பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்பு வலுவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமானதாகவும் உள்ளது: மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 10 APR 2026 6:25PM by PIB Chennai

மேற்கு ஆசிய சூழல் குறித்து, மத்திய அரசு இன்று புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் நடத்திய ஒரு விளக்கக் கூட்டத்தில் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர். அதன்  முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

 

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் மின்சார அமைப்பு வலுவாகவும், நன்கு பன்முகப்படுத்தப்பட்டதாகவும், குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமானதாகவும் உள்ளது என்று மின்சார அமைச்சகம் தெரிவித்தது.

 

இந்தியாவின் தற்போதைய 531 ஜிகாவாட்டிற்கும் அதிகமான நிறுவப்பட்ட திறன், நன்கு பன்முகப்படுத்தப்பட்ட மின்வளத் தொகுப்பைப் பிரதிபலிக்கிறது. இதில் நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர்மின்சக்தி மற்றும் அணுசக்தி ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளும், 50%-க்கும் அதிகமான புதைபடிவமற்ற ஆதாரங்களும் அடங்கும்.

 

இந்தத் திறன், சுமார் 5 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு வலுவான மின்பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் 120 ஜிகாவாட்டிற்கும் அதிகமான மண்டலங்களுக்கு இடையேயான மின்மாற்றுத் திறனால் இயங்குகிறது. இது மண்டலங்கள் முழுவதும் நம்பகமான மின்சார வசதியை உறுதி செய்கிறது. அண்மைக்கால விநியோக சவால்களைச் சமாளிக்க, அனல் மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு உறுதி செய்யப்படுகிறது. தற்போதுள்ள திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகள் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகின்றன.

 

தேசிய மின்சாரத் திட்டத்தின்படி, 2031-32-க்குள் மொத்த நிறுவப்பட்ட திறன் சுமார் 874 ஜிகாவாட்டை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் புதைபடிவமற்ற ஆதாரங்களை நோக்கி குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.  அவற்றின் பங்கு 67%-ஐத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி சேமிப்பின் விரிவாக்கம் மணிக்கு 300 ஜிகாவாட் வரை இருக்கக்கூடும். 

 

சமையல் எரிவாயுவைப் பொருத்தவரை,  ஆன்லைன் எல்பிஜி முன்பதிவுகள் சுமார் 98% ஆக அதிகரித்துள்ளன. சீர்திருத்தத்துடன் இணைக்கப்பட்ட 10% ஒதுக்கீடு உட்பட, மொத்த வர்த்தக எல்பிஜி ஒதுக்கீடு, நெருக்கடிக்கு முந்தைய நிலைகளில் சுமார் 70% ஆக அதிகரித்துள்ளது.

 

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர், அனைத்துத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்ததுடன், அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்  பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

லெபனான் குறித்த அறிக்கை:

 

லெபனானில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததாக வரும் செய்திகள் குறித்து இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

லெபனானின் அமைதி மற்றும் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படைக்கு (UNIFIL) படைகளை அனுப்பும் ஒரு நாடு என்ற வகையில், நிகழ்வுகளின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

 

பொதுமக்களின் பாதுகாப்பிற்கே முதன்மையான முன்னுரிமை என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. சர்வதேசச் சட்டங்களைப் பின்பற்றி, நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது இன்றியமையாதது. லெபனானில் உள்ள இந்திய தூதரகம், அங்குள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்காக அவர்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250902&reg=3&lang=1

 

(Release ID: 2250902)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2251044) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam