பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தின் மால்டாவில் பல்வேறு ரயில்வே, சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 17 JAN 2026 3:08PM by PIB Chennai

மேற்கு வங்க ஆளுநர் திரு சி.வி.ஆனந்த போஸ் ஆவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா, அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, சாந்தனு தாக்கூர் அவர்களே, சுகந்தா மஜும்தார் அவர்களே; மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, பிற பிரதிநிதிகளே, தாய்மார்களே, வணக்கம்!

இன்று, மால்டாவிலிருந்து மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான இயக்கம் இன்னும் வேகம் பெற்றுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. புதிய ரயில் சேவைகள் மேற்கு வங்கத்திற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இங்குள்ள மக்களுக்கு பயணத்தை எளிதாக்குவதோடு, வணிகத்தையும் எளிதாக்கும். ரயில் பராமரிப்புக்காக இங்கு உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் மேற்கு வங்க இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும்.

நண்பர்களே,

மேற்கு ​வங்கத்தின் இந்தப் புனித பூமியிலிருந்து, இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலை நோக்கி இன்று மற்றொரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில்கள் நம் நாட்டு மக்களின் நீண்ட தூரப் பயணங்களை மிகவும் வசதியாக மாற்றும். வளர்ச்சியடைந்த இந்தியாவில் ரயில்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பது இந்த வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்களின் மூலம் தெளிவாகத் தெரியும். சிறிது நேரத்திற்கு முன்பு மால்டா நிலையத்தில், நான் சில பயணிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த ரயிலில் அமர்ந்திருப்பது அவர்களுக்கு ஒரு அற்புதமான மகிழ்ச்சியைத் தந்ததாக எல்லோரும் கூறினர். வெளிநாட்டு ரயில்களின் புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்த்து, இதுபோன்ற ரயில்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இன்று, அந்தக் கனவு நனவாக மாறுவதைக் காண்கிறோம். இந்திய ரயில்வேயில் நடைபெற்று வரும் புரட்சியை உலகிற்குச் சொல்ல, வெளிநாட்டினர் இந்தியாவில் உள்ள நவீன ரயில்களின் வீடியோக்களைப் பகிர்வதை நான் சமீபத்தில் கவனித்தேன். இந்த வந்தே பாரத் ரயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியர்களான நமது வியர்வை அதை உருவாக்கியுள்ளது. நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில், அன்னை காளியின் நிலத்தையும் அன்னை காமாக்யாவின் நிலத்தையும் இணைக்கிறது. வரும் காலங்களில், இந்த நவீன ரயில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த நவீன படுக்கை வசதி ரயிலுக்காக மேற்கு வங்கத்துக்கும், அசாமுக்கும், முழு நாட்டுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

இப்போது, இந்திய ரயில்வே ஒரு மாற்றத்திற்கான கட்டத்தைக் கடந்து வருகிறது. ரயில்வே மின்மயமாக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இப்போது, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனுடன், நவீன, அதிவேக ரயில்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதன் மிகப்பெரிய பயனாளிகள் ஏழை, நடுத்தர குடும்பங்கள்.

நண்பர்களே,

இன்று, மேற்கு வங்கத்திற்கு மேலும் நான்கு நவீன அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைகள் கிடைத்துள்ளன. நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி - திருச்சிராப்பள்ளி, அலிப்பூர்துவார் - பெங்களூரு, அலிப்பூர்துவார் - மும்பை ஆகிய அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் அவை. இது மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியை நாட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்கு வங்கத்துக்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் பயன் அளிக்கும். இந்த அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இங்கிருந்து தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கும் பயணிப்பவர்களுக்கு பயணத்தை எளிதாக்கும்.

நண்பர்களே,

இப்போது, இந்திய ரயில்வே நவீனமாகி வரும் அதே வேளையில், அது தன்னிறைவு பெற்றும் வருகிறது. இந்தியாவின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள், மெட்ரோ பெட்டிகள் இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடையாளமாக மாறி வருகின்றன. இப்போது, அமெரிக்கா, ஐரோப்பாவை விட அதிகமான ரயில் இன்ஜின்களை உற்பத்தி செய்கிறோம். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில் பெட்டிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இவை அனைத்தும் நமது பொருளாதாரத்திற்கு கணிசமாக பயனளிப்பதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

நண்பர்களே,

இந்தியாவில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவது எங்கள் முன்னுரிமை. தூரங்களைக் குறைப்பது எங்கள் நோக்கம். இது இன்றைய நிகழ்ச்சியிலும் தெளிவாகத் தெரிகிறது. மீண்டும் ஒருமுறை, இந்த திட்டங்களுக்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மிக்க நன்றி. அருகிலுள்ள ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டும். அங்கு பலர் காத்திருக்கிறார்கள். நான் இங்கு குறிப்பிடாத விஷயங்களை அங்கு விரிவாக விளக்குகிறேன்.

மிக்க நன்றி.

***

AD/PLM/PD


(रिलीज़ आईडी: 2257805) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam