் பேச்சால் மட்டும் வந்துவிடாது - அதற்கு ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் உதவி தேவை. முத்ரா திட்டத்தின் மூலம், எந்தவித பிணையும் இல்லாமல் 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை நேரடியாக நமது இளைஞர்களின் கைகளில் வழங்கியுள்ளோம். அவர்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்தியுள்ளனர், மேலும் இதில் அதிகளவிலான பெண்கள் பயனாளிகளாக மாறியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.

சுயதொழில் புரியும் பெண்களின் சுயஉதவிக் குழுக்கள், சுதந்திரமாக நிற்க விரும்பிய பெரிய கனவுகளைக் கொண்ட கிராமப்புறப் பெண்கள் ஆகியோர் இதன் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் சுயஉதவிக் குழுக்களின் வீச்சை விரிவுபடுத்தி, 10 கோடி பெண்களுக்கு நேரடி நிதி உதவியை வழங்கினோம். நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்குத் தாராளமாகக் கடன்கள் கிடைத்துள்ளன. இன்று, மிகுந்த திருப்தியுடனும் பொறுப்புணர்வுடனும் இந்த மேன்மையான அவையில் நான் ஒன்றை அறிவிக்கிறேன்: 2014-ம் ஆண்டுக்கு முன் மலைபோல் குவிந்து கிடந்த வராக்கடன்கள் இப்போது 1 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளன. வங்கித் துறையின் ஆரோக்கியத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அதுமட்டுமல்லாமல், நமது வங்கிகள் இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க லாபத்தைப் பதிவு செய்து வருகின்றன. ஒரு வலுவான வங்கி அமைப்பு ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பலப்படுத்துகிறது, அந்தப் பணியை நாங்கள் செம்மையாகச் செய்துள்ளோம்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன். நமது பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு காலத்தில் தோல்வியடையப் போகும் நிறுவனங்களாகவும், சரிந்து விழப்போகும் அல்லது மூடப்படப்போகும் நிறுவனங்களாகவும் பரவலாகக் கருதப்பட்டன. உண்மைகளின் அடிப்படையில் அந்த மனநிலையை மாற்றுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இவர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பற்றித் தவறானத் தகவல்களைப் பரப்பி, அந்த நிறுவனங்களின் வாசலுக்கு வெளியே தொழிலாளர்களை 'நகர்ப்புற நக்ஸல்கள்' போலத் தூண்டிவிட்டு அவர்களைத் திசைதிருப்பினார்கள். எல்..சி, இந்திய ஸ்டேட் வங்கி மற்றும் எச்..எல் போன்ற நிறுவனங்களை மிக மோசமான முறையில் அவதூறு செய்தார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, அவர்களால் இந்த நிறுவனங்களை நிர்வகிக்கவோ அல்லது சீர்திருத்தவோ முடியாமல் இருந்தது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இங்கும் நாங்கள் துணிச்சலைக் காட்டினோம். பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி, தொடர்ச்சியான சீர்திருத்த மரபினை நிறுவினோம். இன்று, எல்..சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இல்லாத வகையில் மிகச்சிறந்த செயல்பாட்டை வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, மூடும் நிலைக்குத் தள்ளிய பொதுத்துறை நிறுவனங்கள் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க லாபத்தைப் பதிவு செய்து வருகின்றன. அவை 'இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, அந்தக் கனவை நனவாக்குவதில் ஊக்கிகளாகவும் செயல்படுகின்றன. அவை சாதனை அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. நமது சில பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது உலகளவில் விரிவடைந்து, தங்கள் வலிமையை வெளிப்படுத்துவதோடு, பல நாடுகளின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காளிகளாக இணைந்து, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்று வருகின்றன. இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது என்பதையும், வரவிருக்கும் 25 ஆண்டுகள் மாற்றத்திற்கான காலம் என்பதையும் இது காட்டுகிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

காங்கிரஸ் தனது துரோகத்தில் இந்த நாட்டின் விவசாயிகளைக் கூட விட்டுவைக்கவில்லை. இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள 10 கோடி சிறு விவசாயிகள் இங்கு உள்ளனர். அவர்கள் ஒருபோதும் கவனிக்கப்படவில்லை, கருத்தில் கொள்ளப்படவும் இல்லை. ஒரு சில பெரிய விவசாயிகளைச் சமாளிப்பதே இந்த அமைப்பை நடத்துவதற்குப் போதுமானது என்று நம்பிய காங்கிரஸ், இந்தச் சிறு விவசாயிகளின் முக்கியத்துவத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அதுதான் அவர்களின் அரசியலாக இருந்தது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நாங்கள் சிறு விவசாயிகளின் வலியை உணர்ந்தோம். கள யதார்த்தத்தை நாங்கள் அறிந்திருந்தோம், அதனால்தான் 'பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். குறுகிய காலத்தில் 4 லட்சம் கோடி ரூபாயை நேரடியாகச் சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளோம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

4 லட்சம் கோடி ரூபாய் என்பது சிறிய தொகையல்ல. இது நமது சிறு விவசாயிகளுக்குப் புதிய வலிமையையும், புதிய கனவுகளையும், புதிய திறன்களையும் வழங்கியுள்ளது. நமது விவசாயிகள் தேசத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நற்பலன்களை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்துச் சில சகாக்கள் இங்கு விரிவாகப் பேசினார்கள். ஒருவேளை அவர்கள் இதைப் பேசுவதற்காகவே தயாராகி வந்திருக்கலாம்; அவர்களின் அந்த கூட்டணி வேறெங்கும் தெரியாவிட்டாலும், இதில் வெளிப்படையாகத் தெரிந்தது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

திட்டச் செயலாக்கம் குறித்து அவர்கள் மிகப்பிரம்மாண்டமாகப் பேசுகிறார்கள். யாரையும் விமர்சிப்பதற்காக அல்லாமல், உண்மைகளை முன்வைப்பதற்காக ஒரு கதையை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உண்மைகள் சிலரைத் தொந்தரவு செய்யலாம், ஆனால் உண்மை எப்போதும் உண்மையே. நம் நாட்டின் தலைவர்களில் ஒருவர் ஒருமுறை இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றார். அங்கிருந்து திரும்பிய பிறகு, அவரே இந்தச் சம்பவத்தை விவரித்தார், அது பதிவிலும் உள்ளது. அவர் சொன்னார்: "நீண்ட காலமாக நான் திட்டக் குழுவுடன் போராடினேன், ஏனெனில் மலைப் பகுதிகளுக்கெனத் தனித்தனி திட்டங்களை உருவாக்க அவர்கள் முன்வரவில்லை. நான் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று திரும்பியதும், அங்கிருக்கும் நமது தொழிலாளர்களுக்குச் சுமைகளைச் சுமந்து செல்ல ஜீப்புகள் தேவையில்லை, கோவேறு கழுதைகள்தான் தேவை என்று திட்டக் குழுவிடம் கூறினேன்." அவர் மேலும் தொடர்ந்தார்: "ஆனால் என்னிடம் 'நாங்கள் ஜீப்புகளுக்கு மட்டுமே நிதி வழங்குவோம், ஏனெனில் கோவேறு கழுதைகளுக்கென எந்தக் கொள்கையும் இல்லை' என்று கூறப்பட்டது." அதே உரையில் அவர் மேலும் ஒரு கருத்தைச் சேர்த்தார்: "அங்கு சாலைகளே இல்லை." இமாச்சலப் பிரதேசத்தில் அவர் சென்ற இடங்களுக்குச் சாலைகளே இல்லை என்பதுதான் அவர் சொல்ல வந்த கருத்து. சாலைகளே இல்லாத இடத்தில் ஜீப் வாகனங்களால் என்ன பயன்? சாலைகளே இல்லாத இடத்தில் யார் ஜீப்பை ஓட்டுவார்கள்? இருப்பினும் திட்டக் குழு பிடிவாதமாக இருந்தது: ஒன்று ஜீப்புகள் அல்லது எதுவுமே இல்லை.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இந்த உரை வேறு யாரோ ஆற்றியது அல்ல, காங்கிரஸின் மூத்த தலைவரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி அவர்களால் ஆற்றப்பட்டது. இதுதான் காங்கிரஸின் நீண்டகால ஆட்சியின் கலாச்சாரமாக இருந்தது. இந்தத் தவறான நடைமுறைகள் நடப்பது இந்திரா காந்தி அவர்களுக்கே தெரிந்திருந்தது, இருப்பினும் அதைச் சரிசெய்ய அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் விமர்சித்த அந்தத் திட்டக் குழு, அவருடைய தந்தையாலேயே உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்தும் நிலைமை மாறாமல் அப்படியே இருந்தது. 2014-ம் ஆண்டு வரை, அனைவரும் மகிழ்ச்சியற்றே இருந்தனர், அனைவரும் தவறுகளைக் கண்டனர், ஆனால் எவரும் சீர்திருத்தம் செய்யத் தயாராக இல்லை. 2014-க்குப் பிறகு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, நாங்கள் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு 'நித்தி ஆயோக்அமைப்பை நிறுவினோம். இன்று நித்தி ஆயோக் மிக வேகமான வேகத்தில் இயங்கி வருகிறது.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள்திட்டத்தைப் பாருங்கள் - அது ஒரு வலிமையான உதாரணம். சர்வதேச நிறுவனங்கள் இப்போது வளர்ந்து வரும் நாடுகளுக்கான வளர்ச்சி மாதிரியாக இதனை அங்கீகரிக்கின்றன. இதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி. ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் என ஒதுக்கப்பட்ட, லட்சணக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்ட பல மாவட்டங்கள் இன்று மாற்றம் அடைந்துள்ளன. முன்பு இத்தகைய மாவட்டங்கள் தண்டனை இடமாற்றங்களுக்காகப்  பயன்படுத்தப்பட்டன, இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. அதுதான் அப்போதைய கலாச்சாரமாக இருந்தது. நாங்கள் இதை மாற்றினோம். அங்கே இளம் மற்றும் திறமையான அதிகாரிகளை நியமித்தோம், அவர்களுக்குப் பணியாற்ற மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கினோம், அடுத்தடுத்து முடிவுகளை எடுத்தோம்.

இன்று சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு காலத்தில் அது முன்னேற விரும்பும் மாவட்டமாக இருந்தது. இன்று 'பஸ்தார் ஒலிம்பிக்' மூலம் அந்தப் பகுதி நாடு முழுவதும் அறியப்படுகிறது. வளர்ச்சி ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைகிறது. சில கிராமங்களுக்கு முதல் முறையாகப் பேருந்து வசதி வந்துள்ளது, அதைக் கண்டு அந்தச் சமூகமே கொண்டாடியது. இத்தகைய மாற்றத்தைத்தான் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் மற்றவர்களோ இத்தகைய மோசமான சூழல்களை விட்டுச் சென்றுவிட்டு, இப்போது தேசத்தைத் திசைதிருப்ப முயல்கிறார்கள்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

'வளர்ச்சி வேட்கை கொண்ட மாவட்டங்கள்' முயற்சி என்பது உண்மையான திட்டச் செயலாக்கம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இது போன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன, ஆனால் விளக்கத்திற்காக இதனை நான் குறிப்பிடுகிறேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள நமது சகாக்கள், நடந்து வரும் இந்த மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் திட்டச் செயலாக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். அவர்களின் ஒரே மாதிரி  பழைய திட்டக் குழுவின் அணுகுமுறைதான் - அதாவது அந்த "ஜீப் மற்றும் கோவேறு கழுதை" மாதிரி. அவர்களுக்கு அதைத் தாண்டி வேறொன்றும் தெரியாது.

திட்டச் செயலாக்கத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்: நான் பிறப்பதற்கு முன்பே, சர்தார் வல்லபாய் படேல் நர்மதா நதியின் குறுக்கே அணை கட்டுவதை முன்னறிவித்தார். திட்டம் இறுதி செய்யப்பட்டது, ஆனால் சர்தார் படேல் காலமானார். பின்னர் நேரு அவர்கள் அதற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும், தசாப்தங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நான் பிரதமரான பிறகு, அதனைத் திறந்து வைக்கும் பெருமையைப் பெற்றேன். நான் முதலமைச்சராக இருந்தபோது, சர்தார் சரோவர் அணைக்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருந்தது; எனது மாநில விவசாயிகளுக்காக என்னையே நான் பணயம் வைத்தேன். அதன் பிறகுதான் மத்திய அரசு இணங்கியது, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்தன. இன்று, பி.எஸ்.எஃப்  வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கட்ச் பகுதியின் காவ்டா வரை தூய்மையான நர்மதை நீர் சென்றடைகிறது. இதுதான் உண்மையான திட்டச் செயலாக்கம்.

இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக அறிவிப்புகளை வெளியிட்டனர், சடங்குக்காக விளக்குகளை ஏற்றினர், அடிக்கற்களை நாட்டினர், ஆனால் எதையும் செய்யவில்லை. இந்தக் கலாச்சாரத்தை மாற்ற மத்திய மாநில அரசு திட்டங்களின் செயலாக்கத்தை ஆய்வு செய்ய 'பிரகதி என்ற தொழில்நுட்பத் தளத்தை நான் உருவாக்கினேன். ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்: இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு ரயில் திட்டம் - ஒருவேளை ஊனா என்று நினைக்கிறேன் - நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் வந்தபோது, அதற்கான வரைபடம் கூட இல்லை. தேர்தல்களை வெல்வதற்காக மட்டுமே அது அறிவிக்கப்பட்டிருந்தது. 'பிரகதி மூலம் இத்தகைய திட்டங்களை நான் ஆய்வு செய்தேன். ஒவ்வொரு திட்டமும் ஏன் தேங்கியுள்ளது, எந்தத் துறையில் தவறு, என்ன சட்டச் சிக்கல்கள் உள்ளன, செலவு ஏன் அதிகரித்துள்ளது என்பனவற்றை நாங்கள் ஆராய்ந்தோம். 900 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட வேண்டிய ஒரு திட்டம் 90,000 கோடி ரூபாயாகப் பெருகியிருந்தது. நாங்கள் மாதாந்திர ஆய்வுகளை மேற்கொண்டோம்; அத்தகைய கூட்டங்களின் 50-வது பகுதியை நான் இப்போது நிறைவு செய்துள்ளேன்.

மாநிலங்களையும் அமைச்சகங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் 85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாங்கள் முடக்கத்திலிருந்து விடுவித்தோம். நாம் கட்டவிழ்த்துவிட்ட தேசிய வலிமையின் அளவை ஒருமுறை நினைத்துப் பாருங்கள். ரயில்வே, சாலைகள், நீர்ப்பாசனம், கிராமப்புற உள்கட்டமைப்பு என அனைத்தும் வேகம் பெற்றன. மூன்று தசாப்தங்களாகத் தேங்கிக் கிடந்த ஜம்மு - உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் பாதை இப்போது நிறைவடைந்துள்ளது. பனி மூடிய பள்ளத்தாக்குகள் வழியாக வந்தே பாரத் ரயில் செல்லும் வீடியோ வைரலானது; அதைப் பார்த்து மக்கள், "இதை வெளிநாடு என்று தவறாக நினைக்க வேண்டாம் - இது இந்தியா" என்று கூறினர். அதுதான் உண்மையான திட்டச் செயலாக்கம்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

அசாம் மாநிலத்தைப் பற்றி நான் இங்கே பேசுகிறேன் - இது தேர்தலுக்காக அல்ல, காங்கிரஸின் தோல்விகளைச் சுட்டிக்காட்டுவதற்காக. காங்கிரஸ் கற்பனை மட்டுமே செய்யும்; அவர்கள் ஒருபோதும் செயல்படுத்துவதில்லை. அருணாச்சலப் பிரதேசத்தையும் அசாமையும் இணைக்கும் போகிபீல் பாலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மிக முக்கியமான திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிரகதி கூட்டத்தில் நாங்கள் இதை ஆய்வு செய்தோம், இன்று அது நிறைவுபெற்று அசாம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை வழங்கி வருகிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

திட்டச் செயலாக்கத்தைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் திட்டங்களை உரிய காலத்திலும் - பெரும்பாலும் உரிய காலத்திற்கு முன்னதாகவே - முடிக்கிறோம் என்பதைக் காட்ட எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. 2030-ம் ஆண்டிற்குள் குறிப்பிட்ட சூரிய ஆற்றல் இலக்குகளை அடைவோம் என்று நாங்கள் உறுதியளித்தோம், ஆனால் அவற்றை 2025-லேயே எட்டிவிட்டோம். எத்தனால் தொடர்பான இலக்குகளும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டப்பட்டன. எங்களது செயல்படுத்தும் திறன் வலுவானது மட்டுமல்ல, காலத்தை விட முன்கூட்டியே செயல்படக்கூடியது என்பதையும் இது நிரூபிக்கிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அணுகுமுறை காங்கிரஸிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. எங்களது பார்வை, சிக்கல்களைத் தீர்க்கும் எங்களது மனப்பாங்கு என அனைத்தும் உலகளவில் வேறுபட்டவை. 140 கோடி இந்தியர்களும் சவால்களுக்குத் தீர்வு காணும் திறன் கொண்டவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் எமது மக்கள் மீதும், அவர்களின் வலிமை மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம், அதுவே ஜனநாயகத்தின் உண்மையான சக்தி. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, மக்களையே ஒரு பிரச்சினையாகப் பார்க்கிறது. இதை நான் விளக்குகிறேன். இந்திரா காந்தி ஒருமுறை ஈரானில் பேசும்போது, நேரு அவர்களுடன்  நடந்த ஒரு உரையாடலை நினைவு கூர்ந்தார். அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "35 கோடி" என்று நேரு பதிலளித்தாராம். அந்த நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 35 கோடி. அவருக்கு ஒவ்வொரு குடிமகனும் ஒரு பிரச்சினையாகத் தெரிந்தார்கள். மக்கள் தொகை 57 கோடியாக உயர்ந்தபோது, தனது பிரச்சினைகள் பலமடங்கு பெருகிவிட்டதாக இந்திரா அவர்கள் கூறினார். கற்பனை செய்து பாருங்கள் - தனது சொந்த மக்களையே பிரச்சினைகளாகப் பார்த்த தலைவர்கள் அவர்கள். இதுதான் அவர்களது மனப்பாங்கிற்கும் எங்களுடையதற்கும் உள்ள வித்தியாசம். எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீர்வு, இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் ஒரு பங்காளர். அவர்களைப் பொறுத்தவரை குடிமக்கள் ஒரு சுமை.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நம்மிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்; இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல, எனது ஆழமான நம்பிக்கை. நமது மக்கள் தான் நமது மிகப்பெரிய மூலதனம். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தைப் படைப்பவர், கட்டமைப்பவர் மற்றும் பாதுகாப்பவர். அவர்களை நாம் எப்படிப் பிரச்சினைகள் என்று சொல்ல முடியும்? இப்படி நினைப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சேவை செய்கிறார்கள், தேசத்திற்கு அல்ல.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இந்திய மக்களை அவமதிப்பது என்பது காங்கிரஸின் இயல்பிலும் கலாச்சாரத்திலும் ஊறிப்போன ஒன்றாக மாறிவிட்டது. சமீபத்தில், அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரை அவமதித்தார்கள். தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் வெட்கக்கேடானவை. வறுமையிலிருந்து உயர்ந்து, உயர்ந்த அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, குடியரசுத் தலைவரை அவமதிப்பது என்பது, பழங்குடியின சமூகத்தை அவமதிப்பதாகும், பெண்களை அவமதிப்பதாகும், மேலும் அரசியலமைப்பையே அவமதிப்பதாகும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

காங்கிரஸ் என்ன நினைத்தாலும், இது அவர்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறாகும். எனக்குக் கூடுதல் நேரம் வழங்கியதற்காக உங்களுக்கும் இந்த அவைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

மக்களவையில் நடந்தவை மிகவும் வேதனைக்குரியவை. விரக்தியும் ஏமாற்றமும் புரிந்துகொள்ளக்கூடியவை தான், ஆனால் ஜனநாயகத்தின் புனிதமான ஆலயத்தை இத்தகைய முறையில் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த நேரத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாண்புமிகு உறுப்பினர் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். காகிதங்கள் எறியப்பட்டன, மேசைகள் மீது ஏறினார்கள். இது வடகிழக்குப் பகுதிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் மகன் அவைத் தலைவர் இருக்கையில் இருந்தபோதும், அவரும் அவமதிக்கப்பட்டார். இது காங்கிரஸின் ஏளனத்தைக் காட்டுகிறது - வடகிழக்கு மக்களை அவமதிப்பது, தலித்துகளை அவமதிப்பது. அசாம் மக்கள் இனி காங்கிரஸை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால், அவர்கள் மீது இவர்கள் வெறுப்பைக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டுமா?

மாண்புமிகு தலைவர் அவர்களே...

பாரத ரத்னா பூபேன் ஹசாரிகா அவர்களை நினைவுகூர்ந்தபோது நான் மிகுந்த வேதனையடைந்தேன்; அவர் தனது பாடல்களாலும் குரலாலும் தேசத்தை ஒன்றிணைத்த ஒரு போற்றுதலுக்குரிய ஆளுமை. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் இதனையும் எதிர்த்தது. பாரத ரத்னா பற்றி குறிப்பிடும்போது கார்கே அவர்களின் எதிர்வினை வீடியோவில் உள்ளது - அவரது முகம் ஏளனத்தை வெளிப்படுத்துகிறது. ஹசாரிகா அவர்களை "வெறும் பாடகர்" என்று நிராகரிப்பது அசாம் மாநிலத்தை அவமதிப்பதாகும், இந்தியாவின் கலை ஆர்வலர்களை அவமதிப்பதாகும். அசாம் மற்றும் தேசத்தின் பெருமையை எதிர்த்து, அவருக்கு பாரத ரத்னா வழங்குவதை காங்கிரஸ் எதிர்த்தது. இந்த அவமானத்தை அசாம் ஒருபோதும் மறக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

நேற்று இதே அவையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் - அவர்களின் 'இளவரசர்' என்று சொல்லப்படுபவர்களில் ஒருவர் - சக நாடாளுமன்ற உறுப்பினரை "துரோகி" என்று அழைத்தார். அவர்களின் அகங்காரம் ஏழாம் உலகத்தை எட்டியுள்ளது. பலர் காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளனர், கட்சி பிளவுபட்டுள்ளது, தலைவர்கள் மற்ற கட்சிகளில் இணைந்துள்ளனர். ஆனாலும் அவர்கள் யாரும் ஒருபோதும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படவில்லை. ஆனால் நேற்று, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சீக்கியர் என்பதற்காகவே துரோகி என்று அழைக்கப்பட்டார். இது சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம், சீக்கிய குருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். காங்கிரஸிற்குள் சீக்கியர்கள் மீது ஊறிப்போயுள்ள ஆழமான வெறுப்பை இது வெளிப்படுத்தியது. இதைச் சொன்ன அந்த உறுப்பினர் இந்த அவையிலேயே அமர்ந்திருக்கிறார், இருப்பினும் அவர் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. "நேற்று நடந்தது நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிரானது, அதற்காக நாங்கள் வருந்துகிறோம்" என்று அவர் இன்று எழுந்து நின்றிருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. தேசத்திற்காகத் தனது ரத்தத்தை வழங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர், தனது அரசியல் பார்வையை மாற்றிக் கொண்டார் என்பதற்காக அவமதிக்கப்பட்டார். அவரைத் துரோகி என்று அழைப்பது சாதாரண விஷயமல்ல. எந்தவொரு குடிமகனையும் - குறிப்பாக ஒரு சீக்கியரை - துரோகி என்று அழைப்பதை இந்த நாடு எப்படி பொறுத்துக் கொள்ளும்? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இத்தகைய நடத்தை காங்கிரஸை மேலும் வீழ்ச்சிக்குத் தான் தள்ளும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

ஒரு பக்கம் நாம் இதைப் பார்க்கிறோம், மறுபுறம் மாஸ்டர் சதானந்த் அவர்களின் உதாரணத்தைக் காண்கிறோம். அரசியல் பழிவாங்கல் காரணமாக, அவரது இளமைக் காலத்திலேயே அவரது இரண்டு கால்களும் வெட்டப்பட்டன. அவர் செயற்கை கால்களுடன் வாழ்கிறார், இருப்பினும் அவரது பேச்சில் கசப்போ, நடத்தையில் கடுமையோ இல்லை. இது நமக்கு பெருமிதம் அளிக்கிறது. நேற்று அவர் இந்த அவையில் தனது முதல் உரையை ஆற்றியபோது, உங்கள் அனுமதியுடன் தனது செயற்கை கால்களைத் தனக்கு அருகில் மரியாதையுடன் வைத்தார். அந்தத் தோற்றம் தேசத்திற்கே வேதனையைத் தந்தது. கருத்தியல் வேறுபாடுகளுக்காக ஒரு இளம் ஆசிரியரின் கால்களை வெட்டியதற்கு 'இந்தியா' கூட்டணிதான் பொறுப்பு. இருப்பினும் அவர் கசப்போ, கோபமோ கொள்ளவில்லை. மாஸ்டர் சதானந்த் அவர்களை நான் எனது இதயத்திலிருந்து வணங்குகிறேன். இவ்வளவு கொடூரமான தாக்குதலுக்குப் பிறகும், அவர் தேசத்திற்குச் சேவை செய்யும் தனது சபதத்தைத் தொடர்ந்து வருகிறார், இன்று கொள்கை முடிவெடுப்பதில் பங்களிக்கிறார். இது பெருமைக்குரிய விஷயம். இத்தகைய மனிதர்களின் வலிமையால் தான் நாம் அரசியலில் வாழ்கிறோம், பணியாற்றுகிறோம். அவர்களின் தியாகம் தேசத்திற்காக வாழவும் சாகவும் நமக்கு ஊக்கமளிக்கிறது.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

இந்த நாட்களில், காங்கிரஸ் சகாக்கள் என் மீது ஒரு தனி வகையான பாசத்தைக் காட்டுகிறார்கள். எந்தப் பொறுப்பும் இல்லாமலேயே, தேசத்திற்காக வாழ நாம் பழகிக்கொண்டோம். வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம், அதனை வலுப்படுத்தி வருகிறோம். நான் இளைஞர்களுக்காக ஒரு திடமான அடித்தளத்தைத் தயார் செய்து வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியோ மோடியின் கல்லறையைத் தோண்டுவதற்கானத் திட்டங்களை வகுத்து வருகிறது. அன்பின் கடைகளைத் திறப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், "மோடியே, உனது கல்லறை தோண்டப்படும்" என்று முழக்கமிடுகிறார்கள். சக குடிமகனின் கல்லறையைத் தோண்டக் கனவு காண்பது என்ன வகையான அன்பின் கடை? இத்தகைய விஷயங்களைப் பேச எந்த அரசியலமைப்புத் தத்துவம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது? இது அரசியலமைப்பிற்கு, மனிதநேயத்திற்கு, பொது வாழ்வின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? அவர்கள் இதற்காக எவ்வித வருத்தமும் கொள்வதில்லை. அதன்பிறகு அவர்கள், "பிரதமர் மாநிலங்களவையில் அழுதுகொண்டிருந்தார்" என்று கூடச் சொன்னார்கள். எத்தகைய வளர்ப்பு இத்தகைய நடத்தையை உருவாக்குகிறது?

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

எனது அனுபவம் மிக நீண்டது. 2002-ல் அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், 2004-ல் அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், 2014-ல் நான் இந்த அவையில் நுழைந்தபோதும் - கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக - காங்கிரஸார் மோடியைத் திட்டாத ஒரு கூட்டத்தொடர் கூடக் கடந்து சென்றதில்லை. ஒருவர் ஒருமுறை எனது ஆரோக்கியத்தின் ரகசியத்தைப் பற்றி என்னிடம் கேட்டார். அதற்கு நான், "தினமும் இரண்டு கிலோ வசவுகளை நான் உட்கொள்கிறேன்" என்று பதிலளித்தேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

அவர்கள் ஏன் மோடியின் கல்லறையைத் தோண்ட விரும்புகிறார்கள்? இந்த முழக்கம் வெறும் அலங்காரச் சொல் அல்ல - அது அவர்களுக்குள் இருக்கும் வெறுப்பைப் பிரதிபலிக்கிறது. நாம் சட்டப்பிரிவு 370- ரத்து செய்ததால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் நிழலாடிக் கொண்டிருந்த வடகிழக்குப் பகுதிக்கு நாம் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வந்ததால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வீட்டிற்கே சென்று நாம் பதிலடி கொடுத்ததால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். நாம் 'ஆபரேஷன் சிந்துார்' நடத்தியதால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். மாவோயிச பயங்கரவாதத்திலிருந்து தேசத்தை விடுவிக்க நாம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்ததால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். நேரு கையெழுத்திட்ட அநீதியான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாம் நிறுத்தி வைத்ததால், அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

காங்கிரஸின் பிரச்சினை வேறானது. மோடி எப்படி இந்த நிலையை அடைந்தார் என்பதை அவர்களால் செரித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களின் விரக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது: மோடி இந்த இடத்திற்கு வந்தது மட்டுமல்லாமல், அவர் நிலைத்தும் நிற்கிறார். எனவே, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி - "மோடியே, உனது கல்லறை தோண்டப்படும்" என்று முழக்கமிடுவதுதான்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

பிரதமர் நாற்காலி என்பது தங்கள் குடும்பத்தின் பரம்பரை சொத்து என்று அவர்கள் நம்புகிறார்கள். அங்கே வேறு யாரும் அமரக்கூடாது. அவர்களுக்குள் இருக்கும் இந்த வெறுப்பு, அவர்களின் அந்த "அன்பின் கடை" என்று சொல்லப்படுவதில் எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்புதான், மோடியின் கல்லறையைத் தோண்டுவதைப் பற்றி அவர்களைப் பேச வைக்கிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

காங்கிரஸ் வம்சத்திற்குப் பல தசாப்த கால வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த தேசம் தனது எதிர்காலத்தையே அவர்கள் வசம் ஒப்படைத்தது. அவர்கள் "கரிபி ஹட்டாவோ" (வறுமையை ஒழிப்போம்) என்ற முழக்கங்களை எழுப்பினார்கள், ஆனால் மக்களைத் திசைதிருப்பினார்கள். ஒவ்வொரு காங்கிரஸ் பிரதமரும் செங்கோட்டையிலிருந்து வறுமையை ஒழிப்பதைப் பற்றிப் பேசினார்கள், ஆனால் யாரும் அதற்காகச் செயல்படவில்லை. அவர்களின் முழக்கங்கள் வெற்று வார்த்தைகளாகவே இருந்தன. மோடி ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார் - அது ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் பாதை. எனது நாட்டு ஏழைகளை நான் வணங்குகிறேன். அவர்கள் எங்களது கொள்கைகளையும் நோக்கங்களையும் நம்பினார்கள், தங்களை வலுப்படுத்திக் கொள்ள அயராது உழைத்தார்கள். இருபத்தைந்து கோடி ஏழைக் குடும்பங்கள் வறுமையை வென்று அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளன. அவர்களை நான் வணங்குகிறேன். ஒரு காலத்தில் நம்பிக்கையற்று இருந்த அவர்கள், இப்போது ஒரு நம்பிக்கைக் கதிரைக் கண்டு, எழும்பி, இன்று நம்முடன் இணைந்து நடைபோடுகிறார்கள்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே கேட்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பள்ளிப் பேருந்துகள் ரயில்களுடன் மோதி டஜன் கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். ஆளில்லா ரயில்வே கேட்கள் கவனிக்கப்படாமலே விடப்பட்டன. காங்கிரஸால் இதைக் கூடச் சரிசெய்ய முடியவில்லை. நாங்கள் அனைத்து ஆளில்லா ரயில்வே கேட்களையும் அகற்றி, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினோம். இதற்காகவும் அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, 18,000 கிராமங்கள் மின்சாரத்தையே பார்த்ததில்லை. மின்சாரக் கம்பி, மின்விளக்கு அல்லது ஒரு மின்விளக்கு என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. 2014-க்குப் பிறகு, மக்கள் எங்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்தபோது, அந்த 18,000 கிராமங்களுக்கும் நாங்கள் ஒளியைக் கொண்டு வந்தோம். இதற்காகவும் அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

ஒரு காலத்தில் தலைப்புச் செய்திகள் அலறின: நமது வீரர்களிடம் வெடிமருந்துகள் இல்லை, குண்டு துளைக்காத ஆடைகள் இல்லை, ஏன் பனியில் நடப்பதற்கான காலணிகள் கூட இல்லை என்று. நாங்கள் எமது வீரர்களுக்காகக் கருவூலத்தைத் திறந்தோம், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்க உறுதி பூண்டோம். இதற்காகவும் அவர்கள் மோடியின் கல்லறை தோண்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

ஒரு காலத்தில், உத்தராகண்டின் தற்போதைய முதலமைச்சர் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்துப் பேசி இந்த அவையில் அழுதார். இந்த நோயிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் நினைக்கவில்லை.

 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

'டிராகோமா' என்ற கண் நோய் பலரைப் பார்வையற்றவர்களாக்கியது. அறிவியல் முன்னேறியிருந்தது, குணப்படுத்துவது சாத்தியமாக இருந்தது, ஆனால் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. நாங்கள் நாட்டை மூளைக் காய்ச்சலிலிருந்து விடுவித்தோம், டிராகோமா நோயிலிருந்து கண்களைக் காப்பாற்றினோம். இந்த வெற்றிகள், இந்த மென்மையான உணர்வு, சமூகத்திற்காக வாழவும் சாகவும் எடுத்த இந்த உறுதி - இதுதான் அவர்களைத் தொந்தரவு செய்கிறது. அதனால்தான் ஜனநாயகம் மற்றும் அன்பைப் பற்றிப் பேசுவது போல நடித்துக்கொண்டு, "மோடியே, உனது கல்லறை தோண்டப்படும்" என்று அவர்கள் முழக்கமிடுகிறார்கள். பொது வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா?

மாண்புமிகு தலைவர் அவர்களே...

அவர்களுடைய அரசாங்கம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. எனது அரசாங்கமும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தான் இயங்குகிறது - ஆனால் எனது ரிமோட் 140 கோடி இந்தியர்களிடம் உள்ளது. அவர்களின் கனவுகள், அவர்களின் விருப்பங்கள், அவர்களின் உறுதிப்பாடுதான் எங்களை வழிநடத்துகின்றன. எங்களைப் பொறுத்தவரை, அதிகாரம் என்பது சுகபோகங்களுக்கான பாதை அல்ல, அது சேவைக்கான ஒரு ஊடகம். முத்ரா திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கானோர் சுயதொழில் புரிவதற்கான ஆதரவைப் பெற்றனர். காங்கிரஸ் ஒருபோதும் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை ஊக்குவித்ததில்லை. அவர்களுக்கு ஒரு சில நூறு ஸ்டார்ட்அப்களைப் பற்றி மட்டுமே தெரிந்திருந்தது. அவர்களால் தங்கள் சொந்த குடும்பத்தின் 'ஸ்டார்ட்அப்'பைக் கூட ஆதரிக்க முடியவில்லை. இன்று, எங்களது ஆட்சியின் கீழ், 2,00,000-க்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. அடுத்தடுத்த வெற்றிகள் மக்களின் இதயங்களை வென்று வருகின்றன, இதைக் காணும் காங்கிரஸிற்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி - "மோடியே, உனது கல்லறை தோண்டப்படும்" என்று முழக்கமிடுவதுதான். பிஎஸ்என்எல் ஒரு கேலிப்பொருளாகவும், கேலிச்சித்திரங்களின் பொருளாகவும் இருந்த நாட்களை நினைவு கூர்ந்து பாருங்கள். இன்று, நாம் உள்நாட்டிலேயே உருவான 4G தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். உலகின் எந்த நாட்டையும் விட மிக வேகமாக 5G- அமல்படுத்தினோம். புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய சிந்தனையுடன் தகவல் தொடர்பை மேம்படுத்தினோம். அதனால்தான், அவர்களின் வலி வார்த்தைகளாக வெளிவருகிறது: "மோடியே, உனது கல்லறை தோண்டப்படும்."

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

ஏழைகளுக்குச் சேவை செய்வதே எனது மிகப்பெரிய பாக்கியம். 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கியது எனக்கு வாழ்க்கையில் அமைதியைத் தருகிறது. மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், கழிப்பறைகள் - இவை அனைத்தும் இறைவன் என்னை முன்னின்று வழங்கக் கிடைத்த வாய்ப்பாகவும் ஆசிர்வாதமாகவும் நான் கருதுகிறேன். முதல் முறையாக, கிராமத்துப் பெண்கள் பெருமையுடன் சொல்கிறார்கள், "ஆம், நான் ஒரு லட்சாதிபதி சகோதரி ஆகிவிட்டேன்" என்று. மற்றவர்கள் சொல்கிறார்கள், "இந்த ஆண்டுக்குள் நானும் லட்சாதிபதியாக மாறிவிடுவேன்" என்று பல சகோதரிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே அந்த நிலையை எட்டியவர்கள் இப்போது சொல்கிறார்கள், "இல்லை ஐயா, இப்போது நாங்கள் கோடீஸ்வரர்களாக மாற யோசித்துக் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு - லட்சக்கணக்கான குடிமக்களின் இத்தகைய வாழ்த்துகளும், லட்சக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு வளையமும் ஒரு மனிதனைச் சூழ்ந்திருக்கும்போது, எத்தனை முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும், எந்தக் கல்லறையையும் தோண்ட முடியாது. எவரும் கண்டு கொள்ளாத, ஆனால் மோடி போற்றுகின்ற தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் செய்த அர்ப்பணிப்புள்ள சேவைதான் அவர்களின் ஆசீர்வாதத்திற்குக் காரணம். இந்த ஆசீர்வாதங்கள்தான் எனது எதிராளிகளைத் தொந்தரவு செய்கின்றன, அதனால்தான் அவர்கள் கல்லறை தோண்டுவதைப் பற்றிப் பேசுகிறார்கள்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

சிலருக்குத் திருட்டு என்பது ஒரு பரம்பரைத் தொழில். அவர்கள் ஒரு குஜராத்தியின் - மகாத்மா காந்தியின் - குடும்பப் பெயரைக் கூடத் திருடிக் கொண்டார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் புத்திசாலிகள்; இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு எப்படிப் பலத்த அடியைக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவுடன் நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்; இன்று அந்த கனவு, மக்களின் ஆற்றலால் ஒரு தேசிய உறுதிப்பாடாக மாறியுள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் மக்கள் சொல்கிறார்கள்: "2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும்" என்று. இருப்பினும், இந்த அவையில் உள்ள சில சகாக்கள் இவ்வளவு அவநம்பிக்கையுடனும், யதார்த்தத்திலிருந்து விடுபட்டும், மாறிவரும் உலகத்தைப் பற்றிய அறிவில்லாமலும் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவர்கள் கேட்கிறார்கள், "மோடி ஏன் 2047-ஐப் பற்றிப் பேசுகிறார்? 2047- யார் கண்டது?" என்று. சுதந்திரத்திற்காகப் போராடிய, தூக்குமேடை ஏறிய, துப்பாக்கிக் குண்டுகளையும் லத்திகளையும் அந்தமான் சிறையின் கொடுமைகளையும் அனுபவித்த அந்த இளம் வீரர்களும் வீராங்கனைகளும், "எனது வாழ்நாளில் சுதந்திரம் வராது, பின் நான் ஏன் போராட வேண்டும்?" என்று எப்போதாவது நினைத்தார்களா? அவர்கள் அப்படி நினைத்திருந்தால், இந்தியாவுக்கு எப்போதாவது சுதந்திரம் கிடைத்திருக்குமா?

நான் டிஜிட்டல் இந்தியா, நிதி தொழில்நுட்பம், யுபிஐ  பற்றிப் பேசியபோது இந்த அவநம்பிக்கையாளர்கள் என்னைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள். "ஒரு ஏழை மனிதன் எப்படி மொபைல் போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வான்?" என்று கேட்டார்கள். மூன்றே ஆண்டுகளில் நாடு அது சாத்தியம் என்று நிரூபித்தது. நாடாளுமன்றத்தில் அத்தகைய உரை நிகழ்த்தப்பட்டபோது, இவர்களின் ஆதரவாளர்கள் "மோடிக்குக் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு விட்டது" என்று கொண்டாடியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் மோடி பதில் சொல்லவில்லை - உங்கள் கையில் இருக்கும் மொபைல் போன், யுபிஐ மூலம் இயங்கி அந்தப் பதிலைச் சொன்னது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

காங்கிரஸ் காலத்தில் ஒரு பொதுவான வாசகம் பிரபலமானது - அது சீரியஸான விவாதங்களிலும் சரி, கிண்டல்களிலும் சரி: "இந்தியா பேருந்தைத் தவறவிட்டுவிட்டது". வாய்ப்புகளை இழந்தது, சந்தர்ப்பங்களை நழுவவிட்டது என - இந்தியா பேருந்தைத் தவறவிட்டது என்பது ஒரு வழக்கமான சொல்லாகவே மாறிவிட்டது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

இன்று இந்தியா எந்தப் பேருந்தையும் தவறவிடவில்லை. இன்று இந்தியா அணிவகுப்பைத் தலைமையேற்று வழிநடத்திச் செல்கிறது.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

தேசத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்க, நாம் நிகழ்காலத்தை ஒளிமயமாக்க அயராது உழைக்க வேண்டும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய எமது பயணத்திற்காக ஐந்து ஆண்டு திட்டங்களையும், பாதையிலிருந்து விலகாமல் இருக்க ஆண்டு பட்ஜெட்டுகளையும் நாங்கள் வகுக்கிறோம். எங்களது இலக்கு அடுத்த தேர்தல் அல்ல - அது 2047, ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா. தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் எனது தேசம் நிரந்தரமானது. இளைஞர்களிடம் ஒரு வளமான இந்தியாவை ஒப்படைப்பதே எங்களது கனவு. இன்று வீடுகளில் குழந்தைகளைப் பார்க்கும்போது நான் நினைக்கிறேன்: நான் செய்த வேலையில் மனதிருப்தி அடையும் வகையில், அவ்வளவு வலிமையான ஒரு தேசத்தை அவர்களுக்கு நான் விட்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் 2047-ஐப் பற்றிப் பேசுகிறோம்.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம், கடலின் ஆழம், நிலம், ஆகாயம் மற்றும் அண்டவெளி என நாம் எடுத்துள்ள முன்முயற்சிகளைப் பாருங்கள். புதிய உறுதிப்பாடு, புதிய ஆற்றல், புதிய காலடிகள், புதிய சாதனைகள் - இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறது. எதிர்காலத்திற்காக நம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் நாம் பணியாற்றி வருகிறோம். குவாண்டம் கம்ப்யூட்டிங்  பற்றிப் பேசுகிறோம், ஒரு ஏஐ மிஷனை முன்னெடுத்துச் செல்கிறோம். இன்று, ஏஐ துறையில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும் என்று உலகம் நம்புகிறது. முக்கியமான தாதுக்கள் மற்றும் அரிய வகை கனிமங்கள் இன்று புவிசார் அரசியல் ஆயுதங்களாக மாறியுள்ளன; இந்தியா யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக நாம் அவற்றின் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் எண்ணற்ற திட்டங்கள் இங்கே உள்ளன, ஏனெனில் இன்று ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்தை இந்திய மண்ணில் காண்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலம் இந்தியாவின் திறமையால் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களது சொந்த ஒளிமயமான எதிர்காலத்தை இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். அதனால்தான், நாம் ஏன் வளர்ச்சியடைந்த  இந்தியாவைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை உலகம் புரிந்து கொள்கிறது. இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் - இந்தியா சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை உலகம் காண்கிறது. ஒரு காலத்தில் "இந்தியா பேருந்தைத் தவறவிட்டது" என்ற வாசகம் இருந்தது. இன்று, இந்தியாவின் பயணத்தில் இணைந்து கொள்ளத் தாமதமாகிவிடுமோ என்று உலகம் அஞ்சுகிறது. இப்போது நாடுகள் நம்முடன் இணைவதற்குப் போட்டியிடுகின்றன.

மாண்புமிகு தலைவர் அவர்களே...

மவரவிருக்கும் காலம் இந்தியாவுக்கும், நமது இளைஞர்களுக்கும், நமது ஒளிமயமான எதிர்காலத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். இந்தச் சாத்தியக்கூறுகளை என்னால் தெளிவாக வரையறுக்க முடிகிறது, அந்த திசையிலேயே எங்களது கொள்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். எனது சக குடிமக்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன், மேலும் இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் ஒன்றைச் சொல்லுமாறு வலியுறுத்துகிறேன்: உலகளவில் வாய்ப்புகள் உருவாகும்போது, நாம் மிகச்சிறந்த தரம் மற்றும் திறமையை  வழங்கினால் மட்டுமே அவை நிலைத்து நிற்கும். தரத்தில் நாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. லாபம் குறைவாக இருந்தாலும், தரம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மூலப்பொருட்களை மாற்ற வேண்டும் - ஆனால் இந்தியா சிறந்த தரத்திற்குப் பெயர் பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உலகம் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோ்ம் இயக்கம், 'இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவற்றுக்கு புகழாரம் சூட்டும்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

எனது காங்கிரஸ் நண்பர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை நான் பேசுவதைத் தடுக்க அவர்கள் முயன்றனர்; நான் பேசத் தொடங்கினால் நிறுத்த மாட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அத்தகைய முயற்சிகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர்கள் இப்போது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஞானம் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும் என்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வெளிப்படுத்தப்பட்ட மதிப்புமிக்க கருத்துக்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவும். இந்த ஊக்கமளிக்கும் உரையை வழங்கிய மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க நன்றி!

-----

(Release ID: 2224137)

AD/VK


(வெளியீட்டு அடையாள எண்: 2260357) வருகையாளர் எண்ணிக்கை : 5