பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் பொங்கல் கொண்டாட்டங்களின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JAN 2026 11:41AM by PIB Chennai
வணக்கம்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கல் உண்மையிலேயே ஒரு உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதும், தமிழ் சமூகமும், தமிழ் கலாச்சாரத்தை போற்றுபவர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அவர்களில் நானும் ஒரு நபர். இந்த சிறப்புமிக்க பண்டிகையைக் கொண்டாடுவதில் உங்களுடன் சேருவது எனது அதிர்ஷ்டம். தமிழர் வாழ்வில், பொங்கல் என்பது நமது விவசாயிகள், பூமிக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகும். இது இயற்கையுடனும், சமூகத்துடனுமான நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது. இந்த நேரத்தில், இந்தியாவின் பிற பகுதிகளும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மக் பிஹு, என பல கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளன. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் இந்த அனைத்து பண்டிகைகளுக்கான எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு தமிழ் கலாச்சாரத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமத்தின் போது, நான் அங்கு இருந்த ஒவ்வொரு கணமும் கலாச்சார ஒற்றுமையின் துடிப்பான ஆற்றலை உணர்ந்தேன். பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் சென்றபோது, தமிழ் வரலாற்றின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை கண்டேன். தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் பொதுவான பாரம்பரியம் மட்டுமல்ல. மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமும் கூட. பொங்கல் போன்ற பண்டிகைகளில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு வலிமை பெறுகிறது.
நண்பர்களே,
உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகமும் அறுவடையுடன் தொடர்புடைய ஒரு பண்டிகையைக் கொண்டாடுகின்றன. தமிழ்க் கலாச்சாரத்தில், விவசாயி வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதப்படுகிறார். திருக்குறள் விவசாயத்தையும் விவசாயிகளையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. நமது விவசாயிகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் வலுவாக பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களின் முயற்சிகள் தற்சார்பு இந்தியா என்ற நோக்கத்திற்கு மகத்தான பலத்தை அளிக்கின்றன. விவசாயிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசும் உறுதியாக உள்ளது.
நண்பர்களே,
பொங்கல் பண்டிகை, இயற்கையின் மீதான நன்றியுணர்வு, வார்த்தைகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல், வாழ்க்கை முறையாக மாறுவதை உறுதி செய்ய நம்மைத் தூண்டுகிறது. பூமி நமக்கு இவ்வளவு கொடுக்கும்போது, அதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. அடுத்த தலைமுறைக்கு, மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பது, தண்ணீரைப் பாதுகாப்பது, வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது ஆகியவை மிகவும் முக்கியம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், அமிர்த நீர் நிலைகள் இயக்கம் போன்ற முயற்சிகள் இந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன. விவசாயத்தை மேலும் நிலையானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்ற நாங்கள் பாடுபடுகிறோம். வரும் ஆண்டுகளில், நிலையான விவசாய நடைமுறைகள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம், வேளாண் தொழில்நுட்பம், மதிப்பு கூட்டல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். நமது இளைஞர்கள் இந்த அனைத்து துறைகளிலும் புதிய யோசனைகளுடன் முன்னேறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் குறித்த ஒரு மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அங்கு தமிழ் இளைஞர்கள் வயல்களில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாக வேலை செய்கிறார்கள் என்பதைக் கண்டேன். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள எனது இளம் தமிழ் நண்பர்கள், நிலையான விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த இந்த இயக்கத்தை விரிவுபடுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நமது தட்டுகள் நிரம்பியிருக்க வேண்டும். நமது பைகள் நிரம்பியிருக்க வேண்டும். நமது பூமி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
தமிழ் கலாச்சாரம், உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகளை ஒன்றாக இணைத்து, வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு, நிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறது. இதன் மூலம் ஈர்க்கப்பட்டு, இன்றைய இந்தியா அதன் வேர்களிலிருந்து வலிமையைப் பெற்று, புதிய சாத்தியங்களை நோக்கி முன்னேறுகிறது. பொங்கல் பண்டிகையின் இந்தப் புனிதமான தருணத்தில், இந்தியாவை அதன் கலாச்சாரத்துடன் ஆழமாக இணைத்து முன்னேறும் நம்பிக்கையை நாம் உணர்கிறோம்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! வாழ்க தமிழ், வாழ்க பாரதம்! மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
வணக்கம்!
***
AD/PLM/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2256906)
வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam