பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி சிஇஓ மன்றத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JAN 2026 9:17PM by PIB Chennai

மேன்மைதங்கிய சான்ஸ்லர் மெர்ஸ் அவர்களே, இரு நாடுகளின் வணிகத் தலைவர்களே, வணக்கம்.

இந்தியா-ஜெர்மனி சிஇஓ மன்றத்தில் இணைவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-ஜெர்மனி உறவின் பவள விழாவையும் இந்தியா-ஜெர்மனி உத்திசார் கூட்டாண்மையின் வெள்ளி விழாவையும் நாம் கொண்டாடும் இந்த மிக முக்கியமான நேரத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அதாவது, நமது உறவு பிளாட்டினத்தின் நிலைத்தன்மையையும், வெள்ளியின் ஜொலிப்பையும் கொண்டுள்ளது.

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு தடையற்ற உறவாகும். ஒவ்வொரு துறையிலும் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நமது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கும் ஜெர்மனியின் 'மிட்டல்ஸ்டாண்ட்' நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் உற்பத்தி ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் கூட்டுப்பணி, வாகனத் துறை, எரிசக்தி, இயந்திரங்கள் மற்றும் ரசாயனத் துறைகளில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. இத்தகைய வலுவான பிணைப்புகள் நமது வர்த்தகத்திற்கு நேரடியாகப் பயனளித்துள்ளன, இது தற்போது கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.

நண்பர்களே,

உலகம் வேகமாக மாறி வருகிறது. முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் மூலதன இயந்திரங்களைச் சார்ந்திருப்பது இன்று எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் காண்கிறோம். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான இந்த புனிதமான வேளையில், அவரது சிந்தனைகள் மற்றும் செய்திகளில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். அவரது செய்தி தெளிவாக இருந்தது: "சுயநம்பிக்கை, தற்சார்பு மற்றும் பொறுப்புணர்வோடு உலகத்துடன் இணையும் ஒரு தேசமே வலிமையான தேசம்." இன்றைய உலகளாவிய சூழலில், இந்தச் செய்தி இன்னும் கூடுதலான பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்தச் சிந்தனைக்கு ஏற்ப, உலகிற்கான நம்பிக்கையான மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவது நமது பகிரப்பட்ட பொறுப்பாகும். இந்த முயற்சியில் இந்தியா மற்றும் ஜெர்மனி போன்ற நம்பகமான நண்பர்களின் கூட்டு செயல்பாடு ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கிறது.

நண்பர்களே,

சான்ஸ்லர் மெர்ஸ் தனது முதல் ஆசியப் பயணத்திற்குத் தங்குமிடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது ஜெர்மனியின் பல்வகைப்படுத்தல் உத்தியில் இந்தியாவின் முக்கியப் பங்கைப் பிரதிபலிக்கிறது, மேலும் இது இந்தியாவின் மீது ஜெர்மனி கொண்டுள்ள நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும். இந்த நம்பிக்கைக்கு இணங்க, இன்று நாம் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். முதலாவதாக, இந்த தடையற்ற பொருளாதாரக் ஒத்துழைப்பை 'எல்லையற்றதாக' மாற்ற முடிவு செய்துள்ளோம். அதாவது, பாரம்பரிய பொருளாதாரத் துறைகளுடன் சேர்த்து, உத்திசார் துறைகளிலும் ஆழமான ஒத்துழைப்பு காணப்படும். பாதுகாப்புத் துறையில், இன்று நாம் ஒரு 'கூட்டு நோக்கம் குறித்த அறிவிப்பை' பரிமாறிக்கொள்கிறோம். இது நமது நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் இணைந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் உற்பத்தியை மேற்கொள்ளவும் தெளிவான கொள்கை ஆதரவை வழங்கும். விண்வெளித் துறையிலும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். இரண்டாவதாக, நம்பிக்கைக்குரிய கூட்டாண்மை என்பது இனி 'தொழில்நுட்பக் கூட்டாண்மை' என்ற வடிவத்தை எடுக்க வேண்டும் என்பதில் நாம் உடன்பட்டுள்ளோம். உலகின் இரண்டு முக்கிய ஜனநாயகப் பொருளாதாரங்கள், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும். செமிகண்டக்டர்கள் துறையில் நாம் பரஸ்பரம் கூட்டாளிகளாக உள்ளோம். இதனுடன், எரிசக்தி, மின்னணு, உயிரி தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், மருந்து, குவாண்டம் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. மூன்றாவதாக, இந்தியா-ஜெர்மனி கூட்டாண்மை என்பது பரஸ்பர நன்மை பயப்பது மட்டுமல்ல, உலகிற்கும் நல்லது என்பதில் நாம் அனைவரும் முழுமையான தெளிவுடன் இருக்கிறோம். பசுமை ஹைட்ரஜன், சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிரி எரிபொருள் ஆகியவற்றில் உலகத் தலைவராக மாற இந்தியா முன்னேறி வருகிறது. ஜெர்மன் நிறுவனங்களுக்கு சூரிய ஆற்றல் செல்கள் மற்றும் எலக்ட்ரோலைசர்கள், பேட்டரிகள் மற்றும் காற்றாலை சுழலிகளை உற்பத்தி செய்வதில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. மின்சார வாகனம் முதல் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வரை உலகிற்கான தீர்வுகளை நாம் இணைந்து உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவு குறித்த அனைத்தையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வை இந்தியாவிற்கு உண்டு; ஜெர்மனியின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அதனுடன் இணையும் போது, மனிதநேயத்தை மையமாகக் கொண்ட டிஜிட்டல் எதிர்காலத்தை நம்மால் உறுதி செய்ய முடியும்.

நண்பர்களே,

இந்தியாவின் திறமையாளர்கள் கூட்டம், ஜெர்மன் தொழில்துறையின் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக உயர்தொழில்நுட்பத் துறையில், திறன் இயக்கம் வேகமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் இந்தத் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும், திறன், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முறை பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துமாறும் ஜெர்மன் நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நண்பர்களே,

இன்றைய சவாலான உலகளாவிய சூழலிலும், இந்தியா 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது. இதற்குப் பின்னால் ஒரு காரணம் மட்டுமல்ல, தொடர்ச்சியான மற்றும் விரிவான சீர்திருத்தங்கள் உள்ளன. பாதுகாப்பு, விண்வெளி, சுரங்கம் அல்லது அணுசக்தி என ஒவ்வொரு துறையிலும் தனியார் துறை ஊக்குவிக்கப்படுகிறது. விதிமுறை இணக்கத் தேவைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடைமுறைகள் மேம்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் இன்று இந்தியாவை உலகிற்கான வளர்ச்சியின் அடையாளமாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் மாற்றியுள்ளன. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் நனவாகப் போகிறது. இது நமது வர்த்தகம், முதலீடு மற்றும் கூட்டாண்மைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.

அதாவது, உங்களுக்கான பாதை தெளிவாக உள்ளது. இந்தியாவின் அளவிடற்கரிய வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் இணையுமாறு ஜெர்மனியின் துல்லியமான நுணுக்கங்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம், உள்நாட்டுத் தேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் எந்தத் தடையும் இன்றி ஏற்றுமதி செய்யலாம்.

நண்பர்களே,

அரசின் சார்பாக நான் உங்களுக்கு ஒன்றை உறுதிபடக் கூறுகிறேன்: நிலையான கொள்கைகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்ட கால தொலைநோக்குப் பார்வையுடன் ஜெர்மனியுடனான ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால் எனது செய்தி இதுதான்: "இந்தியா ஆயத்தமாகவும், ஆர்வத்துடனும், முழுத் திறனுடனும் காத்திருக்கிறது."

வாருங்கள், நாம் இணைந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம், முதலீடு செய்வோம், ஒன்றிணைந்து வளர்ச்சி காண்போம். இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல், இந்த உலகின் எதிர்காலத்திற்கே உகந்த நிலையான தீர்வுகளை நாம் இணைந்து வடிவமைப்போம்.

மிக்க நன்றி.

மிக்க நன்றி

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256900) வருகையாளர் எண்ணிக்கை : 14