பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பிரதமரின் தானிய தன வேளாண் திட்டத்தை தொடங்கி வைத்து, பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2025 3:31PM by PIB Chennai

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்  அவர்களே, காணொலி வாயிலாக எங்களுடன் இணைந்திருக்கும் ராஜீவ் ரஞ்சன் சிங்  அவர்களே, திரு. பகீரத் சௌத்ரி  அவர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களேபிரமுகர்களே மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள எனது அனைத்து  விவசாய சகோதர சகோதரிகளே.

இன்று, அக்டோபர் 11, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இன்று புதிய வரலாற்றைப் படைத்த பாரத அன்னைக்குச் சொந்தமான இரண்டு மகத்தான ரத்தினங்களின் பிறந்தநாள்: பாரத ரத்னா ஸ்ரீ ஜெயபிரகாஷ் நாராயண்  மற்றும் பாரத ரத்னா ஸ்ரீ நானாஜி தேஷ்முக் ஆகியோரே அந்த இரு ரத்தினங்கள். இந்த இரண்டு மகத்தான புதல்வர்களும் கிராமப்புற இந்தியாவின் குரலாக, ஜனநாயகப் புரட்சியின் தலைவர்களாக, மற்றும் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தனர். இன்று, இந்த வரலாற்று நாளில், நாட்டின் தற்சார்பு மற்றும் விவசாயிகள் நலனுக்காக இரண்டு முக்கியமான புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. முதலாவது பிரதமரின்  தன தானிய வேளாண் திட்டம் மற்றும் இரண்டாவது பயிறு தற்சார்பு இயக்கம். இந்த இரண்டு திட்டங்களும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் தலைவிதியை மாற்றியமைக்கும். இந்தத் திட்டங்களுக்காக இந்திய அரசு 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடவுள்ளது. பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் மற்றும் பயிறு தற்சார்பு இயக்கம் ஆகியவற்றுக்காக எனது அனைத்து விவசாய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

விவசாயமும் வேளாண்மையும் எப்போதும் நமது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்துள்ளது. காலம் மாறும்போது விவசாயத்திற்கு அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பது மிக முக்கியம், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முந்தைய அரசுகள் விவசாயத்தைத் அதன் தலைவிதிக்கு விட்டுவிட்டன. விவசாயம் குறித்து அரசிடம் எந்த தொலைநோக்குப் பார்வையும் அல்லது சிந்தனையும் இல்லை. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு அரசுத் துறைகள் தத்தமது வழிகளில் இயங்கின, இது இந்திய விவசாய அமைப்பை படிப்படியாக பலவீனப்படுத்தியது. 21-ம் நூற்றாண்டின் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைய, அதன் விவசாய அமைப்பில் சீர்திருத்தங்கள் அத்தியாவசியமாக இருந்தன. அது 2014-க்குப் பிறகு தொடங்கியது, விவசாயத்தின் மீதான முந்தைய அரசின் அலட்சியப் போக்கை நாங்கள் மாற்றினோம். விதைகள் முதல் சந்தை வரை உங்கள் விவசாயிகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எண்ணற்ற சீர்திருத்தங்களையும் மேம்பாடுகளையும் மேற்கொண்டோம். அதன் விளைவுகள் இன்று நம்முன் உள்ளன.

கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. தானிய உற்பத்தி முன்பு இருந்ததை விட சுமார் 900 இலட்சம் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி 640 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இன்று நாம் பால் உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் இருக்கிறோம். உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. 2014 உடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தேன் உற்பத்தியும் இரு மடங்காகியுள்ளது. முட்டை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், நாட்டில் ஆறு முக்கிய உரத் தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 25 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் (Soil Health Cards) வழங்கப்பட்டுள்ளன. நுண்ணீர் பாசன வசதிகள் 100 இலட்சம் ஹெக்டேரை அடைந்துள்ளன. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், இழப்பீடாகக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளதுஇந்த எண்ணிக்கை சிறியது அல்ல. கடந்த 11 ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் வர தாமதமாகிவிட்டது, ஏனென்றால் நான் பல விவசாயிகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் பல விவசாயிகளுடன், மீனவர்களுடன் பேசினேன், மேலும் விவசாயத் துறையில் பணிபுரியும் பெண்களின் அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் விவசாயிகள் அனுபவித்த இதுபோன்ற பல சாதனைகள் உள்ளன.

ஆனால் நண்பர்களே,

இன்று நாட்டின் மனநிலை ஒரு சில சாதனைகளால் மட்டும் திருப்தியடையவில்லை. நாம் வளர்ச்சி அடைய விரும்பினால், ஒவ்வொரு துறையிலும் நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், மேலும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்தச் சிந்தனையின் விளைவே பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் "இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றிதான் இத்திட்டத்திற்கான உந்துசக்தியாக அமைந்துள்ளது" முந்தைய அரசுகள் நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களைப் பின்தங்கியவை என்று அறிவித்த பின்னர் அவற்றைக் கைவிட்டன. நாங்கள் அந்த மாவட்டங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி, அவற்றை இலட்சிய மாவட்டங்கள் என்று அறிவித்தோம். இந்த மாவட்டங்களில் மாற்றத்திற்கான எங்களது மந்திரம் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை ஆகும். இதன் பொருள், முதலில் ஒவ்வொரு அரசுத் துறையையும், பல்வேறு திட்டங்களோடு, மாவட்டத்தின் ஒவ்வொரு குடிமகனையும் இணைப்பது, பின்னர் அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் பணியாற்றுவது, அதன் பிறகு மற்ற மாவட்டங்களுடன் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடுவது. இந்த அணுகுமுறையின் பலன்கள் இன்று தெளிவாகத் தெரிகின்றன.

நண்பர்களே,

இப்போது நாங்கள் இலட்சிய மாவட்டங்கள் என்று அழைக்கும் இந்த 100க்கும் மேற்பட்ட பின்தங்கிய மாவட்டங்களில், (இப்போது நாங்கள் அவற்றை பின்தங்கிய மாவட்டங்கள் என்று அழைப்பதில்லை), சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலைகளைப் பார்க்காத குடியிருப்புகள் 20 சதவீதம் இருந்தன. இன்று, இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் காரணமாக, அத்தகைய குடியிருப்புகளின் பெரும்பாலானவை சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அப்போது பின்தங்கிய மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டவற்றில், 17 சதவீத குழந்தைகள் தடுப்பூசி வரம்பிற்கு வெளியே இருந்தனர். இன்று, இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் காரணமாக, அத்தகைய குழந்தைகளில் பெரும்பாலானோர் தடுப்பூசியின் பலனைப் பெறுகின்றனர். அந்த பின்தங்கிய மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சாரம் இல்லை. இன்று, இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் காரணமாக, அத்தகைய ஒவ்வொரு பள்ளிக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

வறுமையில் உழன்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்போது, பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்போது, அதன் முடிவுகளும் மிகச் சிறப்பாக அமைகின்றன. இன்று, இலட்சிய மாவட்டங்களில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது, கல்வியின் தரம் மேம்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் இப்போது பல அளவுகோல்களில் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாகச் செயல்படுகின்றன.

நண்பர்களே,

பிரமரின் தன தானிய வேளாண் திட்டம், கால்நடை பராமரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திக்கு இந்தத் திட்டம் மூலம் ஊக்குவிக்கப்படும். நாட்டில் கறவை மாடுகளின் சராசரி பால் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கால்நடைகளின் உடல்நலனைப் பாதுகாப்பது ஒரு நல்ல தொடக்கமாகும், ஆனால், கால்நடைகளுக்கான மேம்பட்ட தரமான உணவை வழங்க வேண்டிய சவால்கள் இன்னும் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், நாங்கள் கால்நடை உணவுக்கான வசதிகளையும் மேம்படுத்தப் போகிறோம். கால்நடை உணவுக்கான தானியங்களை உற்பத்தி செய்ய, ஒரு சிறப்பு அணுகுமுறையில் நாங்கள் பணியாற்றப் போகிறோம். இதன் மூலம் கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டாத விவசாயிகள் கூட அதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நண்பர்களே,

வேளாண்மையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் இன்று நான் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயத் துறையில் இன்று காணப்படும் மாற்றங்களுக்கு நீங்கள் அனைவரும் கொடுத்த உழைப்பே காரணம். நாட்டிற்கான இந்த அர்ப்பணிப்புக்கு நான் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். நீங்கள் ஒரு பெரிய சவால் மற்றும் பொறுப்பைக் கொண்டிருந்தீர்கள், அதை நீங்கள் நிறைவேற்றினீர்கள். ஆனால், உங்கள் சவால்கள் முடிந்துவிடவில்லை. அடுத்து நாம் அனைவரும் புதிய இலக்குகளை அடைவதற்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும். விவசாயத் துறையில் இப்போது பல புதிய வாய்ப்புகளும் சவால்களும் உருவாகி வருகின்றன.

நண்பர்களே,

இலட்சிய மாவட்டங்கள் திட்டத்தைப் போலவே, பிரதமரின் தன தானிய வேளாண் திட்டமும் விவசாயிகளுக்கும், உள்ளூர் அரசு ஊழியர்களுக்கும், அந்த மாவட்டத்தின் பொறுப்ப அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்குகிறது. பிரமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறதென்றால், ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அதன் திட்டமிடலை மாற்ற முடியும். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் விவசாயிகளையும் தலைவர்களையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், இப்போது நீங்கள் மாவட்ட அளவில், அங்குள்ள மண் மற்றும் காலநிலைக்கு ஏற்ற ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

எந்தப் பயிர்கள் வளர்க்கப்படும், எந்த விதப் பயிர் வகைகள் பயன்படுத்தப்படும், மற்றும் எந்த உரங்கள் எந்த நோக்கத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதை ஒவ்வொரு மாவட்டமும் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும். இதைப் பற்றி கவனமாகச் சிந்தித்து, ஒரு புதிய வழியில் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு பண்ணைக்கும் நீங்கள் திட்டமிட வேண்டும்.

இப்போது, எங்காவது அதிக நீர் இருந்தால், அங்கே ஒரு வகை பயிர் இருக்கும், எங்காவது நீர் பற்றாக்குறை இருந்தால், அங்கே அந்த வகை பயிர்களைப் பயிரிட வேண்டும். விவசாயம் சாத்தியமில்லாத இடங்களில், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஊக்குவிக்கப்பட வேண்டும். சில பகுதிகளில், தேன் வளர்ப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கடலோரப் பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தின் வெற்றி, அதன் உள்ளூர் மட்டத்திலான செயல்பாட்டின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். எனவே, நமது இளம் அதிகாரிகளுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. நாட்டின் நூறு மாவட்டங்களில் விவசாயத்தின் போக்கை  இளம் நண்பர்கள், விவசாயிகளுடன் இணைந்து மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், இந்த கிராமத்தில் விவசாயத்தின் போக்கு மாறியவுடன், முழு கிராமத்தின் பொருளாதாரமும் மாறும்.

நண்பர்களே,

இன்று பயிறு தற்சார்பு இயக்கம் ஒன்றும் தொடங்கப்படுகிறது. இது பயிறு உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு இயக்கம் மட்டுமல்ல, நமது எதிர்காலத் தலைமுறைக்கு சக்தியூட்டும் ஒரு இயக்கமுமாகும். நான் முன்பே சொன்னது போல், கடந்த ஆண்டுகளில் இந்திய விவசாயிகள் சாதனை அளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர்; அது கோதுமையாக இருந்தாலும் சரி, நெல்லாக இருந்தாலும் சரி. இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஆனால் நண்பர்களே, நாம் மாவு மற்றும் அரிசிக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்; நம் வீடுகளில்கூட நாம் மாவு மற்றும் அரிசியை மட்டுமே நம்பி இருப்பதில்லை, நமக்கு மற்ற விஷயங்களும் தேவை. மாவு மற்றும் அரிசி பசியை ஆற்றுமென்றாலும், போதுமான ஊட்டச்சத்துக்களுக்கு இன்னும் நிறைய தேவைப்படுகிறது, அதற்கான திட்டமிடலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய இந்தியாவின் ஊட்டச்சத்துக்காக, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு, புரதம் மிகவும் முக்கியமானது. புரதம் என்பது நமக்குத் தேவைப்படும் மற்ற விஷயங்களில் ஒன்றாகும். நமது குழந்தைகளுக்கும், நமது எதிர்காலத் தலைமுறைக்கும், அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் புரதம் சம அளவில் முக்கியமானது. மேலும், இது இயற்கையானதுதான், குறிப்பாக நம் நாட்டில் பெரிய சமூகமாக இருக்கும் சைவ உணவு உண்பவர்களுக்கு, பயிறு வகைகளே அவர்களுக்கான புரதத்தின் மிகப்பெரிய ஆதாரம். பயிறு வகைகளே இதற்குத் தீர்வாகும்.

ஆனால் சவால் என்னவென்றால், இன்றும்கூட, இந்தியா ஒரு விவசாய நாடு என்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற தேவைகளுக்கு இந்தியாவால் இன்னமும் தன்னுடைய சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்று, நாடு அதிக அளவில் பயிறு வகைகளை இறக்குமதி செய்கிறது, அவற்றை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எனவேதான், பயிறு தற்சார்பு இயக்கம் மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான இந்த பயிறு தற்சார்பு இயக்கம் விவசாயிகளுக்கு இதில் பெரிதும் உதவும். எப்படியாவது, நாம் 35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிறு சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த இயக்கத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்படும், மேலும் பயிறு வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான சரியான ஏற்பாடுகளும் செய்யப்படும். இது நாட்டின் சுமார் இரண்டு கோடி பயிறு விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

சிறிது நேரத்திற்கு முன்பு, நான் சில பயிறு விவசாயிகளுடன் பேசினேன். அவர்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருந்தனர், மேலும் அவர்களின் சொந்த அனுபவங்கள் முற்றிலும் வெற்றிகரமானவையாக இருந்தன. "தாங்கள் இவ்வளவு பெரிய அளவில் இதை எப்படிச் செய்தார்கள் என்று பார்க்க இப்போது பல விவசாயிகள் வருகிறார்கள்," என்று அவர்கள் கூறினார்கள். பயிறு வகைகளில் நாட்டைத் தற்சார்பு அடையச் செய்வது குறித்து அவர்கள் மிகுந்த பலத்துடனும் நம்பிக்கையுடனும் பேசுவதை நான் கண்டேன்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவின் நான்கு பலமான தூண்களைப் பற்றி செங்கோட்டையிலிருந்து நான் பேசினேன். இந்த நான்கு தூண்களில், நீங்கள், எனது விவசாய சகோதரர்களே, நமது மிகப்பெரிய உணவு வழங்குநர்களே, ஒரு பலமான தூணாக இருக்கிறீர்கள். கடந்த 11 ஆண்டுகளாக, அரசாங்கம் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கவும், விவசாயத்தில் அதிக முதலீட்டை உறுதி செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. எங்களது இந்த முக்கியமான  கவனம் வேளாண்துறை பட்ஜெட்டிலும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த 11 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த பட்ஜெட்டால் நமது சிறு விவசாயிகளே அதிகம் பயனடைந்துள்ளனர்.

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இந்தியா தனது விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் அரசாங்கம், அதன் 10 ஆண்டு ஆட்சியில் உரங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்கியது. நான் வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி ரூபாய். ஆனால், நமது அரசாங்கம், பாஜக-என்டிஏ அரசாங்கம், கடந்த 10 ஆண்டுகளில் உரங்களுக்கு 13 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மானியம் வழங்கியுள்ளது.

நண்பர்களே,

காங்கிரஸ் அரசு ஒரு வருடத்தில் விவசாயத்திற்காகச் செலவிட்ட அதே தொகையைத்தான், பிஜேபி-என்டிஏ அரசு பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஒரே தவணையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்கிறது. இதுவரை, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நண்பர்களே,

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, நமது அரசு அவர்களுக்கு பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பால் உள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, கூடுதல் வருமானத்திற்காக கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் தேன் வளர்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இது சிறு விவசாயிகளுக்கும், நிலமற்ற குடும்பங்களுக்கும் அதிகாரமளிக்கிறது. மேலும், நாட்டின் விவசாயிகள் அதன் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

இன்று, தேன் உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, 11 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தேன் இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு, நாம் சுமார் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள தேனை ஏற்றுமதி செய்து வந்தோம், 450 கோடி ரூபாய். ஆனால் கடந்த ஆண்டு, 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் நமது விவசாயிகளுக்கு மூன்று மடங்கு அதிக பணம் கிடைத்துள்ளது.

நண்பர்களே,

இன்று, கிராமத்தின் வளம் மற்றும் விவசாயத்தின் நவீனமயமாக்கலில் நமது சகோதரிகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நான் சற்று முன்பு ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரிடம் பேசிக் கொண்டிருந்தேன்; அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர், அவர் தனது சுய உதவிக் குழுவுடன் இணைந்துள்ளார். "இன்று தங்களுக்கு 90 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், 90 ஆயிரம், அவர் எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்க வேண்டும்!" என்று அவர் என்னிடம் கூறினார். நான் ஒரு டாக்டர் சகோதரியைச் சந்தித்தேன்; அவர் தானே ஒரு படித்த மருத்துவர். ஆனால் இப்போது அவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

பாருங்கள், வயல்களில் விவசாய வேலைகளாக இருந்தாலும் சரி அல்லது கால்நடை வளர்ப்பாக இருந்தாலும் சரி, இன்று கிராமத்துப் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் பிரச்சாரம் விவசாயத்திற்குப் பெரும் உதவியைச்  செய்கிறது. இன்று, நமோ ட்ரோன் சகோதரிகள் கிராமங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் நவீன முறைகளில் முன்னோடியாக உள்ளனர். இதனால், நமோ ட்ரோன் சகோதரிகள் ஆயிரக்கணக்கான ரூபாயை ஈட்டி வருகின்றனர்.

அதேபோல், விவசாயச் செலவைக் குறைப்பதிலும் சகோதரிகளின் பங்கு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்க, அத்தியாவசிய ஆதரவை வழங்க நாடு முழுவதும் 17,000க்கும் மேற்பட்ட தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரம் வேளாண் நண்பர்கள் இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகளுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்கத் தயாராக உள்ளனர்.

நண்பர்களே,

ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு கால்நடை வளர்ப்பவருக்கும் ஏற்படும் செலவுகளைக் குறைத்து, அவர்களுக்கு அதிக லாபத்தை வழங்குவதே எங்கள் முயற்சி. சிவராஜ் ஜி ஜி.எஸ்.டி-யில் கொண்டு வரப்பட்ட புதிய சீர்திருத்தங்களைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார், இது கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் பெரும் பயன் அளித்துள்ளது. இப்போதைய சந்தை நிலவரப்படி வரும் செய்திகள் என்னவென்றால், இந்த பண்டிகைக் காலத்தில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் டிராக்டர்களை வாங்குகிறார்கள். ஏனென்றால், டிராக்டர்கள் இன்னும் மலிவாகிவிட்டன.

நாட்டில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தபோது, விவசாயிகளுக்கு எல்லாமே விலை உயர்ந்ததாக இருந்தது. டிராக்டர்களை மட்டும் பாருங்கள், காங்கிரஸ் அரசு ஒரு டிராக்டருக்கு எழுபதாயிரம் ரூபாய் வரி விதித்தது. புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்குப் பிறகு, அதே டிராக்டர் இப்போது சுமார் நாற்பதாயிரம் ரூபாய் விலை குறைந்துள்ளது.

நண்பர்களே,

விவசாயிகள் பயன்படுத்தும் பிற இயந்திரங்களுக்கும் ஜி.எஸ்.டி. கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நெல் நடவு இயந்திரத்தில்  பதினைந்தாயிரம் ரூபாய் மிச்சமாகும். அதேபோல், இயந்திர கலப்பைகள்  மீது பதினாயிரம் ரூபாய் சேமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுவடை கதிரடிக்கும் எந்திரங்களில் கூட இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீங்கள் சேமிப்பீர்கள். சொட்டுநீர்ப் பாசனம். தெளிப்பு நீர்ப்பாசனம் தொடர்பான உபகரணங்களாக இருந்தாலும் சரி, அறுவடை இயந்திரங்களாக இருந்தாலும் சரி, அனைத்திலும் ஜி.எஸ்.டி. வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால் மலிவாகிவிட்டன. ஒட்டுமொத்தமாக, கிராமப்புறங்களில் ஒரு குடும்பம் தங்கள் சேமிப்பை இரு மடங்காக அதிகரித்துள்ளது. முதலாவதாக, அன்றாடப் பொருட்கள் குறைந்தவிலையில் கிடைக்கின்றன.

எனது அன்பான விவசாய நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு, நீங்கள் இந்தியாவை உணவு உற்பத்தியில் தற்சார்பு அடையச் செய்தீர்கள். இப்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். ஒருபுறம், நாம் தற்சார்பு அடைய வேண்டும். மறுபுறம், நாம் உலகச் சந்தைக்காகவும் உற்பத்தி செய்ய வேண்டும். இப்போது, நண்பர்களே, நாம் உலகின் கதவுகளைத் தட்ட வேண்டும். உலகச் சந்தைகளில் பிரபலமாகும் பயிர்கள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதில் பின்தங்கிவிடக் கூடாது. இந்த விஷயத்தில் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் மற்றும் பயிறு தற்சார்பு இயக்கம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த முக்கியமான தருணத்தில், இந்தத் திட்டங்களுக்காக எனது விவசாய சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்காகவும் எனது வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177776

***

SS/VK/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2252408) வருகையாளர் எண்ணிக்கை : 15