பிரதமர் அலுவலகம்
"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 1:01PM by PIB Chennai
வணக்கம்!
இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு என்பது ஒரு வலுவான பாரம்பரியமாக மாறியுள்ளது. பெரும்பாலும், பட்ஜெட் என்பது வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது; சில நேரங்களில் பங்குச் சந்தையின் நகர்வுகள் குறித்தும், சில நேரங்களில் வருமான வரி முன்மொழிவுகள் குறித்தும் விவாதங்கள் மையமாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது குறுகிய கால வர்த்தக ஆவணம் அல்ல; அது ஒரு கொள்கைக்கான வழிகாட்டி. எனவே, பட்ஜெட்டின் செயல்திறனை வலுவான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் , நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அது அமைய வேண்டும். பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பட்ஜெட்டையும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவோ பார்க்கக்கூடாது.
தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒவ்வொரு பட்ஜெட்டும் ஒரு பெரிய இலக்கை நோக்கி நகர்வதற்கான ஒரு கட்டமாகும். 2047-ஆம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை எட்டுவதே நமக்கு முன்னால் உள்ள பெரிய இலக்காகும். ஒவ்வொரு சீர்திருத்தமும், ஒவ்வொரு நிதி ஒதுக்கீடும், ஒவ்வொரு மாற்றமும் இந்த நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். எனவேதான், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த இணையவழிக் கருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இணையவழிக் கருத்தரங்குகள் வெறும் கருத்துப் பரிமாற்றமாக மட்டும் நின்றுவிடாமல், ஒரு பயனுள்ள பயிற்சியாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உங்கள் அனுபவங்கள் மற்றும் நடைமுறைச் சவால்களின் அடிப்படையிலான ஆலோசனைகள், பொருளாதார உத்திகளை மேலும் மேம்படுத்துவதற்கும் தீர்வுகளைக் காண்பதற்கும் நிச்சயமாக உதவும். தொழில்துறையினர், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து சிந்திக்கும்போது, திட்டங்களைச் செயல்படுத்துவது சிறப்பாக அமையும் மற்றும் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கும். இந்த இணையவழி கருத்தரங்குத் தொடரின் பின்னால் உள்ள நோக்கம் இதுதான்.
நண்பர்களே,
21-ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. உங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த மற்றும் முக்கியமான ஒரு காலகட்டம் கடந்துவிட்டது என்பதை உணரலாம். இப்போது நாம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நமது பொருளாதாரம் அதிவேகமாக முன்னேறி வரும் சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அசாதாரணமான மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல; உறுதியான நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவே இந்த மீள்திறன் ஆகும். நாங்கள் நடைமுறைகளை எளிமையாக்கினோம், தொழில் தொடங்குவதை மேம்படுத்தினோம், தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தை விரிவுபடுத்தினோம், நிறுவனங்களை வலுப்படுத்தினோம். இன்றும் கூட இந்த நாடு 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தைத் தக்கவைக்க, நாம் கொள்கை நோக்கத்தில் மட்டுமல்லாமல், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சீர்திருத்தங்கள் என்பது வெறும் அறிவிப்புகளை வைத்து மதிப்பிடப்படக் கூடாது; அவை தரைமட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும். ஏஐ, பிளாக்செயின் மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் பொறுப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும். அத்துடன், குறை தீர்க்கும் அமைப்புகள் மூலம் சீர்திருத்தங்களின் தாக்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மீது எங்களது கவனம் அதிகமாக இருந்தது. நெடுஞ்சாலைகள், இரயில்வே, துறைமுகங்கள், டிஜிட்டல் நெட்வொர்க், மின் அமைப்புகள் போன்ற வலுவான சொத்துக்களை உருவாக்குவதன் மூலமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகும் என்ற உறுதியான முடிவை நாங்கள் எடுத்தோம். இவை வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு உற்பத்தித் திறனை தொடர்ந்து உருவாக்கும். இதற்காகவே, பொது மூலதனச் செலவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, பட்ஜெட்டில் பொது மூலதனச் செலவிற்காக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது; நடப்பு பட்ஜெட்டில் இது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான அரசு முதலீடு என்பது தனியார் துறைக்கான ஒரு தெளிவான செய்தியாகும்.
நண்பர்களே,
தொழில்துறையும் நிதி நிறுவனங்களும் புதிய ஆற்றலுடன் முன்வர வேண்டிய தருணம் இது. உள்கட்டமைப்பில் அதிகப் பங்கேற்பையும், நிதி மாதிரிகளில் கூடுதல் கண்டுபிடிப்புகளையும், வளர்ந்து வரும் துறைகளில் வலுவான ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தத் திசையில் எனக்கு இன்னும் ஒரு யோசனை உள்ளது: திட்ட அனுமதி நடைமுறைகளையும் மற்றும் அவற்றின் தர மதிப்பீட்டையும் நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். செலவு-பயன் பகுப்பாய்வு மற்றும் வாழ்நாள் செலவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், காலதாமதங்களையும் வீணாவதையும் நாம் தடுத்தாக வேண்டும்.
நண்பர்களே,
அந்நிய முதலீட்டிற்கான கட்டமைப்பை நாங்கள் மேலும் எளிமைப்படுத்தி வருகிறோம். இந்த அமைப்பை முன்னரே கணிக்கக்கூடியதாகவும் , முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவதே எங்களது முயற்சி. நீண்ட கால நிதியுதவியை மேம்படுத்த, கடன் பத்திரச் சந்தைகளை மேலும் துடிப்பானதாக மாற்றும் திசையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடன் பத்திரங்களை வாங்கும் மற்றும் விற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
கடன் பத்திரச் சந்தை சீர்திருத்தங்களை நீண்ட கால வளர்ச்சியின் உந்துசக்தியாக நாம் பார்க்க வேண்டும்; முன்னரே கணிக்கக்கூடிய தன்மை, பணப்புழக்கத்தை ஆழப்படுத்துதல், புதிய கருவிகளைக் கொண்டு வருதல் மற்றும் இடர்களை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மால் நிலையான அந்நிய மூலதனத்தை ஈர்க்க முடியும். உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொண்டு, அந்நிய முதலீட்டுக் கட்டமைப்பு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளை வலுப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆலோசனைகளை நீங்கள் வழங்குவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே,
யார் வேண்டுமானாலும் ஒரு கொள்கைக் கட்டமைப்பைத் தயார் செய்யலாம், ஆனால் அதன் வெற்றி உங்கள் அனைவரையும் பொறுத்தே அமையும். தொழில்துறை உலகம் புதிய முதலீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் முன்வர வேண்டும். நிதி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைத் தயாரிப்பதற்கும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் உதவ வேண்டும். அரசாங்கம், தொழில்துறை மற்றும் அறிவுசார் கூட்டாளர்கள் இணைந்து செயல்படும்போதுதான், சீர்திருத்தங்கள் முடிவுகளாக மாறும். அப்போதுதான் அறிவிப்புகள் தரைமட்டத்தில் சாதனைகளாக உருவெடுக்கும். நாம் ஒரு தெளிவான 'சீர்திருத்தக் கூட்டாண்மை சாசனத்தை' உருவாக்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இது அரசாங்கம், தொழில்துறை, நிதி நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையின் பகிரப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் இந்தச் சாசனம் மிக முக்கியமான ஆவணமாக அமையும்.
நண்பர்களே,
அனைத்து பங்குதாரர்கள், நிதி நிறுவனங்கள், சந்தைகள், தொழில்துறையினர், வல்லுநர்கள் மற்றும் புத்தொழில் முனைவோருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் - இந்த பட்ஜெட் வழங்கியுள்ள புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்; பட்ஜெட்டின் மூலம் திறக்கப்பட்ட புதிய வாய்ப்புகளுடன் உங்களை ஆழமாக இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பங்கேற்பால், திட்டங்களைச் செயல்படுத்துவது இன்னும் சிறப்பாக அமையும்; உங்கள் கருத்துக்களும் ஒத்துழைப்பும் சிறந்த முடிவுகளைத் தரும். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து சீர்திருத்தங்களை மேற்கொள்வோம், வளர்ச்சி அடைவோம், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை விரைவில் நனவாக்கும் வகையிலான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம்.
இன்று நீங்கள் அனைவரும் ஆழமாகச் சிந்திப்பீர்கள் என்றும், நடைமுறைகளை எளிமையாக்குவதில் உங்கள் கவனம் இருக்கும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். நாம் ஒரு தவறைச் செய்துவிடக்கூடாது - பட்ஜெட்டுக்கு முன்பே நாம் உங்களுடன் கலந்தாலோசனைகளை நடத்துகிறோம், அதன் நோக்கம் வேறு; பட்ஜெட்டை இன்னும் சிறப்பாக்குவதே அதன் நோக்கம். ஆனால், இப்போது பட்ஜெட் தயாராகிவிட்டது. இது பட்ஜெட்டைப் பற்றி விவாதிப்பதற்கான நிகழ்ச்சி அல்ல; பட்ஜெட்டில் உள்ளவற்றை எப்படி மிக விரைவாக, எளிமையான வழியில், அனைவருக்கும் பயன் கிடைக்கும் வகையிலும், அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடனும் தரைமட்டத்திற்குக் கொண்டு வருவது என்பதுதான் இன்றைய விவாதத்தின் நோக்கம். இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் விவாதித்துச் சிந்தித்தால், இந்த இணையவழிக் கருத்தரங்குகள் உண்மையிலேயே ஒரு துடிப்பான பொருளாதாரத்திற்கான கதவைத் திறக்கும்.
மிக்க நன்றி!
வணக்கம்!
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233430®=3&lang=2
செய்தி வெளியீட்டு எண்: 2231430
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237242)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Assamese
,
हिन्दी
,
Manipuri
,
Telugu
,
English
,
Marathi
,
Malayalam