பிரதமர் அலுவலகம்
குஜராத், டெடியாபாடாவில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2025 7:24PM by PIB Chennai
ஜெய் ஜோஹார்! குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்கள் நரேஷ்பாய் படேல் மற்றும் ஜெயராம்பாய் காமித் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது பழைய சகாவான மன்சுக்பாய் வசவா அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் பகவான் பிர்சா முண்டாவின் குடும்ப உறுப்பினர்களே, இந்தத் திட்டத்தின் அங்கமாக நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்திருக்கும் எனது பழங்குடியின சகோதர சகோதரிகளே, மற்ற அனைத்து பிரமுகர்களே மற்றும் தற்போது பல தேசிய அளவிலான திட்டங்கள் நடைபெற்று வருவதால் தொழில்நுட்பத்தின் வாயிலாக எங்களுடன் இணைந்திருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களே...
உங்கள் அனைவருக்கும் பழங்குடியினர் கௌரவ தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கூடியிருக்கும் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பொதுவாக, நான் உங்களிடம் வரும்போது குஜராத்தி மொழியில் தான் பேச வேண்டும். ஆனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள் இந்த நிகழ்வில் இணைந்திருப்பதால், உங்கள் ஆசியுடனும் அனுமதியுடனும் நான் இப்போது இந்தி மொழியில் பேச வேண்டியுள்ளது.
நர்மதா அன்னையின் இந்தப் புனித பூமி இன்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்குச் சாட்சியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தான் நாம் சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை இங்கே கொண்டாடினோம். நமது ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் கொண்டாடும் வகையில் பாரதப் பெருவிழா தொடங்கியது. இன்று, பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளைக் குறிக்கும் இந்த பிரம்மாண்டமான விழாவின் மூலம் பாரத பெருவிழா அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் புனிதமான தருணத்தில் நான் பகவான் பிர்சா முண்டாவை வணங்குகிறேன்.
சுதந்திரப் போராட்டத்தின் போது கோவிந்த் குரு ஏற்றி வைத்த சுதந்திர நெருப்பால் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்தப் பழங்குடியினப் பகுதிகளும் ஈர்க்கப்பட்டன. இந்த மேடையில் இருந்து நான் கோவிந்த் குருவையும் வணங்குகிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு தேவ்மோக்ரா மாதா கோவிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மீண்டும் அன்னையின் பாதங்களில் நான் தலைவணங்குகிறேன்.
மக்கள் காசி விஸ்வநாத் பெருவழிப்பாதை, உஜ்ஜைன் மகாகால் பெருவழிப்பாதை, அயோத்தி ராமர் கோவில், கேதார்நாத் தாம் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய பல ஆன்மீக மற்றும் வரலாற்றுத் தலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், 2003-ம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது, பெண் குழந்தைகளுக்கான கல்வி தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக ரலியா பட்டன் பகுதிக்கு வந்தபோது, அன்னையின் பாதங்களில் வணங்கியது சிலருக்கே தெரியும். அந்த நேரத்தில் ஒரு சிறிய குடிசை போன்ற இடமாகவே அது இருந்தது. என் வாழ்க்கையில் நான் செய்த அனைத்து முக்கிய வளர்ச்சிப் பணிகளிலும், தேவ்மோக்ரா மாதா தளத்தை மேம்படுத்தியதே எனது தொடக்கப் பணி என்று பெருமையுடன் என்னால் சொல்ல முடியும். இன்று நான் அந்தத் தளத்திற்குச் சென்றபோது, லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் அன்னையின் மீது மிகுந்த பக்தியுடன் அங்கு வருவதைக் கண்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
நண்பர்களே,
இந்த டெடியாபாடா மற்றும் சாக்பாரா பகுதி நீண்ட காலமாக கபீர் தாசரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு பகுதியாகும். நான் புனித கபீர் பிறந்த பூமியான வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினர். எனவே, புனித கபீர் இயல்பாகவே என் வாழ்வில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். இந்த மேடையிலிருந்து அவரையும் நான் வணங்குகிறேன்.
நண்பர்களே,
இன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் பழங்குடியின மக்களின் நலன் சார்ந்த பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டும், சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. இங்கே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் மற்றும் ஆசிரமப் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டும், அவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் 'ஸ்ரீ கோவிந்த் குரு இருக்கை' (Govind Guru Chair) நிறுவப்பட்டுள்ளது. இவை தவிர மருத்துவம், சாலைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகள், சேவை முன்னெடுப்புகள் மற்றும் நலத்திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும், குறிப்பாக குஜராத் மற்றும் நாடு முழுவதும் உள்ள எனது பழங்குடியினக் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
2021-ம் ஆண்டில், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை பழங்குடியினர் பெருமித தினமாக நாம் கொண்டாடத் தொடங்கினோம். பழங்குடியினரின் பெருமை என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதத்தின் நனவு மனநிலையின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. தேசத்தின் கௌரவம், கண்ணியம் அல்லது தன்னாட்சி அதிகாரம் ஆபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம், நமது பழங்குடியின சமூகம் முன்னணியில் நின்றது. நமது சுதந்திரப் போராட்டமே இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும்.
பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த தில்கா மாஞ்சி, ராணி கைடின்லியூ, சிதோ-கான்ஹு, பைரவ் முர்மு, புத்து பகத் போன்ற எண்ணற்ற வீரர்களும் வீராங்கனைகளும், அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஊக்கமளிக்கும் ஆளுமைகளும் சுதந்திரச் சுடரை ஏந்திச் சென்றனர். அதேபோல் மத்தியப் பிரதேசத்தின் தந்தியா பில், சத்தீஸ்கரின் வீர் நாராயண் சிங், ஜார்க்கண்டின் தெலங்கா கரியா, அசாமின் ரூப்சந்த் கோன்வார் மற்றும் ஒடிசாவின் லட்சுமண் நாயக் உள்ளிட்ட பல போர்வீரர்கள் சுதந்திரத்திற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்தனர்; சோர்வின்றிப் போராடினர்; ஆங்கிலேயர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. பழங்குடியினச் சமூகம் எண்ணற்ற புரட்சிகளை முன்னெடுத்து, சுதந்திரத்திற்காகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தியுள்ளது.
நண்பர்களே,
இங்கு குஜராத்திலும் கூட, பழங்குடியின சமூகம் இது போன்ற பல துணிச்சலான தேசபக்தர்களை உருவாக்கியுள்ளது. 'பகத்' இயக்கத்தை வழிநடத்திய கோவிந்த் குரு; பஞ்ச்மகால் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நீண்ட போரை நடத்திய ராஜா ரூப்சிங் நாயக்; 'ஏகி' இயக்கத்தை முன்னெடுத்த மோதிலால் தேஜாவத் போன்றோரை நாம் அறிவோம். நீங்கள் பால் சிதாரியா பகுதிக்குச் சென்றால், அங்கு தியாகிகளான நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களுக்கான நினைவிடத்தைக் காணலாம். சபர்கந்தா மாவட்டத்தின் பால் சிதாரியாவில் ஜாலியன் வாலாபாக் போன்ற ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றது. மேலும், காந்தியடிகளின் கொள்கைகளை பழங்குடியின சமூகத்திற்குக் கொண்டு சென்ற நமது அண்ணார்ஸ்ரீபென் சவுத்ரி அவர்களும் இங்குதான் வாழ்ந்தார். நமது சுதந்திரப் போராட்டத்தின் பல அத்தியாயங்கள் பழங்குடியினரின் பெருமை மற்றும் வீரத்தால் நிரப்பப்பட்டுள்ளன.
சகோதர சகோதரிகளே,
சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினச் சமூகத்தின் பங்களிப்பை நம்மால் மறக்க முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்கான பெருமையை ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஆசையினால், எனது பழங்குடியின சகோதர சகோதரிகளின் தியாகம், தவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை புறக்கணிக்கப்பட்டன. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, நாட்டின் எந்தப் பகுதியிலும் பகவான் பிர்சா முண்டாவை யாரும் உண்மையாக நினைவுகூரவில்லை, அருகிலுள்ள கிராமங்களில் மட்டுமே அவரைப் பற்றிப் பேசப்பட்டது. நாங்கள் அந்த நிலையை மாற்றினோம். ஏனெனில், நமது சுதந்திரத்தை வெல்வதற்கு எனது பழங்குடியின சகோதர சகோதரிகள் நமக்கு எவ்வளவு பெரிய பரிசை வழங்கியிருக்கிறார்கள் என்பதை அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
இந்த பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நினைவூட்டவும், நாடு முழுவதும் பல பழங்குடியினர் அருங்காட்சியகங்களை மத்திய அரசு கட்டி வருகிறது. இங்கே குஜராத்தில், ராஜ்பிப்லாவிலேயே 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடியினர் அருங்காட்சியகம் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நான் சத்தீஸ்கருக்குச் சென்றிருந்தேன், அங்கு ஷஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடியினர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன். அதேபோல், ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலை, தற்போது அவருக்காகவும் அந்தக்கால சுதந்திரப் போராட்டத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அற்புதமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இன்று, ஸ்ரீ கோவிந்த் குரு இருக்கையானது 'பழங்குடியின மொழி மேம்பாட்டு மையமாக' நிறுவப்பட்டுள்ளது. இங்கு பில், காமித், வசவா, கராசியா, கொக்னி, சந்தால், ரத்வா, நாயக், டாப்லா, சவுத்ரி, கொக்னா, கும்பி, வார்லி, டோடியா மற்றும் பல பழங்குடியின சமூகங்களின் பேச்சுவழக்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவர்களின் கதைகளும் பாடல்களும் பாதுகாக்கப்படும். பழங்குடியின சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அறிவின் மிகப்பெரிய பொக்கிஷத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை முறையில் அறிவியல் பொதிந்துள்ளது, அவர்களின் கதைகளில் தத்துவம் மறைந்துள்ளது, மேலும் அவர்களின் மொழியானது சுற்றுச்சூழலைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்ரீ கோவிந்த் குரு இருக்கை, புதிய தலைமுறையினரை இந்த வளமான பாரம்பரியத்துடன் இணைக்க உதவும்.
நண்பர்களே,
பழங்குடியினர் கௌரவ தினத்தின் இந்தத் தருணம், நமது கோடிக்கணக்கான பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டை ஆறு தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ், பழங்குடியின சமூகங்களைத் தங்களின் போக்கிலேயே விட்டுவிட்டது. பழங்குடியினப் பகுதிகள் ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரப் பாதுகாப்பின்மை, கல்வியறிவு இன்மை மற்றும் எவ்வித போக்குவரத்து இணைப்பும் இல்லாத நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. இத்தகைய குறைபாடுகளே பழங்குடியினப் பகுதிகளின் அடையாளமாக மாறின. ஆனால், காங்கிரஸ் அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தன.
ஆனால் நண்பர்களே,
பழங்குடியின மக்களின் நலனே எப்போதும் பாஜகவின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. பழங்குடியின சமூகங்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வளர்ச்சியின் பலன்களை அவர்களுக்குக் கொண்டு செல்லவும் நாங்கள் எப்போதும் உறுதியுடன் முன்னேறி வருகிறோம். நாடு 1947-ல் சுதந்திரம் பெற்றிருக்கலாம், ஆனால் பழங்குடியின சமூகம் பழங்காலத்திலிருந்தே ராமபிரானுடன் தொடர்புடையது மற்றும் அவர்களின் வரலாறு மிகவும் பழமையானது. இருப்பினும், ஆறு தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்கள் இவ்வளவு பெரிய பழங்குடியின சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை உணரவே இல்லை.
நண்பர்களே,
நாட்டில் முதன்முறையாக அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராகி, பாஜக ஆட்சி அமைந்தபோதுதான் பழங்குடியினர் விவகாரங்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை அப்படி ஒரு அமைச்சகமே இருந்ததில்லை. ஆனால், அடல் ஜியின் ஆட்சிக்குப் பிறகு, காங்கிரஸிற்கு மீண்டும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தபோது, அவர்கள் இந்த அமைச்சகத்தைப் புறக்கணித்ததுடன் முற்றிலும் அலட்சியப்படுத்தினர். 2013-ஆம் ஆண்டில் பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் வெறும் சில ஆயிரம் கோடி ரூபாய்களை மட்டுமே ஒதுக்கியது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். வெறும் சில ஆயிரம் கோடிகள் தான்! ஒரு மாவட்டத்தில் பணிகளைச் செய்து முடிக்கவே ஆயிரம் கோடி ரூபாய் போதாது.
எங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, நாங்கள் இதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தோம். பழங்குடியினரின் நலன்களில் அக்கறை காட்டியதுடன், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் வரவு-செலவுத் திட்டத்தை விரிவுபடுத்தினோம். இன்று, இந்த பட்ஜெட்டை பல மடங்கு அதிகரிப்பதன் மூலம் பழங்குடியினப் பகுதிகளின் வளர்ச்சிக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது. கல்வி, சுகாதாரம் அல்லது போக்குவரத்து இணைப்பு என ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முன்னேறிச் செல்ல முயற்சி செய்து வருகிறோம்.
நண்பர்களே,
ஒரு காலத்தில் குஜராத்தின் பழங்குடியினப் பகுதிகளில் நிலைமை நன்றாக இல்லை. அம்பாஜியில் இருந்து உமர்காம் வரையிலான ஒட்டுமொத்தப் பழங்குடியினப் பகுதி முழுவதும் ஒரு அறிவியல் பாடப்பிரிவு பள்ளி கூட இல்லாத நிலை இருந்தது; ஆம், ஒரு அறிவியல் பள்ளி கூட இல்லை. டெடியாபாடா மற்றும் சாக்பாரா போன்ற பகுதிகளில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, டெடியாபாடாவில் இருந்தே பெண்கல்வித் திருவிழா திட்டத்தைத் தொடங்கியதை நான் நினைவு கூர்கிறேன். அந்த நேரத்தில், பல குழந்தைகள் என்னைச் சந்திப்பார்கள், அவர்களிடம் பெரிய கனவுகள் இருந்தன. சிலர் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் ஆக விரும்பினார்கள். அவர்களுக்குக் கல்வி மட்டுமே ஒரே வழி என்று நான் விளக்கினேன். அவர்களின் கனவுகளுக்குத் தடையாக இருக்கும் எவ்விதத் தடைகளையும் நாங்கள் நீக்குவோம் என்று நான் அவர்களுக்கு உறுதி அளித்தேன்.
நண்பர்களே,
மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைத்தோம். இதன் விளைவாக, நான் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு ஒரு அறிவியல் பாடப்பிரிவு பள்ளி கூட இல்லாத குஜராத்தின் பழங்குடியினப் பகுதியில், இன்று 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களில், பழங்குடியினப் பகுதிகளில் கலை மற்றும் வணிகக் கல்லூரிகளுடன் சேர்ந்து 24 அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. பாஜக அரசு பழங்குடியினக் குழந்தைகளுக்காக நூற்றுக்கணக்கான விடுதிகளைக் கட்டியுள்ளது. குஜராத்தில் இரண்டு பழங்குடியினர் பல்கலைக்கழகங்களையும் நாங்கள் நிறுவினோம். இத்தகைய முயற்சிகளால் இங்கு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு கனவுகளுடன் என்னைச் சந்தித்த சில குழந்தைகள், இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், சிலர் ஆராய்ச்சித் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
நண்பர்களே,
பழங்குடியினக் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம். கடந்த 5-6 ஆண்டுகளில் மட்டும், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்காக மத்திய அரசு 18,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தப் பள்ளிகளில் சேரும் பழங்குடியினக் குழந்தைகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
பழங்குடியின இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் பாரம்பரியம் மற்றும் மரபிலிருந்து தைரியம், கடின உழைப்பு மற்றும் திறமையைச் சொத்தாகப் பெற்றுள்ளனர். இன்று விளையாட்டு உலகில் உள்ள உதாரணங்கள் அனைவர் முன்னிலையிலும் உள்ளன. உலகம் முழுவதும் தேசியக் கொடியின் பெருமையை உயர்த்துவதில் பழங்குடியின மகன்களும் மகள்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்! சமீப காலம் வரை மேரி கோம், தோனக்கல் கோபி, டூட்டி சந்த் மற்றும் பைசுங் பூட்டியா போன்ற பெயர்களை நாம் அனைவரும் அறிந்திருந்தோம். இப்போது, ஒவ்வொரு முக்கியப் போட்டிகளிலும் பழங்குடியினப் பகுதிகளிலிருந்து புதிய வீரர்கள் உருவாகி வருகிறார்கள். சமீபத்தில், பாரதப் பெண்கள் கிரிக்கெட் அணி மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அந்த வெற்றியில் நமது பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மகளும் முக்கியப் பங்காற்றினார். பழங்குடியினப் பகுதிகளில் புதிய திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பழங்குடியினப் பகுதிகளில் விளையாட்டு வசதிகளும் விரிவாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
நமது மத்திய அரசு பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் நமது நர்மதா மாவட்டம். முன்பு இது பருச் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஓரளவு சூரத் மாவட்டத்தின் பகுதியாகவும் இருந்தது; தனியாக இல்லை. இந்த ஒட்டுமொத்தப் பிராந்தியமும் ஒரு காலத்தில் பின்தங்கிய பகுதியாகவே கருதப்பட்டது. நாங்கள் இதற்கு முன்னுரிமை அளித்தோம். இந்த மாவட்டத்தை 'வளர்ச்சி காண விழையும் மாவட்டமாக' மாற்றினோம். இன்று பல வளர்ச்சி அளவுகோல்களில் இது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கு வாழும் பழங்குடியின சமூகத்திற்கு இது பெரும் பயனை அளித்துள்ளது.
பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களுக்கும், பின்தங்கிய சமூகங்களுக்கும் நேரடியாகச் சென்று பல மத்திய அரசு திட்டங்களை நாங்கள் தொடங்கி வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இலவச மருத்துவச் சிகிச்சைக்கான 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் 2018-ல் தொடங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினப் பகுதியான ராஞ்சியில் இருந்துதான் நாங்கள் தொடங்கினோம். இன்று, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பழங்குடியின சகோதர சகோதரிகள் இத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். அதேபோல, 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' முன்முயற்சியையும் பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் சத்தீஸ்கரில் இருந்தே மத்திய அரசு தொடங்கியது. இதுவும் பழங்குடியின சமூகத்திற்குப் பெரும் நன்மைகளை வழங்கியுள்ளது.
நண்பர்களே,
பழங்குடியின சமூகங்களுக்குள்ளேயே, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குழுக்களுக்கு எங்களது மத்திய அரசு தனி முன்னுரிமை அளித்து வருகிறது. சுதந்திரம் கிடைத்து பல தசாப்தங்களாகியும் மின்சாரம், குடிநீர் வசதி, சாலைகள் அல்லது மருத்துவமனைகள் இல்லாத பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த, ஜார்க்கண்டின் குந்தி பகுதியில் இருந்து பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். நான் பகவான் பிர்சா முண்டாவின் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்தப் புனிதமான மண்ணை எனது நெற்றியில் பூசிக்கொண்டு, பழங்குடியின சமூகங்களின் நலனுக்காக நான் உறுதிமொழி ஏற்றேன். அந்த உறுதிப்பாட்டுடன் முன்னேறிச் செல்பவன் நான். பகவான் பிர்சா முண்டாவின் இல்லத்திற்குச் சென்ற முதல் பிரதமர் நான்தான். இன்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நான் ஆழ்ந்த உறவைப் பேணி வருகிறேன். 'பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் திட்டத்தின் கீழ் 24,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
'மண்ணின் மைந்தன் பழங்குடியின கிராம முன்னேற்ற இயக்கம்' (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan), பின்தங்கிய பழங்குடியின கிராமங்களின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வரலாற்றிலேயே முதன்முறையாகக் குழாய் மூலம் குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தொலை மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் கீழ், 'கிராம சபைகள்' வளர்ச்சியின் மையப்புள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து, விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த சமூகம் சார்ந்த திட்டங்கள் கிராமங்களுக்காகத் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காரியத்தைச் செய்ய நாம் உறுதி பூண்டால், மிகவும் சாத்தியமற்ற இலக்குகளும் சாத்தியமாகும் என்பதை இந்த இயக்கம் காட்டுகிறது.
நண்பர்களே,
பழங்குடியின சமூகங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மனதில் கொண்டு எங்களது மத்திய அரசு பணியாற்றி வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தகுதியான சிறு வன உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையை 20-லிருந்து கிட்டத்தட்ட 100-ஆக உயர்த்தியதோடு, அதற்கான விலையையும் அதிகரித்துள்ளோம். எங்களது மத்திய அரசு ‘ஸ்ரீ அன்னா’ (சிறுதானியங்கள்) உற்பத்தியை வலுவாக ஊக்குவித்து வருகிறது, இது பழங்குடியினப் பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்குப் பயனளிக்கிறது. குஜராத்தில் உங்களுக்காக 'வனபந்து கல்யாண் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இது உங்களுக்குப் புதிய பொருளாதார வலிமையைத் தந்தது. நான் இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினப் பகுதிகளில் இருந்து மக்கள் பல மாதங்களாக எனக்கு நன்றி தெரிவிக்கவும், வாழ்த்தவும் வந்ததை நான் நினைவு கூர்கிறேன். இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திட்டமாகும். பூபேந்திரபாய் அவர்கள் இந்த 'வனபந்து கல்யாண் திட்டத்தை விரிவுபடுத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, இப்போது அது புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட திட்டங்களுடன் 'பழங்குடியினர் நலத் திட்டம்' என்ற பெயரில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
சகோதர சகோதரிகளே,
'சிக்கிள் செல்' இரத்த சோகை நோய் நமது பழங்குடியின சமூகங்களுக்குள் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதை எதிர்த்துப் போராட, பழங்குடியினப் பகுதிகளில் உள்ள மருந்தகங்கள், மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிள் செல் நோயைச் சமாளிக்க தேசிய அளவிலான ஒரு இயக்கமும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியின் கீழ், நாடு முழுவதும் ஏற்கனவே 6 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நண்பர்களே,
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கீழ், உள்ளூர் மொழிகளிலேயே கல்வி கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முன்பு, மொழித் தடையால் மட்டுமே பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தனர். இப்போது, தங்களின் சொந்த உள்ளூர் மொழிகளிலேயே படிப்பதன் மூலம், அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தேசத்தின் வளர்ச்சிக்கும் மென்மேலும் பங்களித்து வருகின்றனர்.
நண்பர்களே,
குஜராத்தில் உள்ள நமது பழங்குடியின சமூகம் கலைத்துறையில் ஒரு அசாதாரணமான செல்வத்தைக் கொண்டுள்ளது. அவர்களின் ஓவியங்களும் கலைப்படைப்புகளும் தனித்துவமானவை. இங்கே ஒரு மகள் ஒரு ஓவியத்துடன் அமர்ந்திருக்கிறாள். எனக்காகத்தான் அதை அவள் கொண்டு வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. எஸ்பிஜி வீரர்கள் தயவுசெய்து அந்த மகளிடமிருந்து அதை வாங்கிக்கொள்ளுங்கள். அதில் சில 'வார்லி' ஓவியங்களை என்னால் பார்க்க முடிகிறது. நன்றி குழந்தையே! அதில் உனது முகவரி இருந்தால், நான் உனக்கு ஒரு கடிதம் எழுதுவேன். மிக்க நன்றி. கலை வெளிப்பாடு என்பது இங்கு இயல்பாகவே உள்ளது. நமது பரேஷ்பாய் ரத்வா போன்ற கலைஞர்கள் இந்த கலை வடிவங்களை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். எங்களது மத்திய அரசு பரேஷ்பாய் ரத்வாவிற்கு ‘பத்ம’ விருது வழங்கி கௌரவித்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கிறது.
நண்பர்களே,
எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஜனநாயகத்தில் முறையான பங்கேற்பு சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் நாட்டின் உயரிய பதவிகளை அடைய வேண்டும் என்பதும், தேசத்தை வழிநடத்த வேண்டும் என்பதும் நமது இலக்காகும். பாருங்கள், இன்று நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியினப் பெண்மணி. அதேபோல், பழங்குடியினச் சமூகத்தின் திறமையான உறுப்பினர்களை உயரிய பதவிகளுக்குக் கொண்டு வர பாஜக மற்றும் தேசிய ஜனநயாக கூட்டணி எப்போதும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இன்று, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர், நமது பழங்குடியின சகோதரர் திரு. விஷ்ணு தியோ சாய் அம்மாநிலத்தை உருமாற்றி வருகிறார். திரு. மோகன் சரண் மாஜி, ஜகந்நாதப் பெருமானின் அருளுடன் ஒடிசாவின் வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தில் நமது பழங்குடியின சகோதரர் பெமா காண்டு முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நாகாலாந்தில் நமது பழங்குடியின சகோதரர் நெய்பியு ரியோவும் பணியாற்றி வருகிறார்.
பல மாநிலங்களில் நாங்கள் பழங்குடியின முதலமைச்சர்களை நியமித்துள்ளோம். பல மாநில சட்டப்பேரவைகளில் எங்களது கட்சி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களைப் பேரவைத் தலைவர்களாக நியமித்துள்ளது. நமது குஜராத்தைச் சேர்ந்த மங்குபாய் படேல் தற்போது மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார். எங்களது மத்திய அரசில், சர்பானந்த சோனோவால் பழங்குடியினச் சமூகத்தில் இருந்து வந்து ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தையும் கையாண்டு வருகிறார். அவர் ஒரு காலத்தில் அசாம் மாநில முதலமைச்சராகப் பணியாற்றியவர்.
நண்பர்களே,
இந்தத் தலைவர்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவையும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஈடுஇணையற்றவை மற்றும் முன்னெப்போதும் இல்லாதவை.
நண்பர்களே,
இன்று நமது நாடு “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் வலிமையைக் கொண்டுள்ளது. இந்த மந்திரம்தான் சமீப ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இந்த மந்திரம் நமது தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது. மேலும், பல தசாப்தங்களாகப் புறக்கணிக்கப்பட்ட பழங்குடியினச் சமூகங்களை இந்த மந்திரம் பிரதான நீரோட்டத்துடன் இணைத்துள்ளது. இது அவர்களை இணைப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் வழிநடத்தும் திறனை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
எனவே, பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளான இந்த புனிதமான தருணத்தில், “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை அனைவரின் முயற்சி” என்ற மந்திரத்தை வலுப்படுத்த நாம் உறுதி ஏற்க வேண்டும். வளர்ச்சியில் யாரும் பின்தங்கிவிடக் கூடாது, யாரும் அதிலிருந்து விலக்கப்படக் கூடாது. இதுவே 'மண்ணின் மைந்தன் ' (பூமியின் தந்தை) பிர்சா முண்டாவின் பாதங்களில் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற கனவை நனவாக்குவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இந்த உறுதியுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பழங்குடியினர் கௌரவ தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து குடிமக்களிடமும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், பழங்குடியினர் கௌரவ தினம் என்பது நமது மண்ணின் நறுமணத்தைச் சுமந்து நிற்கிறது. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து வரும் நமது பழங்குடியின சமூகங்களின் மரபுகளை இது தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களின் வலிமை, அவர்களின் தைரியம் மற்றும் வரவிருக்கும் காலத்திற்கான அவர்களின் அபிலாஷைகளைச் சுமந்து செல்கிறது.
எனவே, நவம்பர் 15-ஆம் தேதியை, அதாவது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மிகுந்த மரியாதையுடன் பழங்குடியினர் கௌரவ தினமாக நாம் எப்போதும் கொண்டாட வேண்டும். நாம் புதிய வலிமையுடனும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் முன்னேற வேண்டும்; பாரதத்தின் வேர்களுடன் இணைந்தே புதிய உயரங்களை எட்ட வேண்டும்.
இந்த நம்பிக்கையுடன், மிக்க நன்றி!
பாரதத் தாய்க்கு வெற்றி!
பாரதத் தாய்க்கு வெற்றி!
பாரதத் தாய்க்கு வெற்றி!
நமது 'வந்தே மாதரம்' பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது பாரதத்தின் மகத்தான உத்வேகத்தையும், அதன் நீண்ட பயணத்தையும், நீண்ட போராட்டத்தையும் பிரதிபலிக்கிறது. அனைத்து வகையிலும், 'வந்தே மாதரம்' ஒரு புனித மந்திரமாக மாறியுள்ளது. அதன் 150-வது ஆண்டை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
மிக்க நன்றி.
(Release ID :2190377)
AD/VK/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241890)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam