பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் நடைபெற்ற வேளாண் நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் பிரதமர் மேற்கொண்ட உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2025 6:45PM by PIB Chennai

 

பிரதமர்: ராம்-ராம்!

விவசாயி: ராம்-ராம்! நான் ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். காபூலி சென்னா (கொண்டைக்கடலை) சாகுபடியுடன் எனது விவசாயத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருந்தது...

பிரதமர்: இதனை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினீர்கள்?

விவசாயி: இப்போது நான்கு ஆண்டுகள் ஆகின்றன. காபூலி சென்னா மூலம் ஏக்கருக்கு சுமார் 10 குவிண்டால் மகசூல் கிடைக்கிறது.

பிரதமர்: பருப்பு வகைகள் போன்ற சில பயிர்கள் ஊடுபயிராகப் பயிரிடப்படுகின்றனவா?

விவசாயி: ஆம்.

பிரதமர்: எனவே, இதற்குச் சற்று கூடுதல் உழைப்பு தேவைப்பட்டாலும், உங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இதைப் பார்த்து, மற்ற விவசாயிகளும் தங்கள் நிலம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று எண்ணி, பருப்பு சாகுபடியை நோக்கிச் செல்ல ஊக்கம் பெறுகிறார்களா?

விவசாயி: ஆமாம், நிச்சயமாக. நாங்கள் அப்படித்தான் நினைக்கிறோம். கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளைப் பயிரிட்டால், இந்தப் பயிர் மட்டுமல்லாது அடுத்த பயிருக்கும் பலன் கிடைக்கும் என்று மற்ற விவசாயிகளிடம் கூறுகிறேன். கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன, இது அடுத்த விளைச்சலுக்கு மண்ணை வளமாக்குகிறது.

விவசாயி: எனது வாழ்நாளில் முதல்முறையாகப் பிரதமரைச் சந்தித்துள்ளேன். அவர் மிகவும் நல்ல பிரதமர், விவசாயிகளுடனும் சாதாரண மக்களுடனும் ஆழமானத் தொடர்பு கொண்டவர்.

விவசாயி: நானும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பில்  இணைந்துள்ளேன். நான் ஒரு பட்டயக் கணக்காளர், ஆனால் நானும் பருப்பு சாகுபடி செய்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு 16 பிகா நிலம் உள்ளது, அங்கு நான் கொண்டைக்கடலை பயிரிடுகிறேன். எங்கள் கிராமத்தில் தலா 20 பெண்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கியுள்ளோம், நாங்கள் அனைவரும் இணைந்து 'சென்னா-பூண்டு-அப்பளம்' போன்ற தயாரிப்புகளைத் தயார் செய்கிறோம். அதில் பூண்டு சேர்க்கப்பட்டுள்ளது...

பிரதமர்: ஓ, அப்படியென்றால் அங்கேயே நீங்கள் தயாரிப்பு பணிகளையும் செய்கிறீர்களா?

விவசாயி: ஆம், ஆம், நிச்சயமாக.

பிரதமர்: உங்கள் தயாரிப்புக்கு ஏதேனும் பிராண்ட் பெயர் வைத்துள்ளீர்களா?

விவசாயி: ஆம், எங்கள் கிராமத்தின் பெயர் துகாரி அதனால் 'துகாரி வாலே' என்று பிராண்ட் பெயர் வைத்துள்ளோம்.

பிரதமர்: அப்படியா.

விவசாயி: ஆம், 'துகாரி வாலே சனா-பூண்டு-அப்பளம்' என்ற பெயரில் விற்பனை செய்கிறோம்.

பிரதமர்: மக்கள் இதனை வாங்குகிறார்களா?

விவசாயி: ஆம் ஐயா. நாங்கள் அரசு மின்-சந்தை வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம். ராணுவ வீரர்கள் அங்கிருந்து வாங்குகிறார்கள் ஐயா.

பிரதமர்: அப்படியென்றால், ராஜஸ்தான் முழுவதும் இது பிரபலமாக உள்ளதா?

விவசாயி: ஐயா, இது இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமர்: உண்மையாகவா?

விவசாயி: ஆம்.

பிரதமர்: இது போன்ற தயாரிப்புகளை வேறு யாராவது உற்பத்தி செய்கிறார்களா?

விவசாயி: ஆம், மற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் பெண்கள் தான் இவற்றைத் தயாரிக்கிறார்கள்.

பிரதமர்: அப்படியென்றால், அனைவரும் சுவைப்பதற்காக நீங்கள் கொஞ்சம் கொண்டு வரவேண்டும்!

விவசாயி: கண்டிப்பாக ஐயா, நிச்சயமாகக் கொண்டு வருகிறோம்!

விவசாயி: பிரதமரை எப்படிச் சந்திக்கப் போகிறோம் என்று நினைத்தபோது எங்களுக்கு மெய்சிலிர்த்தது. அவர் வந்தவுடன், அவருடைய தேஜஸைப் பார்த்ததும் நாங்கள் பேச்சற்றுப் போனோம். அது விவரிக்க முடியாத ஒரு தருணம்.

விவசாயி: நான் 2013-14 முதல் பருப்பு சாகுபடி செய்து வருகிறேன். ஒரு ஏக்கரில் தொடங்கி படிப்படியாக 13-14 ஏக்கர் வரை கொண்டைக்கடலை சாகுபடியை விரிவுபடுத்தியுள்ளேன்.

பிரதமர்: நல்லது. அப்படியென்றால், ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் கொண்டைக்கடலையும், மற்ற இடங்களில் வேறு பயிர்களையும் பயிரிட்டீர்களா?

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: பிறகு மெதுவாகச் சாகுபடிப் பரப்பை அதிகரித்தீர்களா?

விவசாயி: ஆம், நான் அதைச் சுமார் 13-14 ஏக்கராக விரிவுபடுத்தினேன், மேலும்...

பிரதமர்: இது உங்கள் வருமானத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது?

விவசாயி: ஆண்டுதோறும் உயர்தர விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டதால் எனது வருமானம் மேம்பட்டது, உற்பத்தித் திறனும் தொடர்ந்து அதிகரித்தது.

பிரதமர்: சைவ உணவை உண்பவர்களுக்குப் புரதச்சத்தின் முக்கிய ஆதாரம் பருப்பு வகைகள் தானே?

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: எனவே, நீங்கள் பருப்பு வகைகளைப் பயிரிடும்போது, அது உங்கள் பையை நிரப்புவது மட்டுமல்ல; சமூகத்திற்கும் நீங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறீர்கள்.

விவசாயி: சரியாகச் சொன்னீர்கள்.

பிரதமர்: இக்காலத்தில் நமது பண்ணைகள் சிறியவை; நிலங்கள் துண்டு துண்டாக உள்ளன. இதன் காரணமாக, யாராவது ஒருவர் புதிய பரிசோதனையை முயற்சிக்கும்போது, அவர் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார். ஆனால் கற்பனை செய்து பாருங்கள், 200 விவசாயிகள் ஒன்று சேர்ந்தால்...

விவசாயி: ஆம்.

பிரதமர்: ...அந்த 200 பேரும் சேர்ந்து, 400 அல்லது 500 பிகா நிலப்பரப்பில், கூட்டாக ஒன்று அல்லது இரண்டு குறிப்பிட்ட பயிர்களை வளர்த்துச் சரியாகச் சந்தைப்படுத்தினால்—அது விவசாயிகளுக்கு அதிகப் பலன் தருமல்லவா?

விவசாயி: நிச்சயமாக ஐயா. நாங்கள் சுமார் 1,200 ஏக்கரில் காபூலி சனா சாகுபடியை எஞ்சிய நச்சுக்களற்ற விவசாய முறையிலேயே செய்கிறோம். விவசாயிகளுக்கு முன்பை விட மிகச் சிறந்த லாபம் கிடைக்கிறது.

பிரதமர்: அப்படியென்றால், இப்போது அனைத்து விவசாயிகளும் இதற்குச் சம்மதித்துவிட்டார்கள், இது உங்கள் உழைப்பையும் குறைத்திருக்குமே?

விவசாயி: ஆம், ஏனென்றால் நாங்கள் அத்தகைய ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

விவசாயி: நான் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

பிரதமர்: எங்கிருந்து? பீட் மாவட்டமா. அங்கு வழக்கமாகத் தண்ணீர் பற்றாக்குறை இருக்குமே?

விவசாயி: அதனால்தான் ஐயா, 'தன - தானியா' எனும் சிறுதானிய திட்டத்தைத் தொடங்கியதற்காக உங்களுக்கு நான் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர்: நன்றி. நமது பாரம்பரிய தானியங்களான கம்பு, சோளம் மற்றும் பிற சிறுதானியங்களை நாம் எங்கும் ஊக்குவிப்பது போலவே—அவற்றுக்கு இப்போது மிகப்பெரிய உலகளாவிய சந்தை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலத்திலும் கூட, விவசாயிகள் நல்ல வாழ்வாதாரத்தைப் பெற முடியும்.

விவசாயி: ஆம், சிறுதானியங்களால் அது சாத்தியமாகிறது.

பிரதமர்: நீங்களும் சிறுதானியங்களைச் சாகுபடி செய்கிறீர்களா?

விவசாயி: ஆம், செய்கிறேன்.

பிரதமர்: எந்த வகைகளைப் பயிரிடுகிறீர்கள்?

விவசாயி: கம்பு, சோளம் மற்றும் வறுத்த கடலையையும் பயிரிடுகிறேன்.

பிரதமர்: அப்படியென்றால், மக்கள் இப்போதும் இவற்றை உட்கொள்கிறார்களா?

விவசாயி: ஆம், அனைவரும் உட்கொள்கிறார்கள்.

பிரதமர்: அது நல்லது.

விவசாயி: அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் விநியோகிக்கும்போது, சிலர் மும்பையிலும் இருக்கிறார்கள்.

விவசாயி: அவரிடம் பேசிய பிறகு, ஒரு நாட்டின் பிரதமரைச் சந்தித்தது போலத் தோன்றவில்லை; எங்கள் குடும்பத்தில் ஒருவரைச் சந்தித்தது போன்ற உணர்வே ஏற்பட்டது.

விவசாயி: எனது பகுதியில் நான் துவரை சாகுபடி செய்கிறேன். இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இது விவசாயிகளுக்குப் பயனளிப்பதோடு, ஒரு நல்ல வணிக வாய்ப்பையும் வழங்கும்.

விவசாயி: நான் ஒரு சுய உதவிக்குழுவுடன் தொடர்புடைய பெண். நான் 2023-ல் குழுவில் இணைந்து, எனது ஐந்து பிகா நிலத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்யத் தொடங்கினேன். ஐயா, உங்களின் 'பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டம் எங்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஆண்டுதோறும் நாங்கள் பெறும் ரூ.6,000, விதைகள் வாங்குவதற்கும், நிலத்தை உழுவதற்கும் மற்றும் பிற விவசாயத் தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. இது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஆதரவாகும்.

பிரதமர்: உரங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?

விவசாயி: ஆம், பெண்கள்...

பிரதமர்: ஏனென்றால் பூமி நமது தாய் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவளுக்கு நாம் ரசாயன உணவுகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தால், அவளால் எவ்வளவு காலம் உயிர்வாழ முடியும்?

விவசாயி: அது உண்மைதான் ஐயா.

பிரதமர்: விவசாயிகள் இதைப் பற்றி விவாதிக்கிறார்களா?

விவசாயி: ஆம், அவர்கள் விவாதிக்கிறார்கள்.

பிரதமர்: தங்களது குழந்தைகளுக்கு வளமான நிலத்தை விட்டுச் செல்ல வேண்டுமே தவிர, தரிசு நிலத்தை அல்ல என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டால், தானாகவே நிலத்திற்குத் தீங்கு விளைவிக்க மாட்டார்கள். இதில் விவசாயிகள் உதவ முடியும். உதாரணமாக, ஒருவருக்கு நான்கு பிகா நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...

விவசாயி: ஆம்.

பிரதமர்: ...அவரிடம் நீங்கள் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள் என்று சொன்னால், அவர் பயப்படுவார்.

விவசாயி: ஆமாம், அவர் துணிய மாட்டார்.

பிரதமர்: "நான் பட்டினியால் இறந்துவிடுவேனோ" என்று அவர் நினைப்பார். எனவே, அதற்குப் பதிலாக அவரிடம் சொல்லுங்கள் — எங்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம். உங்கள் நிலத்தை நான்கு பகுதிகளாகப் பிரியுங்கள். ஒரு பிகாவில் மட்டும் எங்கள் முறையை முயற்சி செய்யுங்கள்; மற்ற மூன்று பிகாவில் உங்கள் வழக்கமான முறையையே தொடருங்கள்.

விவசாயி: சரியானது.

பிரதமர்: எங்களுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுங்கள். அவர் அதில் வெற்றியைக் கண்டவுடன், ஒரு பிகாவிலிருந்து ஒன்றரை, பிறகு இரண்டு எனப் படிப்படியாக விரிவுபடுத்துவார். அப்படித்தான் நம்பிக்கை வளரும். நான்கு பிகா நிலத்தையும் ஒரே நேரத்தில் மாற்றச் சொன்னால் அவர் செய்ய மாட்டார் — தனது வாழ்வாதாரம் போய்விடுமோ என்று அஞ்சுவார்.

விவசாயி: நான் கொண்டைக்கடலை, பயறு மற்றும் அவரை வகைகளைப் பயிரிடுகிறேன். எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தாலும், சிறுகச் சிறுக விவசாயத்தை நிர்வகித்து வருகிறேன்.

பிரதமர்: பாருங்கள், இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட விவசாயி கூட அற்புதங்களைச் செய்ய முடியும்.

விவசாயி: ஆம், கொஞ்சம் கொஞ்சமாக...

பிரதமர்: நிலம் சிறியதாக இருக்கலாம், ஆனால் விவசாயியின் மனம் பரந்தது, துணிச்சலும் உறுதியும் நிறைந்தது.

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: உங்கள் வயல்களைச் சுற்றி வேலி அமைப்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பொதுவாக, அண்டை வீட்டுக்காரரும் வேலி அமைப்பார், இதனால் இருவருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட நிலம் வீணாகிறது. ஆனால் அதற்குப் பதிலாக இரு தரப்பிலும் சூரிய சக்தித் தகடுகளை பொருத்தினால் — உங்கள் பக்கம் ஒரு சரிவாகவும், அவர் பக்கம் ஒரு சரிவாகவும் — நீங்கள் இருவரும் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதைப் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ளதை விற்கவும் முடியும்.

விவசாயி: அது ஒரு அற்புதமான யோசனை ஐயா. அது சாத்தியம்தான்...

பிரதமர்: ஆம், நாம் அந்த திசையில்தான் நகர வேண்டும். இதற்காக இப்போது அரசாங்கம் நிதி வழங்குகிறது.

விவசாயி: மக்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள் ஐயா, நல்ல பலன்களையும் பெறுகிறார்கள்.

பிரதமர்: இன்னொன்று — மழைநீர் பூமிக்கு அடியில் செல்வதற்காக உறிஞ்சு குழாய்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி அனைவருக்கும் பயனளிக்கும்.

விவசாயி: ஆம், நிச்சயமாக.

பிரதமர்: உங்கள் அனைவருடனும் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் புதிய முறைகளைப் பரிசோதிக்கும் தைரியமான மற்றும் கடின உழைப்பாளிகளான விவசாயிகள் — இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பெரும்பாலும் மக்கள், "என் தந்தை இதைச் செய்தார், என் மாமா இதைச் செய்தார், அதனால் நானும் அதையே செய்வேன்" என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் இளைஞர்கள் அந்த மனநிலையைத் தாண்டி முன்னேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

விவசாயி: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்கு நன்றி, எங்களுக்கு 50% மானியம் கிடைத்தது. ஆரம்பத்தில் என்னிடம் சில பசுக்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது என்னிடம் 250-க்கும் மேற்பட்ட கிர் பசுக்கள் உள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டில், நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்தேன். இன்று, கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு கோசாலையை நான் வைத்துள்ளேன். மத்திய அரசு இதற்குப் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளது.

பிரதமர்: ஒரு ஓட்டல் ஊழியராக இருந்த நீங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள்?

விவசாயி: இது அரசின் முன்னெடுப்புகளால் தான் சாத்தியமானது ஐயா.

பிரதமர்: இவ்வளவு பசுக்கள் உங்களிடம் இருக்கும்போது, அவற்றையெல்லாம் நீங்களே வைத்திருக்கிறீர்களா அல்லது மற்றவர்களுக்கு வழங்குகிறீர்களா?

விவசாயி: வறுமையில் வாழும் மற்றும் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு ஆதிவாசி பெண்ணிற்கு, கன்றுகள் உட்பட 63 பசுக்களை நான் பரிசாக வழங்கினேன்.

பிரதமர்: நல்லது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். அங்கேயும் நான் இது போன்ற ஒரு பரிசோதனையைச் செய்தேன்: சுமார் 100 குடும்பங்களுக்கு நான் கிர் பசுக்களை வழங்கினேன்; ஆனால் ஒரு நிபந்தனை, முதல் கன்றுக்குட்டியை என்னிடம் திருப்பித் தர வேண்டும். பின்னர் அதனை நான் மற்றொரு குடும்பத்திற்கு வழங்கினேன்.

விவசாயி: 2020-ம் ஆண்டு உலகளாவிய ஊரடங்கின் போது, நான் ஒரு ஆராய்ச்சி செய்து ஹரித்வாரில் உள்ள துறைக்குச் சென்றேன், அங்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்டேன். அது எனது வாழ்க்கையையே மாற்றியது போல உணர்ந்தேன். இத்திட்டத்தின் மூலம் கிடைத்த மானியங்கள் மற்றும் உதவிகளால் எனக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது.

பிரதமர்: நீங்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்குகிறீர்கள்?

விவசாயி: உத்தரகண்ட் மாநிலத்தின் சிறிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25 இளைஞர்கள் எங்களுடன் பணிபுரிகிறார்கள் ஐயா. அவர்கள் இங்கே நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.

பிரதமர்: மிகச் சிறப்பு.

விவசாயி: சிலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தங்களது திறமைகளைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

விவசாயி: நான் அலங்கார மீன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தியுள்ளேன்.

பிரதமர்: ஆஹா, நீர்வாழ் உயிரின வளர்ப்பு.

விவசாயி: உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக இதை நான் தொடங்கினேன் ஐயா.

பிரதமர்: நல்லது, இதை எப்படிச் செய்தீர்கள்? இதற்கான பயிற்சியை எங்கே பெற்றீர்கள்?

விவசாயி: ஐயா, நான் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், எனது பாடமும் இதே துறை சார்ந்ததுதான். வேலை தேடுபவராக இருப்பதை விட, வேலை வழங்குபவராக மாற வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அதனால்தான் இந்த முயற்சியைத் தொடங்கினேன்.

பிரதமர்: நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.

விவசாயி: ஆம், நிச்சயமாக.

பிரதமர்: இந்தியாவிற்கு இத்துறையில் சிறப்பு நன்மைகள் உள்ளன. இதில் கவனம் செலுத்துவது மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளைத் திறக்கும்.

விவசாயி: புத்தொழில் தொடங்கும் விவசாயிகளுக்கு 'பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்' ஒரு பெரிய நம்பிக்கையாக உள்ளது.

விவசாயி: கிராமங்கள் செழித்தால் நாடு செழிக்கும் என்ற உங்களது தொலைநோக்குப் பார்வை என்னை ஈர்த்தது. சரைகேலாவில், நான் 125 ஏழை பழங்குடியினக் குடும்பங்களைத் தத்தெடுத்து, அங்கு ஒருங்கிணைந்த விவசாயத்தைத் தொடங்கினேன்.

பிரதமர்: உங்களது கல்வி இதற்காக உங்களைத் தயார்படுத்தியதா அல்லது நேரடியாக அந்த இடத்திலேயே பயிற்சி பெற்றீர்களா?

விவசாயி: ஐயா, நீங்கள்தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தீர்கள்.

பிரதமர்: ஓ, அப்படியா?

விவசாயி: வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள். உலகளவில் டாடா ஸ்டீல் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது — எனது தயாரிப்புகளும் டாடா ஸ்டீல் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

பிரதமர்: அருமை.

விவசாயி: ஐயா, நீங்கள்தான் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து கிடைக்கும் சிறிய ஆலோசனைகளும் உரையாடல்களும் எனது வாழ்க்கையைத் தொடர்ந்து மாற்றியமைத்துள்ளன.

விவசாயி: நான் சகி அமைப்புடன் இணைந்துள்ளேன். 20 பெண்களுடன் தொடங்கிய எங்களது பயணம், இன்று 90,000 பெண்கள் வரை வளர்ந்துள்ளது.

பிரதமர்: 90,000 பேரா!

விவசாயி: ஆம் ஐயா. இந்தப் பெண்கள் பால் விற்பனை மூலம் நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள், இதுவரை நாங்கள் 14,000-க்கும் மேற்பட்ட 'லட்சாதிபதி சகோதரிகளை' உருவாக்கியுள்ளோம்.

பிரதமர்: இது ஒரு அதிசயம்!

விவசாயி: என்னிடம் இங்கேயே சிறந்த மீன் வளர்ப்புத் தொழிலும் உள்ளது.

பிரதமர்: மிகவும் நன்று.

விவசாயி: உங்களது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்திற்கு நன்றி, எங்களால் திட்டமிடல் மற்றும் முறையான நீர்வாழ் உயிரின மேலாண்மையைச் செயல்படுத்த முடிந்தது.

பிரதமர்: உங்களுடன் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்?

விவசாயி: சுமார் 100 பேர்.

பிரதமர்: இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வேறு யாராவது இருக்கிறார்களா?

விவசாயி: ஆம் ஐயா. அந்தமானில் இருந்து ஒரு குழு சமீபத்தில் வந்திருந்தது. முன்பு எங்களால் அவர்களைச் சரியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தால் இப்போது வாரியம் செயல்படுகிறது மற்றும் ஐஸ் விநியோகம் கிடைக்கிறது. மீன்களை வைப்பதற்கான இடவசதியும் உள்ளது.

பிரதமர்: ஓ, மிகச் சிறப்பு.

விவசாயி: நான் காஷ்மீரில் இருந்து வந்துள்ளேன். ஒரு நிகழ்ச்சியின் மூலம் உங்களது பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்டு, வேலை செய்யத் தொடங்கி, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் 14 ஊழியர்கள் உள்ளனர்.

பிரதமர்: நல்லது.

விவசாயி: ஆம், 14 ஊழியர்கள் உள்ளனர், ஆண்டுக்கு சுமார் ரூ.15 லட்சம் லாபம் ஈட்டுகிறேன். சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது, மற்றவர்களும் பலன் பெறுகிறார்கள்.

பிரதமர்: இப்போது நீங்கள் பொருட்களை ரயில் மூலம் அனுப்ப முடியும் என்பதால், உங்கள் தயாரிப்புகள் சந்தையை இன்னும் வேகமாகச் சென்றடையும்.

விவசாயி: உங்களது ஆதரவால் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. வேறெந்தப் பிரதமரின் கீழும் இது சாத்தியமாகியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பிரதமர்: ஜம்மு காஷ்மீரில் மிகவும் திறமையான இளைஞர்கள் உள்ளனர்.

விவசாயி: ஆம், இவை அனைத்தும் உங்களது அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியமானது, மற்றபடி அல்ல.

விவசாயி: அவர்களைச் சந்தித்து நீர்வாழ் உயிரின வளர்ப்பு பற்றி விவாதித்தது ஒரு இயற்கை சிகிச்சையைப் போல உணர்ந்தேன்.

விவசாயி: நமஸ்காரம்.

பிரதமர்: நமஸ்கார்.

விவசாயி: ஐயா, நான் உண்மையில் 2014-ல் அமெரிக்காவில் இருந்து திரும்பினேன்.

பிரதமர்: அமெரிக்காவை விட்டு வந்துவிட்டீர்களா?

விவசாயி: ஆம், எனது நாட்டு மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக நான் அமெரிக்காவை விட்டு வெளியேறினேன். முதலில் சிறிய அளவில் 10 ஏக்கர் பண்ணையுடன் தொடங்கினேன். இப்போது, 300 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலத்தையும், அத்துடன் 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் மீன் குஞ்சு பொரிப்பகங்களையும் நிர்வகித்து வருகிறேன். எஃப்.ஐ.டி.எஃப்  திட்டத்தின் கீழ் சுமார் 7% வட்டியில் நிதியுதவி பெற்று, எனது தொழிலை விரிவுபடுத்தினேன். தற்போது என்னிடம் சுமார் 200 ஊழியர்கள் உள்ளனர் ஐயா.

பிரதமர்: ஆஹா! மிகச் சிறப்பு!

விவசாயி: திரு. நரேந்திர மோடி அவர்கள் எங்களை நோக்கி நடந்து வந்த தருணம் — என் வாழ்க்கையில் ஒரு கணம் அப்படியே உறைந்து போனது. அது ஒரு வியக்கத்தக்க  தருணம்.

பிரதமர்: நமஸ்தே, சகோதரரே.

விவசாயி: நான் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் தாரி பகுதியைச் சேர்ந்தவன். என் பெயர் பாவ்னா கோண்ட்வியா. எனது உழவர் உற்பத்தியாளர் அமைப்பில்  1,700 விவசாயிகள் உள்ளனர். நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து 20% ஈவுத்தொகை வழங்கி வருகிறோம்.

பிரதமர்: 1,700 விவசாயிகளா?

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: மொத்த சாகுபடி நிலம் எவ்வளவு?

விவசாயி: நாங்கள் 1,500 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம், நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து 20% ஈவுத்தொகை வழங்கி வருகிறோம், இதன் மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகம்.

பிரதமர்: அவர்கள் வெவ்வேறு பயிர்களை வளர்க்கிறார்களா அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பின்பற்றுகிறார்களா?

விவசாயி: நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) கீழும் பணியாற்றுகிறோம். எங்கள் அமைப்பிடம் நிதி இல்லாதபோது, அரசாங்கம் எந்தவித உத்தரவாதமும் இன்றி ரூ.2 கோடி வழங்கியது எங்களது மிகப்பெரிய சாதனையாகும். அது ஒரு முக்கியமான மைல்கல்.

விவசாயி: நமஸ்காரம் பிரதமர் அவர்களே. எனது பெயர் சுனில் குமார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல் மேரைச் சேர்ந்தவன். நாங்கள் முக்கியமாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் சீரகம் பயிரிடுகிறோம்.

பிரதமர்: நல்லது.

விவசாயி: எனது உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் 1,035 விவசாயிகள் உள்ளனர், அவர்கள் சீரகம் மற்றும் ஈசப்கோல்  பயிரிடுகிறார்கள்.

பிரதமர்: சீரகத்திற்கான சந்தை எங்கே உள்ளது?

விவசாயி: நாங்கள் குஜராத்திற்குள் இருக்கும் பல்வேறு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறோம், அவர்கள் அதனை மேலே கொண்டு செல்கிறார்கள்.

பிரதமர்: யாராவது ஈசப்கோல் ஐஸ்கிரீம் செய்ய முயற்சித்ததுண்டா?

விவசாயி: இல்லை ஐயா.

பிரதமர்: அதன் சந்தை வாய்ப்பினை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்!

விவசாயி: ஆம் ஐயா. 'மதிப்பு கூட்டல்' குறித்த உங்களது சிறிய யோசனை எங்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதற்கு முன்பு நாங்கள் ஐஸ்கிரீம் பற்றி யோசித்ததே இல்லை, ஆனால் இப்போது அது குறித்து ஆராய்வோம்.

விவசாயி: நான் தர்மேந்திர குமார் மௌர், உங்கள் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு அருகிலுள்ள மிர்சாபூரைச் சேர்ந்தவன். நாங்கள் சிறுதானியங்களில்  பணியாற்றி வருகிறோம்.

பிரதமர்: சிறுதானியங்களா?

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: நீங்கள் அவற்றை பேக் செய்து, பிராண்ட் பெயருடன் விற்பனை செய்கிறீர்களா?

விவசாயி: ஆம் ஐயா. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு நாங்கள் அவற்றை விநியோகித்து வருகிறோம்.

விவசாயி: எனது பெயர் ஃபயாஸ் அகமது, நான் காஷ்மீரைச் சேர்ந்தவன். நாங்கள் ஆப்பிள் உற்பத்தி செய்கிறோம்.

பிரதமர்: ஆப்பிள்களா?

விவசாயி: ஆம்.

பிரதமர்: ஆப்பிள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி கிடைத்துள்ளதா?

விவசாயி: ஆம், வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர்: சுமார் 60,000 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் ரயில் மூலம் தில்லியை வந்தடைந்துள்ளன.

விவசாயி: ஆம், அவை தில்லி மற்றும் பிற இடங்களைச் சென்றடைந்துள்ளன.

பிரதமர்: அது ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனை.

விவசாயி: ஆனால்...

பிரதமர்: லாரிகள்  வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன.

விவசாயி: நான் ரூஷிக் சுக்லாம், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவன். நாங்கள் ஏரோபோனிக்ஸ் முறை மூலம் உருளைக்கிழங்கு விதைகளை உற்பத்தி செய்கிறோம்.

பிரதமர்: மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

விவசாயி: ஆம் ஐயா. நாங்கள் செங்குத்து மற்றும் கிடைமட்ட விவசாய முறைகளைப் பயன்படுத்துகிறோம். இவை உருளைக்கிழங்கு விதைகள். இவை தங்கம் இல்லை என்றாலும், தங்கத்திற்கு இணையான மதிப்புடையவை. ஏனெனில் இவற்றை நிலத்தில் பலமடங்காகப் பெருக்கி விவசாயிகளுக்குச் சாகுபடி செய்ய வழங்குகிறோம்.

பிரதமர்: அப்படியென்றால் நீங்கள் உயர்நிலை உற்பத்தியைச் செய்கிறீர்களா?

விவசாயி: ஆம் ஐயா.

பிரதமர்: உருளைக்கிழங்குகள்.

விவசாயி: தொங்கும் உருளைக்கிழங்குகள் (Hanging potatoes) ஐயா.

பிரதமர்: இது ஜெயின் (சமண) மதத்தைச் சேர்ந்த நுகர்வோருக்கு மிகவும் ஏற்றது. மண்ணுக்கு அடியில் விளைந்தால் அவர்கள் அதனை உண்ண மாட்டார்கள்; ஆனால் மண்ணுக்கு மேல் விளைந்தால் அவர்கள் அதனை உண்பார்கள்.

விவசாயி: நாங்கள் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தபோது, அவரிடம் அந்த மினி கிழங்குகளைக் காட்டினோம். அவருக்குக் கிடைமட்ட விவசாயம் மற்றும் ஏரோபோனிக்ஸ் முறை பற்றி முன்பே தெரிந்திருந்தது. அவர் உடனடியாக இதனை "ஜெயின் உருளைக்கிழங்கு" என்று அடையாளம் கண்டுகொண்டார். இந்த உருளைக்கிழங்குகளை அவர் 'ஜெயின் உருளைக்கிழங்கு' என்றே குறிப்பிட்டார்.

விவசாயி: ஐயா, வணக்கம். எனது பெயர் முகமது அஸ்லம், ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நாங்கள் பூண்டு விவசாயம் செய்கிறோம்.

பிரதமர்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

விவசாயி: பாரான் மாவட்டம், ராஜஸ்தான்.

பிரதமர்: பாரான், ராஜஸ்தான்.

விவசாயி: ஆம் ஐயா. நாங்கள் பூண்டில் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளைச் செய்கிறோம் — பூண்டுத் தூள், பேஸ்ட் போன்றவற்றைத் தயாரித்து, ஏற்றுமதி உரிமத்திற்கும் விண்ணப்பித்துள்ளோம்.

பிரதமர்: கடலை மாவு மற்றும் பூண்டு சேர்த்து அப்பளம் தயாரிக்கும் ஒரு இளைஞரை நான் சந்தித்தேன்.

விவசாயி: ஐயா, 'மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் இதனை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் நான் பெருமை அடைகிறேன்.

பிரதமர்: மிகச் சிறப்பு! மிக்க நன்றி, சகோதரரே.

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256859) வருகையாளர் எண்ணிக்கை : 6