பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
06 APR 2026 6:03PM by PIB Chennai
மேற்கு ஆசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் பிரதிநிதிகள், பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு:
உணவுப் பாதுகாப்புச் சூழலை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பொது விநியோக அமைப்புமுறைக்குப் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அவசரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், போதுமான அளவு அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு உள்ளது.
அரசு உணவு தானிய விலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவைப்படும் போதெல்லாம் திறந்த சந்தை விற்பனைத் திட்டம் (உள்நாட்டு) மூலம் சந்தைத் தலையீடுகளை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விநியோகத்தை அதிகரிக்கவும், விலைகளை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய உணவுக் கழகம் தனது உபரி கோதுமை மற்றும் அரிசியைத் திறந்த சந்தையில் வெளியிடுகிறது. தேவைப்பட்டால், இத்தகைய தலையீடுகளை மேற்கொள்வதற்கு கழகத்திடம் போதுமான கையிருப்பு உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், உள்நாட்டில் சமையல் எண்ணெய்களின் இருப்பு சீராக உள்ளது. இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இருந்து இறக்குமதி சீராகத் தொடர்கிறது.
போதுமான சர்க்கரை கையிருப்பு உள்ளது மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 15.80 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் 3.73 லட்சம் மெட்ரிக் டன் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 578 மையங்களிலிருந்து பெறப்படும் 40 உணவுப் பொருட்களின் தினசரி விலைகளைக் கண்காணித்து வருகிறது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, விலைப்போக்குகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, அசாதாரணமான விலை ஏற்ற இறக்கங்கள் எதுவும் காணப்படவில்லை. பெரும்பாலான பொருட்களின் விலைகள் நிலையாகவே உள்ளன. இது, போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் இருப்பதைக் குறிக்கிறது.
கடந்த ஆண்டு 257 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி, இந்த ஆண்டு சுமார் 266 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து, முந்தைய ஆண்டை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசின் பருப்பு கையிருப்பு சுமார் 28 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
உள்நாட்டு எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விநியோகத்திற்கு, குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. சுத்திகரிப்பு உற்பத்தியை அதிகரித்தல், நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரையிலும் உயர்த்துதல் மற்றும் விநியோகத்திற்காகத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல சீரமைப்பு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே விநியோகம் மற்றும் தேவை ஆகிய இரு தரப்பிலும் செயல்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில், இந்தியக் கொடி தாங்கிய 'கிரீன் சான்வி' மற்றும் 'கிரீன் ஆஷா' என்ற இரண்டு எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் நீரணையைப் பாதுகாப்பாகக் கடந்தன. 46,650 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றிச் செல்லும் 'கிரீன் சான்வி' கப்பலில் 25 மாலுமிகள் உள்ளனர். அதேசமயம், 'கிரீன் ஆஷா' கப்பலில் 26 மாலுமிகள் உள்ளனர். அது சுமார் 15,405 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றிச் செல்கிறது. தற்போது, 433 இந்திய மாலுமிகளுடன் இந்தியக் கொடி தாங்கிய 16 கப்பல்கள் மேற்கு பாரசீக வளைகுடாப் பகுதியில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249431®=3&lang=1
(Release ID: 2249431)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2249501)
வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam