பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற 2-வது உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 DEC 2025 8:10PM by PIB Chennai

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர், டாக்டர் டெட்ரோஸ் அவர்களே; மத்திய சுகாதார அமைச்சகத்தில் எனது சகாவான ஜே.பி. நட்டா  அவர்களே; ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்  அவர்களே; இந்த நிகழ்வுடன் தொடர்புடைய பிற நாடுகளின் அமைச்சர்களே; பல்வேறு நாடுகளின் தூதர்களே; அனைத்துச் சிறப்புப் பிரதிநிதிகளே; பாரம்பரிய மருத்துவத் துறையில் பணியாற்றும் மதிப்பிற்குரிய நிபுணர்களே; பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!

பாரம்பரிய மருத்துவத்திற்கான இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சிமாநாட்டின் நிறைவு நாளில் உங்களை நான் சந்திக்கிறேன். கடந்த மூன்று நாட்களாக, பாரம்பரிய மருத்துவத் துறையைச் சார்ந்த உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நிபுணர்கள் இங்கே தீவிரமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். பாரதம் இதற்கு ஒரு வலுவான தளமாகச் செயல்படுவதிலும், இதில் உலக சுகாதார அமைப்பு ஒரு தீவிரமான பங்கினை வகிப்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்றியமைத்ததற்காக உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் இந்தியாவில் ஜாம்நகரில் நிறுவப்பட்டிருப்பது இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பும் பெருமிதத்திற்குரிய விஷயமுமாகும். 2022-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய உச்சிமாநாட்டின் போது, உலகம் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தது. இந்த உலகளாவிய மையத்தின் நற்பெயரும் செல்வாக்கும் உள்ளூர் மட்டத்திலிருந்து உலகளாவிய நிலைக்கு விரிவடைந்து வருவது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம். இந்த உச்சிமாநாட்டின் வெற்றியே இதற்கு மிகப்பெரிய உதாரணம்.

பாரம்பரிய அறிவும் நவீன நடைமுறைகளும் இணையும் சங்கமமாக இந்த உச்சிமாநாடு திகழ்கிறது. மருத்துவ அறிவியல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்ட பல புதிய முயற்சிகளும் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையே விரிவான உரையாடல்களும் இங்கே நடைபெற்றுள்ளன. இந்த உரையாடல் கூட்டு ஆராய்ச்சி, ஒழுங்குமுறை விதிமுறைகளை எளிதாக்குதல் மற்றும் பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இத்தகைய ஒத்துழைப்பு, வரும் காலங்களில் பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகிக்கும்.

நண்பர்களே,

இந்த உச்சிமாநாட்டில் பல முக்கியமான விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டியிருப்பது நமது வலுவான கூட்டாண்மையைப் பிரதிபலிக்கிறது. ஆராய்ச்சியை வலுப்படுத்துதல், பாரம்பரிய மருத்துவத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் உலகம் முழுவதும் நம்பத்தகுந்த ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற விவகாரங்கள் பாரம்பரிய மருத்துவத்தை பெரிதும் வலுப்படுத்தும். பாரம்பரியத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான ஒரு புதிய ஒத்துழைப்பை இங்கே நடைபெற்ற கண்காட்சியில் டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன நல்வாழ்வு உள்கட்டமைப்புகள் மூலம் நாம் கண்டோம். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது, உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திறன் பல மடங்கு அதிகரிக்கிறது. எனவே, உலகளாவிய பார்வையில் இந்த உச்சிமாநாட்டின் வெற்றி மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

பாரம்பரிய

மருத்துவ முறைகளில் யோகா ஒரு முக்கிய அங்கமாகும். ஆரோக்கியம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை யோகா முழு உலகிற்கும் காட்டியுள்ளது. இந்தியாவின் முயற்சிகளாலும், 175-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடனும் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளில், யோகா உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை நாம் கண்டுள்ளோம். யோகாவின் வளர்ச்சிக்கும் அதன் பிரச்சாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒவ்வொரு தனிநபரையும் நான் பாராட்டுகிறேன்.

 

இன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில சிறந்த நபர்களுக்கு இந்திய பிரதமரின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற நடுவர் குழுவால் கடினமான தேர்வு செயல்முறை மூலம் இந்த விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதைப் பெற்றுள்ள அனைவரும் யோகா மீதான அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் வாழ்நாள் முழுவதுமான ஈடுபாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும் கவுரவிக்கப்பட்ட அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த உச்சிமாநாட்டின் முடிவுகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரம்பரிய மருத்துவ உலகளாவிய நூலகம்  என்ற பெயரில் ஒரு உலகளாவிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய மருத்துவம் சார்ந்த அறிவியல் தரவுகள் மற்றும் கொள்கை ஆவணங்களை ஒரே இடத்தில் பாதுகாக்கும். இதன் மூலம் மதிப்புமிக்க தகவல்கள் அனைத்து நாடுகளையும் சமமான முறையில் சென்றடைவது எளிதாகும். இந்தியா ஜி20  அமைப்பிற்கு தலைமை வகித்த போது, முதலாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சிமாநாட்டில்தான் இந்த நூலகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நண்பர்களே,

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் உலகளாவிய கூட்டு ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணத்தை இங்கே முன்வைத்துள்ளனர். கூட்டாளிகளாக நீங்கள் தரம், பாதுகாப்பு மற்றும் முதலீடு போன்ற விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளீர்கள். இந்த உரையாடலின் மூலம் உருவான தில்லி பிரகடனம் வரவிருக்கும் ஆண்டுகளுக்கான நமது பகிரப்பட்ட ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த கூட்டு முயற்சிக்காகப் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களை நான் பாராட்டுவதோடு, அவர்களின் ஒத்துழைப்பிற்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. இது பாரதத்தின் ஒரு எளிய பங்களிப்பாகும். ஆராய்ச்சி, ஒழுங்குமுறை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு உலகளாவிய மையமாக இது செயல்படும்.

நண்பர்களே,

உலகெங்கிலும் குணப்படுத்துவதற்கான கூட்டாண்மைகளை (Partnerships of healing) உருவாக்குவதில் பாரதம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது தொடர்பாக இரண்டு முக்கியமான ஒத்துழைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நமது அண்டை நாடுகளான பிம்ஸ்டெக் நாடுகளுக்காக ஒரு சிறப்பு மையத்தை நாம் நிறுவி வருகிறோம். இரண்டாவதாக, ஜப்பான் நாட்டுடன் ஒரு புதிய கூட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளோம். இந்த முயற்சி அறிவியல், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்க முயல்கிறது.

நண்பர்களே,

இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள் "சமநிலையை மீட்டெடுத்தல்: ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அறிவியல் மற்றும் நடைமுறை" என்பதாகும். சமநிலையை மீட்டெடுப்பது என்பது எப்போதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அடிப்படைத் தத்துவமாக இருந்து வருகிறது. ஆயுர்வேதம் ஆரோக்கியத்தின் சாரமாக சமநிலையை அல்லது சமநிலைப் புள்ளியைத் தான் வரையறுக்கிறது என்பதை நிபுணர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். யாருடைய உடலில் இந்தச் சமநிலை பராமரிக்கப்படுகிறதோ, அவரே உண்மையிலேயே ஆரோக்கியமானவர்.

இன்று நாம் கவனித்தால், நீரிழிவு, மாரடைப்பு மற்றும் மனச்சோர்வு முதல் புற்றுநோய் வரை பெரும்பாலான நோய்களுக்கு வாழ்க்கை முறை காரணிகளும், பல்வேறு சமநிலையின்மைகளுமே முக்கிய அடிப்படைக் காரணங்களாக உருவெடுத்து வருகின்றன. வேலை-வாழ்க்கை சமநிலையின்மை, உணவுமுறை சமநிலையின்மை, தூக்கமின்மை, குடல் நுண்ணுயிர் சமநிலையின்மை, கலோரி சமநிலையின்மை மற்றும் உணர்ச்சி ரீதியான சமநிலையின்மை போன்ற பல உலகளாவிய சுகாதார சவால்கள் இந்தச் சீர்குலைவுகளால் தான் ஏற்படுகின்றன. ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன, தரவுகளும் இதைத் தெளிவாக ஆதரிக்கின்றன. சுகாதார நிபுணர்களாகிய நீங்கள் இந்த யதார்த்தத்தை மற்றவர்களை விடச் சிறப்பாகப் புரிந்துகொள்வீர்கள். இருப்பினும், இன்று சமநிலையை மீட்டெடுப்பது என்பது ஒரு உலகளாவிய நோக்கம் மட்டுமல்ல, அது ஒரு உலகளாவிய அவசரத் தேவையாகவும் மாறியுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாம் இன்னும் அதிக வேகத்துடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்த காலகட்டத்தில், வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிப்பது என்பது இன்னும் சிக்கலான சவாலாகவே மாறப்போகிறது. செயற்கை நுண்ணறிவு  மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்ப யுகத்தின் வருகையோடு, மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்படக் காத்திருக்கிறது. வரவிருக்கும் ஆண்டுகளில், நாம் வாழும் முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறும். வசதிகளும் வளங்களும் பெருகி, அதே சமயம் அதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாத இந்த அதிவேக வாழ்க்கை முறை மாற்றங்கள், மனித உடலுக்கு எதிர்பாராத சவால்களை உருவாக்கக்கூடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பாரம்பரிய சுகாதாரப் பாதுகாப்பில் தற்போதைய தேவைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தக் கூடாது; எதிர்காலத்தை நோக்கிய பொறுப்பையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

பாரம்பரிய மருத்துவம் பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம், அதன் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ரீதியான அங்கீகாரம் குறித்த இயல்பான கேள்வி எழுகிறது. பாரதம் இந்த திசையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த உச்சிமாநாட்டின் போது அஸ்வகந்தாவை (அமுக்கரா) உதாரணமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருந்தொற்று காலத்தில், இதற்கான உலகளாவிய தேவை வேகமாக அதிகரித்ததுடன், பல நாடுகளிலும் இதனைப் பயன்படுத்துவது தொடங்கியது. இந்தியா அஸ்வகந்தாவை முறையான ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் நம்பகமான மற்றும் அறிவியல்பூர்வமான முறையில் முன்னெடுத்து வருகிறது. இந்த உச்சிமாநாட்டின் போது அஸ்வகந்தா குறித்து ஒரு சிறப்பு உலகளாவிய விவாதமும் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் சர்வதேச நிபுணர்கள் அதன் பாதுகாப்பு, தரம் மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆழமாக விவாதித்தனர். இத்தகைய காலத்தால் சோதிக்கப்பட்ட மூலிகைகளை உலகளாவிய பொது சுகாதாரக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்க பாரதம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

நண்பர்களே,

பாரம்பரிய மருத்துவம் என்பது நல்வாழ்வு அல்லது வாழ்க்கை முறை மேலாண்மைக்கு மட்டுமே உட்பட்டது என்ற ஒரு கருத்து ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணம் இப்போது வேகமாக மாறி வருகிறது. இக்கட்டான மருத்துவச் சூழல்களில் கூட பாரம்பரிய மருத்துவம் ஒரு பயனுள்ள பங்கினை வகிக்க முடியும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா இத்துறையில் முன்னேறி வருகிறது. ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையமும் இணைந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாரதத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சையை வலுப்படுத்த இவை இரண்டும் இணைந்து கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்த முயற்சி, நவீன புற்றுநோய் சிகிச்சைகளுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; மேலும் இது ஆதாரங்கள் அடிப்படையிலான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உதவும்.

நாட்டில் உள்ள  பல முன்னணி நிறுவனங்கள் ரத்த சோகை, மூட்டுவலி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தீவிர ஆரோக்கிய சவால்கள் குறித்து மருத்துவ ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்தியாவில் இந்தத் துறையில் பல புதிய புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இளைஞர்களின் ஆற்றல் பழமையான மரபுகளுடன் இணைந்து வருகிறது. இந்த அனைத்து முயற்சிகளின் மூலமும் பாரம்பரிய மருத்துவம் ஒரு புதிய மற்றும் உயரிய லட்சியத்தை நோக்கித் தெளிவாக முன்னேறிச் செல்கிறது.

நண்பர்களே,

இன்று பாரம்பரிய மருத்துவம் ஒரு உறுதியான திருப்புமுனையில் நிற்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்கள் நீண்ட காலமாக இதையே நம்பியுள்ளனர். இருப்பினும், பாரம்பரிய மருத்துவத்திற்கு அதன் மகத்தான ஆற்றலுக்கு ஏற்ப அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அறிவியலின் மூலம் நாம் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதன் சென்றடைவை நாம் மேலும் விரிவுபடுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் உரியதல்ல; இது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

கடந்த மூன்று நாட்களாக இந்த உச்சிமாநாட்டில் காணப்பட்ட பங்கேற்பு, உரையாடல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை, உலகம் இந்தத் திசையில் ஒன்றிணைந்து முன்னேறத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. நம்பிக்கை, மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் பாரம்பரிய மருத்துவத்தை நாம் கூட்டாக முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதி ஏற்போம். இந்த உச்சிமாநாட்டின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

----

(Release ID: 2206754)

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2249612) வருகையாளர் எண்ணிக்கை : 22