பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

முன்பதிவுகளுக்கு ஏற்ப வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது - நேற்று (18.04.2026), 53.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன

இதுவரை 39,000-க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in தளம் வழியாக தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்

2026 மார்ச் முதல், 4.85 லட்சத்திற்கும் அதிகமான பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன - 5.43 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்குப் பதிவு செய்துள்ளனர்

இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன

மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

2026 பிப்ரவரி 28 முதல் மேற்கு ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 10,97,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்

'தேஷ் கரிமா' என்ற இந்திய கச்சா எண்ணெய் கப்பல், 31 இந்திய மாலுமிகளுடன் நேற்று ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தது; இது 2026 ஏப்ரல் 22 அன்று மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, ஈரான் தூதரை வரவழைத்து இந்தியா ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2026 5:35PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய மக்களுக்கான ஆதரவு ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்:

* நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை பீதியுடன் வாங்குவதையும், எல்பிஜியைத் தேவையில்லாமல் முன்பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* மக்கள் வதந்திகளை நம்பாமல், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே சார்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு, பொதுமக்கள் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறும், அவசியமின்றி எல்பிஜி விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேற்று (18.04.2026), 9192 மெட்ரிக் டன் வர்த்தக எல்பிஜி ( சுமார் 4.83 லட்சம் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) விற்பனை செய்யப்பட்டது.

* 2026 ஏப்ரல் மாதத்தில் நேற்று (18.04.2026) வரை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் சராசரி ஆட்டோ எல்பிஜி விற்பனை, பிப்ரவரி மாதத்தில் இருந்த ஒரு நாளைக்கு 177 மெட்ரிக் டன் என்ற சராசரியை விட அதிகரித்து, ஒரு நாளைக்கு 305 மெட்ரிக் டன் ஆக உள்ளது.

*ஆட்டோ எல்பிஜி விற்பனையானது தனியார் நிறுவனங்களிடமிருந்து பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆட்டோ எல்பிஜி விற்பனை 72% அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

* உர ஆலைகளுக்கான ஒட்டுமொத்த எரிவாயு ஒதுக்கீடு, அவற்றின் ஆறு மாத சராசரி நுகர்வில் ஏறத்தாழ 95 சதவீதத்தை எட்டும் வகையில், 09.04.2026 முதல் மேலும் 5% அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வணிக ரீதியான எல்பிஜி கிடைப்பது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், ஹோட்டல்கள், உணவகங்கள் , சிற்றுண்டிச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நகர எரிவாயு விநியோக (சிஜிடி) அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* ஐஜிஎல், எம்ஜிஎல், கெயில் கேஸ், பிபிசிஎல் உள்ளிட்ட சிஜிடி நிறுவனங்கள், வீட்டு உபயோக, வணிக பிஎன்ஜி இணைப்புகளுக்கு ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன.

* சிஜிடி கட்டமைப்புகளின் விரிவாக்கத்திற்குத் தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

* 2026 மார்ச் முதல், சுமார் 4.85 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக சுமார் 5.43 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.

* நேற்று (18.04.2026) வரை, 39,000- க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

* அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் உயர் திறனில் இயங்கி வருகின்றன. அதேவேளையில் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* வீட்டு உபயோக நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் வீட்டு உபயோக எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

* மத்திய கிழக்கு நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையில் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது; இருப்பினும், நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 குறைத்துள்ளது.

* சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் எந்த உயர்வுமின்றி மாற்றமின்றி உள்ளன.

* வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதுடன், பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் துல்லியமான தகவல்களை வழங்குமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

* மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

'தேஷ் கரிமா' என்ற இந்திய கச்சா எண்ணெய் கப்பல், 31 இந்திய மாலுமிகளுடன் நேற்று (18.04.2026) ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்தது; இது 2026 ஏப்ரல் 22 அன்று மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஎல்சிசி சம்னார் ஹெராடு, ஜக் ஆர்னவ் ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது, தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அக்கப்பல்கள் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்கே திரும்பின. இச்சம்பவத்தில் கப்பல் பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.

* இச்சம்பவத்தை அடுத்து புது தில்லியில் உள்ள ஈரான் தூதர், வெளியுறவு அமைச்சகத்தால் நேற்று (18.04.2026) வரவழைக்கப்பட்டு, வெளியுறவுச் செயலாளருடன் ஒரு ஆலோசனை மேற்கொண்டார். அச்சந்திப்பின்போது, ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த இரண்டு இந்திய கப்பல்கள் மீது நேற்று முன்தினம் (17.04.2024) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை வெளியுறவுச் செயலாளர் வெளிப்படுத்தினார். வணிகக் கப்பல்களின் பாதுகாப்புக்கும், கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்புக்கும் இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

* வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தீவிரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த தனது கவலையை மீண்டும் எடுத்துரைத்த வெளியுறவுச் செயலாளர், இந்தியாவின் கருத்துகளை ஈரான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும், ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா நோக்கி வரும் கப்பல்கள் தடையின்றிப் பயணிப்பதற்கான வழிமுறைகளை மிக விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும் ஈரான் தூதரிடம் வலியுறுத்தினார்.

* மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

* கப்பல் போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அது செயல்படுத்தப்பட்டதிலிருந்து 6,893 அழைப்புகளையும் 14,470 மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66 அழைப்புகளும் 204 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன.

* கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி ஷிப்பிங்), இதுவரை 2,538-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் வந்துள்ளனர்.

* இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன.

* மாலுமிகளின் நலனையும், தடையற்ற கடல்சார் செயல்பாடுகளையும் உறுதி செய்வதற்காக, கப்பல் போக்குவரத்து அமைச்சகமானது, வெளியுறவு அமைச்சகம், இந்தியத் தூதரகங்கள், கடல்சார் பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

* மத்திய கிழக்குப் பகுதி முழுவதும், உள்ள இந்தியத் தூதரகங்களும் அலுவலகங்களும் இந்திய சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்விற்காகத் தேவையான உதவிகளையும் அறிவுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

* வான்வெளி திறந்திருக்கும் நாடுகளில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. 2026 பிப்ரவரி 28 முதல், இப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 10,97,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

* இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே குறைந்த அளவிலான திட்டமிடப்படாத விமான சேவைகள் தொடர்ந்து இயக்கி வருகின்றன. இன்று (19.04.2026) 110 சேவைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சவூதி அரேபியா, ஓமன் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

* கத்தார் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டுள்ள நிலையில், கத்தார் ஏர்வேஸ் இன்று (19.04.2026) இந்தியாவிற்கு சுமார் 10 முதல் 11 விமானங்களை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குவைத் வான்வெளி மூடப்பட்டே உள்ளது. குவைத்தின் ஜசீரா ஏர்வேஸ், குவைத் ஏர்வேஸ் ஆகியவை சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு திட்டமிடப்படாத வணிக விமானங்களை இயக்கி வருகின்றன. குவைத்திலிருந்து இந்தியர்களின் பயணம் சவூதி அரேபியா வழியாக தொடர்ந்து எளிதாக்கப்பட்டு வருகிறது.

* பஹ்ரைன் வான்வெளி திறக்கப்பட்டுள்ளது. கல்ஃப் ஏர் விமான நிறுவனம், பஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் தற்போது சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு திட்டமிடப்படாத வணிக விமானச் சேவைகளை அது இயக்கி வருகிறது.

* ஈரான் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானிலிருந்து 2,378 இந்தியர்கள், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்துள்ளது. இவர்களில் 1046 மாணவர்களும் 657 மீனவர்களும் அடங்குவர்.

* இஸ்ரேலிய வான்வெளி பகுதி அளவு திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து இந்தியக் மக்களின் இந்தியப் பயணத்திற்கான வசதிகள் ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாகத் தொடர்ந்து செய்யப்படுகின்றன.

* ஈராக் வான்வெளி, திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் இந்தியா வருவதற்கான வசதிகள், ஜோர்டான், சவூதி அரேபியா வழியாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253552&reg=3&lang=1  

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2253580) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam